தொழில்நுட்பமும் தொன்மையான மருத்துவமான ஆயுர்வேதமும் இணைந்தால்...

0

குர்கிராமை மையமாகக் கொண்டு இயங்கும் ஆரோக்கியம் தொடர்புடைய தொழில் முனைவு நிறுவனமான ’நிரோக்ஸ்ட்ரீட்’ மரியுவானா எனப்படும் கஞ்சாவை வலி நிவாரணியாக    எவ்வாறு உபயோகிப்பது என்பதை ஆராய உள்ளனர்.

ஸ்டார்ட்- அப் பற்றி :

பெயர்NirogStreet

நிறுவனர் : ராம் எம் குமார், ஆராதனா ராய், ஸ்ரெய் ஜெயின்

துவங்கிய வருடம் : 2016

தலைமையகம் : குருகிராம்

தீர்க்கும் சிக்கல் : ஆயுர்வேத மருத்துவர்களுக்கான ஒரு சந்தை. ஆயுர்வேத மருத்துவர்களை பற்றி மக்களிடம் நிலவும் நம்பிக்கையின்மையை போக்குவதற்காக தொழில்நுட்பத்தை மையமாகk கொண்டு கற்பித்தல், ஆதாரத்தை மையமாகk  கொண்ட மருத்துவம் மற்றும் ஆய்வுகள்.

துறை : சுகாதாரம்

முதலீடு : சுய முதலீடு

ராம்குமார்
ராம்குமார்

கேனாபிஸ், மரியுவான, ஹெம்ப். இவற்றை படிக்கையில் ஒன்று சிரிப்பீர்கள் அல்லது ஆச்சிரியத்தில் மூழ்குவீர்கள். ஆனால் தற்போது உங்கள் கவனம் சிந்தாமல் சிதறாமல் இங்கு உள்ளது. அதுவே என் தேவை.

CISR இல் உள்ள விஞ்ஞானிகளுக்கு அரசு கஞ்சாவை மருத்துவம் தொடர்பான ஆய்வுகளுக்காக பயிர் செய்யலாம் என்று உரிமை அளித்த பிறகு அந்தத் துறையில் அதிகப்படியான நிகழ்வுகள் நடந்துள்ளன.

NirogStreet தற்போது CISR மற்றும் இந்தியன் இன்ஸ்டிடுட் ஆப் இன்டகரேட்டட் மெடிசினோடு இணைந்து கஞ்சாவின் வலிநிவாரணம் கொடுக்கும் குணநலன்கள் குறித்து ஆராய உள்ளனர். சர்க்கரை நோயின் தாக்கத்தினால் உருவாகும் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் ஊட்டச்சத்து மருந்துகளை தயாரிப்பது இவர்கள் நோக்கம். இதற்காக பண்டைய ஆயுர்வேத சுவடிகளில் கூறியுள்ள தாவரங்களை மையமாகக் கொண்ட ஆயுர்வேத மருந்துகளை கொண்டு ஆராய உள்ளனர்.

இந்த தொழில்முனைவு சர்க்கரை, அல்சைமர்ஸ், கல்லீரல் தொடர்பான நோய்கள் ஆகியவற்றுக்கான மருந்துகளில் பணியாற்ற உள்ளனர். நிறுவனர் ராம் குமார், இந்த ஆய்வுகளின் முடிவுகள் அவர்கள் தளம் மூலமாகவும் தொலைபேசி செயலி மூலமாகவும் அவர்களின் ஆயுர்வேத மருத்துவர்களிடம் பகிர்ந்து கொள்ளப்படும் என்கிறார்.

CISR மும்பையை மையமாக கொண்டு இயங்கும் பாம்பே ஹெம்ப் கம்பெனியோடு இணைந்து 2 வருடங்களாக 100 வகைகளுக்கும் அதிகமான கான்னபிஸ்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து வைத்துள்ளனர். பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி நிறுவனமும் ஹரித்வாரில் உள்ள தங்களின் வளர்ச்சி மையத்தில் தாவரங்களில் இருந்து பெறப்படும் மருந்துகளை ஆய்வு செய்வதாக அறிவித்துள்ளது.

ஆயுர்வேதத்தை மைய்யமாக்குதல் :

2016 நிறுவப்பட்ட நிரோக்ஸ்ட்ரீட் ஆயுர்வேத மருத்துவத்தை முதன்மை மருத்துவமாக மாற்றி மருத்துவ உலகின் நம்பிக்கையை, ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் பெற்றுத்தர முயன்று வருகின்றது. தற்போது CISR மற்றும் ஐஐஐஎம் உடன் இணைந்து ஆதாரம் பொருந்திய மருத்துவத்தை ஆயுர்வேதத்திற்கு கொண்டுவர முயலுகின்றனர்.

இன்றைய நவீன மருத்துவத்தில், மேற்கத்திய மருத்துவத்திற்கு சரியான சந்தை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம், புதுமைகளை புகுத்துதல், ஆதாரங்களை கொண்டு மருத்துவம் பார்த்தல் போன்றவற்றால் உலகளாவிய ஒப்புதலை பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவின் 1000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பாதுகாப்பான, எளிதான ஆயுர்வேத மருத்துவம் இன்றும் முதன்மை மருத்துவமாக காத்துக்கொண்டிருகின்றது.

தொழில்நுட்பத்தின் உதவியால், நிரோக்ஸ்ட்ரீட், ஆயுஷ் துறையோடும், ஆய்வு நிறுவனங்களோடும், கட்டுப்பாட்டாளர்களோடும் இணைந்து பணியாற்றி ஆயுர்வேத மருத்துவர்களின் நலனிற்காக பாடுபட்டு வருகின்றது. மருத்துவர்களும் எங்களது தளத்தில் ஆய்வு அறிக்கைகளை பதிவேற்றி வருகின்றனர். இதன் மூலம் நவீன மருத்துவத்துக்கு நிகரான ஆதாரம் பொருந்திய மருத்துவமாக ஆயுவேதத்தை மாற்ற இயலும்.

வலி :

இப்போது வரைக்கும் 500,000 பதிவு பெற்ற ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 21,000 நபர்கள் , ஆயுர்வேதம் படித்து முடித்து வெளிவருகின்றனர். இருந்தாலும் கல்வியின் தரம் கேள்விக்குறியதாக உள்ளது என்கிறார் ராம்.

35 வயதான ராம்குமாரின் உடல் நிலை இரண்டு மாதம் சரி இல்லாமல் போக அவர் படுத்த படுக்கையாகிப் போனார். இந்த நிகழ்வே அவரை NirogStreet துவங்க தூண்டியது. 

”நான் அதிகமான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் உண்டு வந்தேன். ஆனால் ஒரு நாள் ஆயுர்வேதம் குறித்து அறிந்து அவரிடம் சென்றேன். இன்று உங்களோடு நின்று கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றேன், என்கிறார் அவர்.”

மாபெரும் தொலைதொடர்பு நிறுவனங்களையும், ஊடக நிறுவனங்களையும் நிறுவிய அனுபவம் வாயிந்தவரான ராம்குமார், 2 வருடங்களாக சுய முதலீட்டில் நிரோக் ஸ்ட்ரீட்டினை நடத்தி வருகின்றார். தற்போது ஜப்பானிய முதலீட்டாலர்களோடு முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

வணிகமாதிரி : 

ஆயுர்வேத மருந்துகளுக்கான சந்தை 3$ பில்லியன் மதிப்புள்ளது. மேலும் 15$ பில்லியன் வளர அடுத்த 10 வருடங்களில் வாய்ப்புள்ளது. சொல்லபோனால் ஆயுர்வேதம் தான் உண்மையான ’மேக் இன் இந்தியா’வாகும். காரணம் இதில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் உள்ளுநாட்டில் கிடைப்பவை என்கிறார் ராம் குமார்.

தற்போது மருத்துவர்கள் அளிக்கும் சந்தா மூலமாகவும், டிஜிட்டல் வணிகம் மூலமாகவும் இந்த தொழில் முனைவு இயங்கி வருகின்றது.

இந்தத் துறை பற்றி பேசும் பொழுது, ஆயுர்வேத சூழலும், இதற்கான சந்தையும் பல துண்டுகளாக பிரிந்துள்ளன. மருத்துவர்களுக்கு சரியான பாடம் கற்கும் சூழல் இல்லை. ஆய்வு செய்யவும் வாய்ப்புகள் இல்லை. மருந்துகள் பக்கம் சென்றால் ஒருங்கினைக்கப்படாத, தரம் குறைந்ததாக உள்ளது.

“எங்களது வணிக மாதிரி மருத்துவர்கள் அளிக்கும் சந்தாவை பொறுத்து இயங்குகிறது. ஆய்வு எங்கள் முக்கிய குறிக்கோளாக உள்ளது. நவீன மருத்துவம் போல் ஆயுர்வேதத்திற்கும் முன்னிலை மருத்துவ அந்தஸ்து வாங்கித்தர வேண்டும் என்பது எங்கள் அவா.”

இது துவக்கமே :

தற்போது நிரோக்ஸ்ட்ரீட் 15 நபர்கள் கொண்ட குழுவோடு இயங்குகிறது. எங்களுக்கு மிகப்பெரிய சவால் எங்களது போட்டியாளர்கள் அல்ல என்கிறார் ராம் குமார். எங்களது மிகப்பெரிய சவால், இன்றைய தொழில்நுட்பம், பல ஆண்டுகளாக மருத்துவம் புரிந்து வரும் மருத்துவர்களுக்கு புதிதாக உள்ளது. எனவே முதலில் அவர்களை தொழில்நுட்பத்தை உபயோகிக்குமாறு செய்வது கடினமாக இருந்தது. ஆனால் கடின உழைப்பின் மூலம் அதனை நாங்கள் சாத்தியமாக்கியுள்ளோம். ஒரு சமூகத்தை உருவாகுவது கடினம் ஆனால் அவ்வாறு உருவாக்கிவிட்ட பிறகு திரும்பி பார்க்க அவசியம் இல்லை,” என்கிறார் அவர்.

தொழில்முனையும் அனுபவம் பல முன்னேற்றங்களை ராம்குமார் வாழ்வில் கொண்டுவந்திருந்தாலும், தொழில்நுட்பத்தையும் தொன்மையான மருத்துவத்தையும் இணைக்கும் செயல் தரும் ஊக்கத்திற்கு அது ஈடாகாது.

இணையதளம்

கட்டுரையாளர் : தீப்தி நாயர் | தமிழில் : கெளதம் தவமணி