இந்தியாவின் ‘ஃபெவிகால் மேன்’- பியூனில் இருந்து $1.36 பில்லியன் மதிப்பு நிறுவனத்தை கட்டமைத்த பால்வந்த்! 

0

இந்திய சுதந்திரத்துக்கும் பின் உருவான முதல் தலைமுறை தொழில்முனைவர் பால்வந்த் பரேக். ’ஃபெவிகால் மேன்’ என்று அழைக்கப்படும் பால்வந்த், ’பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற நிறுவனத்தை 1959-ல் தொடங்கினார். இந்திய பசைத்துறையில் முகவும் பிரபலமான பெயராகிப் போனது இவரின் நிறுவனம். ஆனால் அவர் ஆரம்பக்கட்டத்தில் நிறுவனத்தை தொடங்கியது முதல் பல சவால்களையும், பிரச்சனைகளையும் தாண்டியே வந்துள்ளார். 

குஜராத் பாவ்நகர் மாவட்டம் மஹுவா எனும் சிறிய ஊரில் பிறந்தவர் பால்வந்த். பின் மும்பை சென்று அங்கே சட்டம் பயின்றார். படிப்பை பாதியில் விட்டு, மகாத்மா காந்தி நடத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து இந்திய சுதந்திரத்துக்காக தீவிரமாக போராடினார். பின்னர் மீண்டும் அடுத்த ஆண்டு மும்பை திரும்பி தன் படிப்பை முடித்தார். 

பட உதவி: ஃபோர்ப்ஸ்
பட உதவி: ஃபோர்ப்ஸ்

பால்வந்த் சட்ட டிகிரி முடித்தும், அதை தொடர விருப்பப்படவில்லை. சட்டத்துறை பொய்கள்  நிறைந்தவை என்பதால் அவரால் அதை செய்யமுடியவில்லை. மும்பையில் வேலை இல்லாமல் வாழ முடியாத சூழலில், ஒரு அச்சகத்தில் சிலகாலம் பணியில் இருந்தார். பின் மரக் கட்டைகள் வணிகம் செய்யும் நிறுவனத்தில் பியூனாக சேர்ந்தார். தன் மனைவியுடன் மரக்கிடங்கிலேயே தங்கினார் பால்வந்த். 

தொழில் புரிவதில் ஆர்வம் கொண்டிருந்த அவரது திறனைக் கண்டு சைக்கிள், கொட்டை வகைகள், பேப்பர் மை ஆகியவற்றை மேல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிறுவனம் தொடங்க பால்வந்துக்கு ஒருவர் முதலீடு செய்தார். அவரின் தம்பி சுஷில் பரேகும் தொழிலில் சேர்ந்து, பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் என்று ஒரு பேக்டரியை தொடங்கினார். அதில் ஃபெவிகால் என்ற ஒரே ஒரு தயாரிப்பை செய்தனர். 

பல ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும், பசைத்துறையில் ஃபெவிகால் என்ற பிராண்டை முறியடிக்க யாரும் இல்லை. மேலும் பிடிலைட்டின் மற்ற தயாரிப்புகளான ஃபெவிகிவிக், எம்-சீல் ஆகியவையும் சந்தையில் வெற்றி கண்டது. மொத்தத்தில் இந்த தயாரிப்புகள் மட்டுமே இந்திய சந்தையில் 70 சதவீதம் பங்குகளை வகிக்கிறது, 

2006-ம் ஆண்டு முதல் இவர்களின் பிராண்ட் சர்வதேச சந்தையில் விரிவாக்கம் செய்து, அமெரிக்கா, தாய்லாந்து, துபாய், எகிப்து மற்றும் பங்களாதேஷில் கால்பதித்தது. சிங்கபூரில் இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி மையத்தையும் நிறுவியது. தெளிவான விளம்பரங்கள் மூலம் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் தலைச்சிறந்த பிராண்டாகவும், மக்களின் மனம் கவர்ந்த தயாரிப்பாகவும் ஆனது. 

சமூக சேவகரும் ஆன பால்வந்த், இரண்டு பள்ளிகள், ஒரு கல்லூரி மற்றும் மஹுவாவில் ஒரு மருத்துவமனையை நிறுவியுள்ளார். ‘தர்ஷக் பவுண்டேஷன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் குஜராத்தில் நிறுவியுள்ளார். பாவ்நகர் அறிவியல் நகர பிராஜக்டுக்கு 2 கோடி ரூபாய் நண்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் ‘பால்வந்த் ப்ரேக் ஜென்ரல் செமாண்டிக்ஸ் மற்றும் ஹூமன் சயின்சஸ்’ மையத்தை நிறுவியுள்ளார். 

2013-ல் உயிரிழந்த பால்வந்துக்கு அப்போது வயது 88. 2012-ல் அக்டோபர் மாதம் அவர் ஃபோர்ப்ஸ் ஆசிய இந்திய பணக்காரர் பட்டியலில் 45-வது இடத்தில் இருந்தார். அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு 1.36 பில்லியன் டாலர்கள் ஆகும்.

கட்டுரை: Think Change India