ஷ்பெஷல் ஒலிம்பிக்கில் 173 பதக்கங்கள் பெற்ற இந்திய அணியின் வெளிவராத சாதனை...

1

அண்மையில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் விளையாட்டிற்கு சென்ற இந்திய அணி குறித்தும், அதிலுள்ள வீரர் வீராங்கனைகள் பற்றியும், வெற்றிபெற்ற இரண்டு பதக்கங்கள் பற்றியும் தினமும் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஷ்பெஷல் ஒலிம்பிக் உலக போட்டி குறித்த எந்த செய்தியும் வந்ததாக தெரியவில்லை. ஷ்பெஷல் ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இந்திய அணி அற்புதமாக விளையாடி பல பதக்கங்களை வென்றுள்ளது என்று யாரும் அறியவில்லை என்பது வருத்தமான செய்தி. 

பலவிதமான மனநல குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக நடத்தப்படுவதே ’ஷ்பெஷல் ஒலிம்பிக் கேம்ஸ்’. 177 நாடுகளை சேர்ந்த 6500 வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியா சார்பிலும் மனநல குறைபாடு உள்ள விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு 173 பதக்கங்கள் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த இப்போட்டியின் பட்டியிலில் இந்தியா 3-வது இடத்தில் இடம்பெற்று நம் நாட்டின் பெருமையை நிலைநாட்டியது. 

47 தங்க பதக்கங்கள் 54 வெள்ளி மற்றும் 72 வெண்கல பதக்கங்கள் வென்றது இந்தியா. தடகள போட்டிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் அதில் மட்டும் 17 தங்கம், 14 வெள்ளி மற்றும் 16 வெண்கல மெடல்களை வென்றனர். ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்ட இந்தியா, 39 மெடல்களை வென்றது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. 

2011 இல் க்ரீஸில் ஏதென்ஸ் நகரில் நடந்த ஷ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 156 பதக்கங்கள் வென்றது. 

“எல்லா வருடமும் இவர்கள் வெற்றிகள் கண்டு மின்னுகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் வெற்றியை குவித்துள்ளனர். மேலும் இந்தமுறை பதக்க எண்ணிக்கை கூடி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இந்த சாதனையை கண்டு நாங்கள் பெருமை அடைகிறோம்,” 

என்று ஷ்பெஷல் ஒலிம்பிக்கின் இந்திய தேசிய இயக்குனர் முக்தா நரேன் ஐஏஎன்எஸ்’ பேட்டியில் தெரிவித்துள்ளார். 

கட்டுரை: Think Change India