மகனின் கல்வி நிதிக்காக தெருவோர உணவகத்தை நடத்தும் மலையாள டிவி நடிகை

2

ஸ்ரீதனம் என்கிற பிரபல தொலைக்காட்சி சீரியலில் சாந்தா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்த கவிதா லஷ்மி கேரளாவில் உள்ள பலருக்கு மிகவும் பரிச்சயமானவர். இதனால் அவர் தெருவோர கடையில் தோசை தயாரித்து மக்களுக்குக் கொடுப்பதைப் பார்க்கும்போது ஏதோ ஷூட்டிங் நடக்கிறது என்றே பலர் நினைத்துக்கொண்டனர். ஆனால் உண்மை என்னவென்றால் 43 வயதான இந்த நடிகை தனது மகன் யூகேவில் படிப்பை முடிப்பதற்கு உதவுவதற்காகவே தெருவோர உணவகத்தை நடத்தத் துவங்கியுள்ளார்.

கவிதா பத்தாண்டுகளாக திருவனந்தபுரத்தின் நெய்யாற்றின்கரை பகுதியில் வசித்து வருகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு கணவரிடமிருந்து பிரிந்து வந்தது முதல் தனது இரண்டு குழந்தைகளையும் தனியாகவே வளர்த்துள்ளார்.

இவர் தனது மகன் ஆகாஷ் எம்பிஏ படிக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஆகாஷ் யூகேவில் சமையல் கல்வி படிக்க விரும்பியதால் மகனின் விருப்பத்தை பூர்த்தி செய்துவைக்க தீர்மானித்தார். அப்போதைய சூழலில் படிக்கவைக்க முடியும் என்று நம்பியதால் இந்த முடிவெடுத்தார். எனினும் நிலையற்ற பணி என்பதால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. இதனால் மாதக் கட்டணத்தை கட்டுவது சிரமமாக இருந்தது. எந்தவித சொத்தும் இல்லாததால் அவரால் வங்கியில் கடன் பெறமுடியவில்லை. தி நியூஸ் மினிட் தகவல்படி கவிதா கூறுகையில்,

”சொந்த வீடு வாங்கவேண்டும் என்று எப்போதும் கனவு கண்டதில்லை. என்னுடைய குழந்தைகளின் படிப்பில்தான் எப்போதும் முதலீடு செய்வேன். அவர்கள் சிறு வயதில் இருந்தபோது பள்ளி ஹாஸ்டலில் சேர்த்தேன். அதற்காக அதிகம் செலவிட்டேன். அவர்கள் தங்களது சொந்த காலில் நிற்கவேண்டும். வயதாகும்போது எத்தனையோ முதியோர் இல்லங்கள் சுற்றி இருக்கையில் சொந்த வீடு குறித்து ஏன் கவலைப்படவேண்டும்?”

ஆகாஷ் பகுதி நேரமாக பணிபுரிகிறார். ஆனால் படிப்பிற்கான செலவுக்கு போதுமானதாக இல்லை. உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் நெய்யாற்றின்கரை பகுதியில் உணவகம் அமைக்க திட்டமிட்டார் கவிதா. எந்த வேலையும் தரக்குறைவானதல்ல என்கிறார் இவர். தனது உணவக தொழிலுக்கும் நடிப்புத் தொழிலுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை என்று ’மாத்ருபூமி’க்கு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

”இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடுவதில் எனக்கு எந்தவித மனவருத்தமும் இல்லை. நான் ஹோட்டலில் பணிபுரியவும் தயாராக இருக்கிறேன். எனக்கு மூட்டுவலி இருக்கிறது. இதயக் கோளாறும் உள்ளது. ஆனால் அது பிரச்சனையல்ல. என்னுடைய மகளை நினைத்துதான் கவலைப்படுகிறேன்.” என்றார்.

கட்டுரை : Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL