பைக்கை விற்று சைக்கிள் வாங்கிய விநோதப் பெண்மணி கௌரி ஜெயராம்

1

ஒரு இடத்திற்கு செல்லும் போது பயணத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல் அந்த பயணத்தில் நாம் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கிறோம், அதில் என்ன புதுமை இருக்கிறது என்பதை அறிய வேண்டும் என்கிறார் கௌரி ஜெயராம். சுற்றுப் பயணத்தில் அலாதி பிரியமும், சவால்களை சந்திப்பதில் தீரா ஆர்வமும் கொண்ட கெளிரியை, ஒரு படகில் இருந்து மற்றொரு படகுக்குத் தாவ வேண்டும் என்று கூறினால் சற்றும் தயங்காமல் உடனடியாக செய்துவிடுவார்; "என்னை அது எங்காவது எடுத்துச் செல்லும் அல்லது நான் அதை எங்காவது எடுத்துச் செல்வேன்" என்ற தாரக மந்திரத்தில் நம்பிக்கையோடு உள்ளார் கௌரி.

கௌரி ஆக்டிவ் ஹாலிடே நிறுவனத்தின் நிறுவனர். இந்நிறுவனம், சர்வதேச சாகசச் சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்கும் வசதியை அளிக்கிறது. விடுமுறை நாட்களை சிறப்பாக எவ்வாறு கழிப்பது என்பதற்கான குறிப்புகள் மற்றும் சுயகுறிப்புகளை தன்னகத்தே கொண்டிருப்பது இதன் சிறப்பு. சர்வதேச சுற்றுப்பயணத்தில் கடலளவு அனுபவம் கொண்டிருந்தார் கௌரி, எனவே இந்திய பயணிகளும் அறிந்து கொள்ளும் வகையில் தன்னுடைய கவனத்தை செலுத்தத் தொடங்கினார். மலையேற்றம், சைக்கிளிங், சுற்றுலாவை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்துவது மற்றும் மராத்தான் ஓட்டங்களுக்காக பயணிக்கும் அவருடைய பல்திறனே கௌரியை ஸ்பாட்லைட்டிற்கு கொண்டு வந்து பலரும் அவரை விரும்பச் செய்தது. அவர் தனது நிறுவனத்தை இரண்டாவது முறையாக 2013ல் தொடங்கினார்.

ஒரு தொழில்முனைவரின் வாழ்க்கை

சொந்தமாக ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கி நடத்துவது கௌரியை பொருத்தவரை ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருந்து. ஒரு தொழில்முனைவராக அவருக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது, ஒரு நாளில் 24 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் இருந்திருக்கலாம் என்று கூட விரும்பினார் கௌரி.

இந்தியாவில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவதில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளதாக கௌரி நினைத்தார், அதிலும் குறிப்பாக ஒரு புதிய நிறுவனம் தொடங்கும் போது ஆர்வம் உள்ள சரியான நபர்களை தேர்ந்தெடுத்து ஒரு குழுவை கட்டமைக்க வேண்டும். 

"நாங்கள் ஆர்வத்தோடு இருக்கும் பலரை சந்தித்தோம், ஆனால் அவர்களிடம் தேவையான தகுதிகளும், நாங்கள் எதிர்பார்க்கும் தரமும் இல்லை. ஒரு ஸ்டார்ட் அப்க்கு அது தான் மிகவும் முக்கியம்" என்று சொல்கிறார் அவர்.

கௌரி ஒரு தொழில்முனைவராக சந்தித்த அடுத்த சிக்கல், தன்னுடைய குறிக்கோளை நோக்கிய பயணம் பற்றி மற்றவர்களிடம் பொது விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவருக்குக் கடினமாக இருந்தது. பெரும்பாலான இந்தியர்கள் சாகச சுற்றுலா பற்றி உணர்ந்து கொள்ள வில்லை என்பது அவரின் கருத்து. “மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் எங்களிடம் வந்து டிஸ்னிலேண்டிற்கான சாகச பயணத் திட்டங்களை கேட்கின்றனர், அவர்கள் அந்த காலத்தைப் போலவே இருக்கின்றனர், அந்த நேரம் சற்றும் யோசிக்காமல் எனக்கு சுவற்றில் தலையை முட்டிக் கொள்ள வேண்டும் போல இருக்கும்” என்று கூறுகிறார் அவர்.

பயணத்தின் அர்த்தம் வாழ்க்கை

இந்திய விமானப்படை பைலட்டின் மகளான கௌரி சிறு வயதுமுதலே நாடோடித் தனமான வாழ்க்கை முறையிலேயே வளர்ந்தவர். அவர் தன்னுடைய சாலைப் பயணத்தை பிறந்த 5 நாட்களிலேயே தொடங்கிவிட்டார். இதற்காக தன் தந்தைக்கு நன்றி தெரிவிக்கிறார். 11 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வசித்து வந்த அவர் தனது பட்டப்படிப்பையும் அங்கேயே முடித்தார், 20 வயதில் தன்னுடைய முதல் பணியில் சேர்ந்தார்.

ஏர் மொரீஷியஸில் மண்டல மேலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் திருமணத்திற்கு பிறகு 2011ல் சென்னைக்கு வந்துவிட்டார். தாய்மை அடைந்ததும், தன்னுடைய பணியை விட்டு விட்டு தொழில்முனைவு உலகில் வலம் வரத் தொடங்கினார். 2001ல் எந்த முதலீடும் இல்லாமல் தொடங்கினார். அவருடைய நிறுவனம், விடுமுறைகளை குறிவைத்தே இருந்தது. அனைத்தும் நல்ல விதமாக சென்று கொண்டிருந்த போதும், கௌரி தன்னுடைய பிராண்ட்டுக்கு அங்கீகாரம் இல்லை என்றும் இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் உணர்ந்தார். அந்த சமயத்தில் தான் அவருக்கு தெற்கு ஆசியாவின் முன்னணி இடத்தில் இருந்து ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது உலகின் மிகப்பெரிய சுற்றுலா பயிற்சி நிறுவனம். அந்த பயணத்தில் அவர் கண்ட அனைத்தின் மீதும் அவருக்கு காதல் ஏற்பட்டது. 2005ல் அவர்களுடன் இணைந்து அந்த நிறுவனத்தில் எட்டரை ஆண்டுகள் இருந்தார். இந்த நீண்ட பயிற்சிக்குப் பிறகு அவர் மீண்டும் ஒரு ரிஸ்க் எடுக்க முடிவு செய்து தன்னுடைய நிறுவனத்தை இரண்டாவது முறையாக தொடங்கினார்.

சாலை முதல் சுய கண்டுபிடிப்பு வரை

என்னுடைய 40வது பிறந்த நாளில், என் ஆன்மா உணர்த்திய உள்ளுணர்வுபடி உடைமைகளை குறைத்துக் கொண்டு, வாழ்க்கை அனுபவங்களை பெருக்கிக் கொள்ள நினைத்தேன். அதனால் நான் என்னுடைய ஹோண்டா சிட்டி பைக்கை விற்று எனக்காக ஒரு சைக்கிளை வாங்கினேன்.

தன்னுடைய வேலை தனக்கு அலுத்துப் போய் விட்டதா என்று கௌரிக்கு உறுதியாகத் தெரியவில்லை. வாழ்வின் மத்திய பகுதியில் இருந்த அவருக்கு, தான் எதையுமே சாதிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. அவர் தன்னுடைய பணிக்கு வெளியில் இருக்கும் வாழ்வை வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள விரும்பினார். அவர் ஓட்டப்பந்தயம் மற்றும் எழுத்தின் மீது தன்னுடைய கவனத்தை செலத்தினார், ஒரு புத்தகத்தை கூட அவர் வெளியிட்டார். அதேபோன்று தன்னுடைய விடுமுறைகளை மராத்தான் ஓட்டப்பந்தயங்களுக்கு ஏற்ப திட்டமிட்டார்.

அதே ஆண்டு அவர் ஜோர்டானுக்கு Dead Sea (பூமியின் தாழ்வான இடம்) மராத்தான் ஓடினார், அதில் பங்கேற்று வந்த சூட்டிலேயே நேபாளில் உள்ள எவரெஸ்ட் பேஸ் முகாமிற்கு மலையேறுவதற்காக தன்னுடைய பையுடன் புறப்பட்டு விட்டார்.

அந்த முகாமில் பங்கேற்ற போது தான் அவர் ஒன்றை உணர்ந்தார், எவ்வித கேட்ஜெட்டுகளும் இல்லாமல் ஒற்றைப் பையுடன் வாழ்வை வாழ முடிகிறது. பிறகு ஏன் தன் வாழ்நாளில் கூடுதல் சுமைகளை சேர்த்துக் கொண்டு அவற்றை வீட்டில் கொண்டு வந்துவைத்திருக்கிறேன் என்று அவரை யோசிக்க வைத்தது அந்த முகாம். கௌரி ஒரு மாறுபட்ட பெண்மணியாக வெளிவந்தார், அதைத் தொடர்ந்து தன் வாழ்வில் பல்வேறு வகையிலும் சுறுக்கத்தை கடைபிடிக்கவும் தொடங்கினார். அதன் பிறகு தான் அவர் தன்னுடைய அழகான காரை விற்றார், வேலையை ராஜினாமா செய்தார், புதிய பயணத்தைத் தொடங்கினார்.

கௌரி மரணத்தின் வாசலையும் தொட்டு வந்திருக்கிறார். 1999ல்அவர் நேபாளில் ஒரு உச்சியில் இருந்து தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

‘ஆண்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடுவதில்லை!’

சரியான வாழ்க்கைத் துணையையும், சரியான தொழிலையும் தேர்ந்தெடுப்பவர்களால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்பது கௌரியின் கருத்து. தன்னுடைய பயணம் முழுவதிலும் கௌரியை அனைவரும் துளைத்த கேள்வி உங்கள் மகள்களை யார் பார்த்துக்கொள்கிறார்கள்? என்பதாகவே இருந்தது. 

அவர்களுக்கு கௌரி அளிக்கும் எளிய பதில்,

"மற்ற பெற்றோரும் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும். நான் அதிர்ஷ்டசாலி ஏனெனில் என் குழந்தைகளை பார்த்துக்கொள்வது என் கணாவரது பொறுப்பும் கூட. பணி நிமித்தமாக பல ஆண்கள் பயணிக்கும் போது குடும்பத்தை பிரிந்து அல்லல்படுவது போல நானும் என்னுடைய பணி காரணமாக அவர்களை பல நேரங்களில் பல நிமிடங்களில் பிரிந்து வாடுகிறேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆண்களுக்கு அனைத்தும் கிடைத்து விடுகிறது என்று நான் நினைக்கவில்லை".

தன் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று கௌரி குற்றஉணர்வு கொள்ளவில்லை ஏனெனில் அவர் தன் மகிழ்சிக்காக இதை விரும்பி தான் தேர்வு செய்தார். பணிக்குச் செல்வது என்பது நான் ஏற்படுத்திய விருப்பம். நான் என்னுடைய மகள்களிடம் எப்போதும் அவர்களின் தாய் பணியாற்ற வேண்டும் என்று சொல்லமாட்டேன், ஏனெனில் அதற்கு அவர் பணம் சம்பாதிக்க வேண்டும்; நான் என்னுடைய திருப்திக்காக பணியாற்றுகிறேன், நான் ஒரு சிறந்த தாய். அவர்களும் ஏதாவது ஒரு விஷயத்தின் மீது காதல் கொள்ளும் போது இதை புரிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் கௌரி.

இலகுவான பயணத்தை கற்றுக் கொள்ளுங்கள்

இலகுவான பயணத்தை கற்றுக் கொள்வதன் மூலம் பெண்கள் பல வகைகளில் பயனடைவார்கள் என்று கௌரி நினைக்கிறார். இது ஒருவகை அழுத்தத்தில் இருந்து விடுவித்து இலகுவாக இருக்க வைக்கும், அதே சமயம் ஒருவருக்கு விடுதலையையும், சுதந்திரத்தையும் சுவாசிக்கச் செய்யும். பயணம் தொடர்பான ஆவணங்களை உங்களுடைய வீட்டிலும், செக்/இன் லக்கேஜிலும் வைத்திருப்பது சிறந்தது, அதே போன்று ஒரு மல்ட்டி பின் செல்போன் சார்ஜரையும் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு தொழில்முனைவராக கௌரி மகிழ்ச்சியாக உள்ளார், அவருக்கு பிடித்த ஒரு விஷயத்தில் இருந்து அவர் மகிழ்ச்சியை பெறுகிறார் – சாகசம்!

“ஒரு தூரிகையைக்கொண்டு எனது கதையை சொந்தமாக எழுதும் திரில் அலாதியானது. நாம் அனைவரும் பயணத்தை ரசித்து மகிழ்கிறோம். ஒவ்வொருநாளும் புதியது, ஒவ்வொரு காலையும் புதியன கற்கவும், வளர்ச்சிக்கும், சவாலான கற்றலுக்குமானது. எப்போதெல்லாம் கடினமான நிலை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் இன்னும் அதிகளவு ஓடுவேன். அந்த ஓட்டம்தான் சிக்கலை நீக்கும்”.

கட்டுரை: தன்வி துபே | தமிழில் : கஜலட்சுமி மகாலிங்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற சுற்றுளா தொழில் தொடர்பு கட்டுரை:

எக்பீரியன்ஸ் அன்லிமிடட் வழங்கும் கிராம சுற்றுலா!

இயற்கை அழகை ரசிக்கலாம் வாங்க!