வரதட்சணை பழக்கத்தை விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் ஒழிக்கப் போராடும் தம்பதிகள்!

0

வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்று இந்தியாவில் அரை நூற்றாண்டுக்கு முன்பே வந்துவிட்டாலும், அந்த நடைமுறையை முற்றிலுமாக தடுக்க முடிவதில்லை. 2015-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் 21 பெண்கள் வரதட்சணை கொடுமையால் இறந்தது தெரியவந்தது. பணமாகவும், நகையாகவும், சொத்தாகவும் தரப்படும் டவுரி, பெண்களை திருமணம் செய்து கொடுக்கும்போது இன்றும் அதிகமாகத்தான் உள்ளது என்பது தெரியவருகிறது. 

ஒரு பெண் பிறந்தாலே அவள் ஒரு சுமையாகவே பார்க்கப்படுகிறாள். அதை ஈடுகட்ட, அவளின் குடும்பம் திருமணத்தின் போது வரதட்சணை தர நிர்பந்திக்கப்படுகின்றனர். இதை மாற்ற நினைத்த பிகாரைச் சேர்ந்த மொஹமத் இம்தியாஸ், வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு முழக்கங்களை வீடு வீடாக செய்யத் தொடங்கினார். 

வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் தவறென்று தன் மனைவி நிக்கத் அகமதுடன் சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் மொஹமத். கடந்த ஓர் ஆண்டாக அவர்கள் செய்யும் பிரச்சாரத்தால் இதுவரை 13 ஜோடிகள் டவுரி இன்றி திருமணம் முடித்துள்ளனர். பாட்னா பீட்ஸ் செய்திகளின் படி, மொஹமத் இந்த சமூகக் கொடுமை ஒழிய பாடுபடுவேன் என்கிறார்.

“பெண் சிசுக்கொலை ஆண்டாண்டாக நடைபெறுகிறது. இதற்கு வரதட்சணையே முக்கியக் காரணம். இது நிறுத்தப்படவேண்டும். எங்களைப் போன்றோர் இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க முன்வரவேண்டும்,” என்கிறார். 

மொஹமத் மற்றும் அவரது மனைவி, ஒரு குடும்பத்தாரை வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்துவிட்டால், அக்குடும்பத்தார் இது குறித்து போஸ்டர் அடித்து மணமேடையில் ஒட்டவேண்டும். இது மற்றவர்களுக்கு பாடமாகவும், அதை பின்பற்ற உந்துதலாகவும் இருக்கிறது. 

மொஹமத் ஜேஎன்யூ-வின் முதுகலை பட்டம் பெற்றவர். டவுரி என்னும் கொடுமையான வழக்கம் நம் சமூகத்தில் ஒழியவேண்டும் என்று எல்லாரிடமும் கேட்டுக்கொள்கிறார். மேலும் திருமண அழைப்பிதழில் பரிசுப்பொருட்களை தவிர்க்குமாறும் அச்சிடும்படி வற்புறுத்துகிறார். 

டெலிகிராப் செய்தியில் பேசிய ராஜீவ் ரஞ்சன் குமார் பாண்டே எனும் பாட்னா உயர் நீதிமன்ற வழக்கறிஞர்,

“பிஹார் காவல்துறையினர் பெண்களுக்கான பிரத்யேக காவல் நிலையத்தை பல இடத்தில் நிறுவியுள்ளனர். இவர்கள் மாநிலத்தில் நிலவிவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள் மற்றும் வரதட்சணை கொடுமைகளை புகார்களாக பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இருப்பினும் கடந்த 4 ஆண்டுகளில், டவுரி இறப்புகளில் நாட்டில் இரண்டாம் இடத்தில் பிஹார் மாநிலம் உள்ளது,” என்று வருத்தம் தெரிவித்தார். 

இது போன்ற நிலையில், மொஹமத் மற்றும் அவரின் மனைவி போன்றோர் அடிமட்ட அளவில் தீவிரமாக பிராச்சாரமும், மக்களுக்கு புரிதலை ஏற்படுத்துவது அத்தியாவசியம் ஆகிறது. வரதட்சணை எனும் கொடுமை ஒழிய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதால், இவர்களின் சேவை தொடரும்.

கட்டுரை: Think Change India