எத்தியோபியர்களின் தாகம் தீர்க்கும் வார்காநீர் தொழில்நுட்பம்!

ஒரு சராசரி எத்தியோப்பியன் வாழ ஒரு நாளைக்கு 15 லிட்டர் நீர் தேவை.ஆனால் வளர்ந்த நாடுகளில் ஒருநாளைக்கு 300 லிட்டருக்கும் அதிகமான நீரை பயன்படுத்துகிறார்கள்.வார்காநீர் தொழில்நுட்பமானது ஒரு நாளைக்கு நூறு லிட்டர் குடிநீர் வழங்கக்கூடியது.

0

ஆண்ட்ரியாஸ் வோக்லர் மற்றும் ஆர்டுரோ விட்டோரி ஆகிய இருவரும் ஸ்விஸ்-இத்தாலிய கட்டிடக்கலைஞர்கள்.கட்டிடக்கலை மற்றும் தொலைநோக்கு (Architecture and Vision (AV) என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர்களும் கூட. இவர்கள் 2012 எத்தியோபியாவின் வடகிழக்கு பகுதிகளை பார்வையிட சென்றிருந்தனர் . அப்பகுதி உயர்ந்த பீடபூமி பகுதி என்பதால் அங்கே கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது.

எத்தியோபியாவின் ஊரக பகுதிகள் வளர்ச்சியற்றதாக இருந்தது.எந்த தொழிற்சாலையும் சென்றுசேராத வளம் நிறைந்த பகுதி அது.ஆனால் தண்ணீர் கிடையாது, மின்சாரம், சாலைவசதி என எந்த அடிப்படை வசதியுமே அற்ற பகுதி இது. எனவே வோக்லரும், விட்டோரியும் சேர்ந்து "வார்காநீர்" (Warka Water) என்ற தங்களின் புதிய திட்டத்தை இங்கே சோதித்தனர். வார்காநீர் என்பது ஒரு செங்குத்து வடிவிலான அமைப்பு, மின்சாரம் போன்ற எதன் உதவியும் இல்லாமல் வளிமண்டலத்திலிருந்து நீரை பிரித்தெடுத்து இதில் சேகரித்து வைக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 2013ல் ஆண்ட்ரியாஸ் வோக்லர் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்னரும் விட்டோரி தன் பயணத்தை தொடர்ந்தார்.

வார்காநீர் தொழில்நுட்பம் தன்னிச்சையாக இயங்கக்கூடிய தொழில்நுட்பம், இயற்கை அழகியல் மற்றும் சுற்றுசூழலை பராமரிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலானது. பார்ப்பதற்கு வினோதமாக இல்லாமல் கிராமப்புற தோற்றத்திற்கு ஏற்றார் போல் உள்ளதால் இது மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது.

இயற்கையான செயல்முறை

வார்காநீரின் மேற்பகுதி பழங்கால எதியோப்பியாவின் நெசவுக்கூடை முறையை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள் முழுக்க முழுக்க உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே யார் வேண்டுமானாலும் தயாரிக்க முடியும்,கோளாறுகளை சரிசெய்ய முடியும்,பராமரிக்க முடியும். சாதாரண மக்களும் பயன்பெற வேண்டும் என்ற இந்நிறுவனத்தின் உயரிய இலக்கை இது காட்டுகிறது.

எளிதில் மட்கக்கூடிய பொருட்களை கொண்டும், மூங்கில்,சணல் மற்றும் பயோப்ளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இயங்குவதற்கு மின்சாரம் தேவையில்லை. புவியீர்ப்பை கொண்டு செயல்படும் தன்னிச்சையான அமைப்பான இது இயற்கையில் கிடைக்கும் மழைநீரிலிருந்தும், பனி, நீராவி, பனித்துளி போன்றவற்றிலிருந்தும் நீரை பிரித்தெடுக்கிறது.

வார்காநீர் தொழில்நுட்பம் இயற்கையில் உள்ள பல்வேறு கட்டமைப்புகளின் திறமைகளை ஒருங்கிணத்து உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கள்ளிச்செடியின் ஒருங்கிணைந்த மூடுபனி சேகரிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார்கள். கள்ளி செடியானது வறட்சியான பகுதிகளில் வளரக்கூடிய தன்மையுடையது. இந்த தாவரம் கொத்தான கூம்பு தண்டை கொண்டது. இது முடி போன்ற அல்லது ஊசி போன்ற அமைப்பு கொண்ட மூன்று ஒருங்கிணைந்த பகுதிகளை கொண்டு மூடுபனியை சேகரிக்கிறது.

இரண்டாவதாக பாலைவனங்களில் வாழும் நமீபிய நண்டுகளில் காணப்படும் ஹைட்ரோபோலிக் புடைப்புகளில் நானோஸ்கோபிக் தட்டுகள் இருக்கிறது. இந்த புடைப்புகள் நீர்வெறுக்கும் அமைப்பை கொண்டுள்ளன. இந்த அமைப்பை பயன்படுத்தி நண்டுகள் தங்களுக்கு தேவையான நீரை சேகரிக்கின்றன. வறட்சியான சீதோஷ்ண நிலையில் தாக்குப்பிடிப்பதற்கு இது போன்ற அமைப்புகள் மிக முக்கிய பங்காற்றுகிறது.

வார்காநீர் தொழில்நுட்பத்தில் உள்ள துணிகள், தாமரை விளைவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாமரையின் இலைகள் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளக்கூடியது. காரணம் அதன் இலைகளின் நீர் தவிர்க்கும் தன்மை, மிக லேசான அளவிலான நீரே தாமரை இலையில் படுவதால், மிக வேகமாக காய்ந்துவிடக்கூடிய தன்மை கொண்டது. இதனால் வார்காநீர் தொழில்நுட்பத்தில் அழுக்குபடிவதில்லை.

இந்த அமைப்பின் உருவாக்கத்திற்கு தேவையான மேலும் ஒரு உத்தி சிலந்தியிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அதாவது சிலந்தியின் வாயிலிருந்து வரும் நூல் போன்ற நரம்பு தண்ணீர் தேக்கி வைக்க உதவும் ஒன்றாகும். இந்நிறுவனத்தினர் இயற்கையை உன்னிப்பாக கவனித்து அதில் கிடைக்கும் பல தொழில்நுட்ப உத்திகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தியிருப்பது பாராட்டத்தகுந்தது.

விட்டோரி மற்றும் அவரது குழுவினர் கரையான் புற்றின் அமைப்பை ஆராய்ந்தனர். புற்றின் வெளிபகுதியிலிருந்து உள்பகுதிக்கு காற்று எப்படி செல்கிறது என கவனித்தனர். இது போன்ற பலவற்றை ஆராய்ந்து நீரை சேகரிக்கக்கூடிய எல்லா சாத்தியக்கூறுகளையும் இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

எத்தியோப்பியாவின் நீர்த்துயரம்

ஒரு சராசரி எத்தியோப்பியன் வாழ ஒரு நாளைக்கு 15 லிட்டர் நீர் தேவை.ஆனால் வளர்ந்த நாடுகளில் ஒருநாளைக்கு 300 லிட்டருக்கும் அதிகமான நீரை பயன்படுத்துகிறார்கள். வார்காநீர் தொழில்நுட்பமானது ஒரு நாளைக்கு நூறு லிட்டர் குடிநீர் வழங்கக்கூடியது.இந்த தொழில்நுட்பம் எந்தவகையான இயந்திரத்தின் உதவியும் இல்லாமல் உள்ளூர் மக்களின் உதவியாலே உருவாக்கப்பட்டுள்ளது.

எத்தியோபியாவின் 85.3 சதவீத கிராமப்புற பகுதிகள் சுகாதார சீர்கேடுகள் நிறைந்தவை. இதனால் வியாதிகள் எளிதில் பரவக்கூடிய அபாயம் உள்ளது. எத்தியோபிய நகரங்களில் வெறும் 44 சதவீதத்தினரும், கிராமங்களில் 34 சதவீதத்தினரையும் மட்டுமே நீராதாரம் எட்டியிருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வில்கூட சுத்தமான நீர் பயன்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

எத்தியோபியா மிக அழகான நிலப்பகுதிகளையும், தங்கம் உட்பட பல்வேறு இயற்கை வளங்களையும் உள்ளடக்கியது. காடுகள் அழிக்கப்படுதல், பருவ நிலை மாற்றம் போன்ற பல ஆபத்தான தன்மைகளை உள்ளடக்கிய பகுதி என்பதால் இயற்கைவளங்களை கொள்ளையடிக்க முயற்சிப்பவர்களுக்கு இதெல்லாம் சாதகமான அம்சம்.

இந்த வார்காநீர் தொழில்நுட்பம் மிகப்பெரிய வெற்றி அடைந்தால் இந்த ஆபத்துகளை சீர்செய்ய முடியும். உள்ளூர் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும். அவர்கள் தண்ணீருக்காக பல மைல் தூரம் அலைந்து திரியும் அவல நிலை மாறும்.

சவால்

உயரமான தன்னிச்சையாக இயங்கக்கூடிய இந்த தொழில்நுட்ப சாதனத்தை வளர்ச்சியடையாத, பெரும் குழிகள் நிறைந்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பது தான் இந்த நிறுவனத்தின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

முதல் வார்காநீர் அமைப்பை உருவாக்க நான்கு மாதம்வரை எடுத்துக்கொண்டனர். அது இப்போதைய நிலையான வார்காநீர் 3.1 என்ற நிலையை அடைய மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதை யோசித்தால் எவ்வளவு கடின உழைப்பை இவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்

இதை தயாரிக்க 4 நாட்கள் தேவை

10 மீட்டர் உயரமும் 60 கிலோ எடையும் உடைய வார்காநீர் 3.1 என்ற புதிய தொழில்நுட்ப அமைப்பு ஐந்து தொகுதிகளை உள்ளடக்கியது. இதன் பாகங்களை இணைத்து உருவாக்க ஆறு பேர் தேவை. இவ்வளவு பேரை கொண்டு இதை உருவாக்க நான்கு நாட்களும், பொறுத்துவதற்கு மூன்று நாட்களும் ஆகும். முடிந்தவரை செலவுகளை குறைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஒரு வார்கா அமைப்பை உருவாக்க ஆகும் செலவு ஆயிரம் டாலர்கள். 2015ன் முதல் காலாண்டுக்குள் ஒன்பது முன்மாதிரிகள் உட்பட இப்போதைய வார்காநீர் 3.1 அமைப்பையும் சேர்த்து மொத்தம் பத்து அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நீர் என்பதையும் தாண்டி

இது போன்ற தொழில்நுட்ப அமைப்பை உருவாக்குவது மட்டும் இந்நிறுவனத்தின் நோக்கம் இல்லை. அதையும் தாண்டி எத்தியோப்பியர்களுக்கு நீர் மேலாண்மையை கற்றுகொடுப்பது, தண்ணீர் உருவாக்கம், பாதுகாப்பு, மறுசுழற்சி போன்றவற்றின் சிறந்த முன்மாதிரிகளை கற்றுகொடுப்பது என பல குறிக்கோள்களை செயல்படுத்தியிருக்கிறார்கள்.

இறுதியாக வார்காநீர் பனிப்பந்து என்ற அமைப்பை கொண்டு உள்ளூர் மக்களுக்கு இணைய இணைப்பு கிடைக்க செய்திருக்கிறார்கள். இதன்மூலம் இப்பகுதி மக்கள் அவ்வப்போதைய பருவநிலை மாற்றத்தையும், விவசாயபொருட்களின் அன்றாட விலைகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

வார்காவின் பின்னணி

ஃபிகஸ் வஸ்டா (Ficus Vasta) என்ற தாவரம் அம்ஹரிக் மொழியில் "வார்கா" என அழைக்கப்படுகிறது. தமிழில் அத்திமரம். எத்தியோபியாவில் இது மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. ஒவ்வொரு வார்காநீர் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கும்போதும் அதற்கு மாற்றாக ஒரு அத்திமரத்தை நட்டுவைப்பதை கடமையாக வைத்திருக்கிறார்கள் இந்நிறுவனத்தினர். இது இந்நிறுவனத்தின் மற்றுமொரு சிறப்பான செயல்பாடு ஆகும்.

வார்காநீர் குழுவினர் வெறும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என்பதையும் தாண்டி நாம் யோசித்தே பார்க்கமுடியாத பலவற்றை சாத்தியபடுத்தியிருக்கிறார்கள்.