தகவல் திங்கள்: மாற்று வரைபடங்கள் காட்டும் உலகம்!

0

இந்த உலகை எத்தனை விதமாக பார்க்கலாம்? நாமறிந்த படி ஒரே விதமாக பார்க்கக் கூடாது என்பது இந்த கேள்விக்கான பதில். ஏனெனில் உலகை வேறு வேறு கோணங்களில் பார்க்கலாம். ஒவ்வொன்றும் உலகம் பற்றிய நமது பார்வையை மாற்றக்கூடியதாக இருக்கும். நமது புரிதலையும் மேம்படுத்துவதாகவும் இருக்கும். இதற்கு உதாரணம் தேவை என்றால், சமீபத்தில் வெளியான உலக இணைய பேட்டை வரைபடத்தை பாருங்கள்!

இந்த வரைபடம் உலகையே தலைகீழாக கலைத்துப்போட்டு நம் முன் வைக்கிறது. பசுபிக் தீவான டோகேலோ தான் இதில் பெரிதாக காட்சி அளிக்கிறது. சீனாவோ இன்னும் பெரிதாக இருக்கிறது. ரஷ்யாவோ சீனாவின் மீது நசுங்கிப்போன தேசம் போல சுருங்கி காட்சி அளிக்கிறது. ஜெர்மனியும், இங்கிலாந்தும் தான் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றன. இந்த இரு நாடுகளையும் பார்த்து விட்டு அருகே அமெரிக்காவை பார்த்தால் ஐய்யோ பாவம் என்பது போல இருக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்து நாடுகள் அதைவிட பரிதாபமாக இருக்கின்றன. அந்நாடுகளை வரைபடத்தில் பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டும். இந்தியாவின் நிலையில் மாற்றம் இல்லை. உலக வரைபடத்தில் இருப்பது போலவே இருக்கிறது.

இந்த வரைபடத்தின் பின்னே ஏதோ வில்லங்கம் மறைந்திருக்கிறதோ என்று சந்தேகிக்க வேண்டாம். இது உண்மையான வரைபடம் தான். உலக டொமைன் முகவரிகள் புள்ளிவிவரங்கள் உணர்த்தும் உண்மையின் அடிப்படையிலான வரைபடம்!

இணையதளங்களை குறிக்கும் முகவரிகளின் பின் பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் டாட்காம் அல்லது டாட்நெட் போன்றவை தான் டொமைன் என்று குறிப்பிடப்படுகின்றன. பிரபலமாக இருக்கும் டாட்காம் போன்ற பொதுவான டொமைன் பெயர்கள் தவிர ஒவ்வொரு நாட்டிற்கும் என்று பிரத்யேகமாக ஒரு டொமைன் அடையாளம் உண்டு. தமிழில் இணைய பேட்டை என்று வைத்துக்கொள்வோமே.

இதன்படி இந்தியாவுக்கான டொமைன் அடையாளம் டாட்.இன் என்று முடிகிறது. ஜெர்மனிக்கு டாட்.டீ, சீனாவுக்கு டாட்.சிஎன், அமெரிக்காவுக்கு டா.யுஎஸ், ரஷ்யாவுக்கு டாட்.ஆர்யு, இங்கிலாந்துக்கு டாட்.யுகே, பிரேசிலுக்கு டாட்.பிஆர்... இப்படி நீள்கிறது இந்த பட்டியல்.

இணையதள முகவரிகளை பதிவு செய்ய விரும்புகிறவர்கள் பொதுவாக டொமைன்களை நாடலாம். அல்லது அவர்கள் நாட்டிற்கான பிரத்யேக டொமைன் முகவரியை நாடலாம். இதை தீர்மானிப்பது வர்த்தகம் மற்றும் நாட்டுப்பற்று மட்டும் அல்ல, டொமைன் அடையாளம் பற்றிய விழிப்புணர்வும் தான்.

சொந்த டொமைன் பெயர் பயன்பாடு என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஜெர்மனி, சீனா, இங்கிலாந்து, பிரேசில் போன்ற நாடுகளில் இருப்பவர்கள் பொது டொமைன்களை விட தங்கள் சொந்த டொமைனில் முகவரியை பதிவு செய்து கொள்வதையே விரும்புகின்றனர். பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் இந்த போக்கு பரவலாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் நிலைமை தலைகீழ். அங்கு டாட்.யுஎஸ் டொமைனை விட அதிக அளவில் டாட்.காம் டொமைன் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சிரியா, சோமாலியா போன்ற நாடுகளில் நிலைமை இன்னும் மோசம். அங்கெல்லாம் சொந்த டொமைனில் அதிக பதிவுகள் இல்லை.

இப்போது டொமைன் பெயர் பதிவுகள் தொடர்பாக ஓரளவு உங்களுக்கு புரிந்திருக்கும். இது தொடர்பாக இன்னும் தெளிவான சித்திரத்தை அளிக்கும் நோக்கத்துடன் இங்கிலாந்தின் நோமிநெட் நிறுவனம் டொமைன் பெயர்கள் பதிவு அடிப்படையில் உலக வரைபடத்தை உருவாக்கியிருக்கிறது.

அதாவது உலக நாடுகளை அவற்றின் பூகோள பரப்பின் படி குறிக்காமல் அந்நாடுகளின் டொமைன் பெயர்கள் பதிவு எண்ணிக்கை படி சித்தரிக்கப்பட்டு இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த வரைபடத்தில் பல நாடுகள் அவற்றின் பூகோள பரப்பை விட பெரிதாக காட்சி அளிக்கின்றன. இதன் பொருள் அந்த நாடுகளில் எல்லாம் சொந்த டொமைன் பெயர்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது தான்.

இந்த தகவல்களை தெரிந்து கொண்டு வரைபடத்தை பார்த்தால் தெளிவாக புரியும். அல்லது வரைபடத்தை பார்த்து விட்டு டொமைன் விவரங்களை நோக்கினாலும் இன்னும் தெளிவாக புரியும்.

ஆப்பிரிக்க நாடுகளில் இணைய வசதியும் குறைவாக இருக்கிறது. சொந்த டொமைன் பெயர் பதிவுகளும் குறைவாகவே இருக்கிறது. எனவே தான் வரைபடத்தில் ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டமும் அப்படியே சுருங்கிப்போய் காட்சி அளிக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அவற்றின் டொமைன் பெயர் பதிவுகளுக்கு ஏற்ப தோன்றுகின்றன.

இந்த வரைபடத்தில் ஒவ்வொரு நாட்டின் மீதும் அதன் டொமைன் பெயர் சுருக்கம் கொடுக்கப்பட்டு, அதன் கீழ் பெயர்களின் பதிவு எண்ணிக்கையும் அளிக்கப்பட்டுள்ளன. இதைப்பார்த்தாலே இணைய பேட்டையில் அந்நாட்டின் செல்வாக்கு எப்படி என்று தெரிந்து கொண்டு விடலாம்.

இந்த வரைபடம் பல சுவாரஸ்யமான தகவல்களை முன்வைக்கிறது. பல நாடுகள் வெறும் புள்ளிகளாக தான் தோன்றுகின்றன. இந்த வரைபடத்தில் டாட்.டிகே நான்காவது பெரிய நாடாக தோன்றுவது புதிராக தோன்றலாம்.

டாட்.டிகே என்பது நியூசிலாந்து அருகே உள்ள தீவுக்கூட்டமாகும். டிகேலோ எனும் பெயர் கொண்ட இந்நாடு நியூசிலாந்துக்கு உட்பட்ட தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இந்நாட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 1400 தான். அப்படி இருக்க டொமைன் பெயர் பதிவு அடிப்படையில் இந்நாடு பெரிதாக இடம்பிடித்திருப்பது எப்படி?

இதன் பின்னே சுவாரஸ்யமான கதை இருக்கிறது. ஜூஸ்ட் ஜர்பையர் (Joost Zuurbier) என்பவர் தான் டாட்.டிகே டொமைன் அலைக்கு காரணம். டச்சு தொழில்முனைவோரான ஜூர்பையர் கடந்த 2000 மாவது ஆண்டு டொமைன் பதிவு சார்ந்த புதுமையான நிறுவனத்தை உண்டாக்கினார். இலவச இமெயில் சேவை மூலம் ஹாட்மெயில் வருவாயை அள்ளிக்குவித்தது போல, டொமைன் முகவரிகளில் செய்ய முடியுமா என அவர் யோசித்துப்பார்த்தார். அதாவது டொமைன் முகவரிகளை இலவசமாக பதிவு செய்ய வைத்து, அவற்றில் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டுவது தான் அவரது எண்ணம்.

அவரது தேடலில் தீவு நாடான டொகேலோ அதன் டாட்.டிகே டொமைன் முகவரியை சும்மாவே வைத்திருப்பதை அறிந்து கொண்டு அந்நாட்டுக்கு பறந்து சென்று, அதன் தலைவர்களுடன் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த டொமைன் பெயர் பதிவை தன் பொறுப்பில் விட வேண்டும் என்பதும் அதற்கு பதிலாக விளம்பர் வருவாயின் ஒரு பகுதியை பகிர்ந்து கொள்ளலாம் என்பதும் தான் ஒப்பந்தம்.

இந்த முகவரியை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்திற்கு அந்த முகவரி பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதில் கட்டண விளம்பரங்கள் இடம்பெறச்செய்யப்படும். இதன் மூலம் வரும் வருவாயின் ஒரு பகுதி அந்நாட்டுக்கு அளிக்கப்படும். டிகேலோ நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி வருமானத்தில் கணிசமான பகுதி இந்த வழியில் தான் கிடைக்கிறது.

ஜூர்பையரின் பிரிடம் ரெஜிஸ்டரி நிறுவனத்தின் வர்த்தக திட்டம் காரணமாக தான் டிகேலோ நாட்டின் சார்பில் மொத்தம் 33,311,498 டொமைன் பெயர்கள் பதிவாகியுள்ளன. அதுவே அந்நாடு உலக டொமைன் வரைபடத்தில் விஸ்வரூபம் எடுக்கக் காரணம்!

டொமைன் பெயர் அடிப்படையிலான வரைபடத்தை பார்த்தால் இந்த விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்ளலாம். பூகோள நோக்கில் மட்டும் உலகை பார்க்காமல் மற்ற விவரங்களின் அடிப்படையில் உலகை பார்க்கச்செய்ய வரைபடமாக்கலை ஒரு உத்தியாகவே பயன்படுத்துகின்றனர். இப்படி பல்வேறு புள்ளிவிவரங்களை நாடுகளின் பரப்பிற்கு ஏற்ற வகையில் வரைபடத்தில் பிரதிநித்துவம் அளித்து தோன்றச்செய்வதன் மூலம் காட்சிரீதியாக விஷயத்தை பளிச்சென புரிய வைத்துவிடலாம் என்றும் கருதப்படுகிறது.

உலக டொமைன் வரைபடம் இதற்கு அழகான உதாரணம். இதற்கு முன்னரே கூட ஆக்ஸ்போர்ட் இணைய பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைய பயன்பாடு அடிப்படையில் உலக நாடுகளை வரைபடத்தில் இடம்பெறச்செய்திருந்தனர். இணைய பயனாளிகள் அதிகம் கொண்ட நாடுகள் அந்த படத்தில் பெரிதாக தெரியும். அதாவது சீனாவும், இந்தியாவும் பெரிதாக இருக்கும். அமெரிக்காவும் கூட பிரம்மாண்டமாகவே இருக்கும். ரஷ்யா சிறியதாக இருக்க, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் கொஞ்சம் பெரிதாக இருக்கும். இணைய பயன்பாடு மற்றும் அதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை இந்த படம் கச்சிதமாக விளக்கும் வகையில் அமைந்திருந்தது.

டொமைன் உலக வரைபடம் , இணைய பயன்பாட்டு வரைபடம்

தகவல் திங்கள் தொடரும்... 

முந்தைய பதிவுகள்ள:

'தகவல் திங்கள்'- இணையத்தை ஈர்த்து வைராலாகிய இரண்டு புகைப்படங்கள்!

விளம்பரம் இல்லா உலகம் எது?