ரூ500, ரூ1000 தடை- ’ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த மோடி...’ 

0

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கிய நடவடிக்கை மக்கள் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்கள் மற்றும் எதிர் கட்சிகளை சலசலப்பில் ஆழ்த்தியுள்ளது. தேசிய ஜனனாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட எதிர்கட்சிகள் வரை பலருக்கும் இந்த திடீர் செய்தி அதிர்ச்சியை தந்துள்ளது உண்மை. 

2017 இல் 6 முக்கிய மாநிலங்கள் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில்; இடதுசாரிகள், காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பஹுஜன் சமாஜ் கட்சி ஆகியோர் பணத்தட்டுபாடிற்கு ஆளாகி கடுமையான சூழ்நிலையில் தள்ளப்படுவார்கள். சமாஜ்வாதி ஆளும் உத்திர பிரதேசத்தில் பிஜேபி தேர்தலில் தனக்கு சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கிறது. பஞ்சாபில் (பிஜேபி-சிரோன்மனி அகாலி தல் கூட்டணி), ஹிமாச்சல் பிரதேசம மற்றும் மணிப்பூரில் காங்கிரசை தோற்கடித்து, கோவா மற்றும் குஜராத்தில் ஆட்சியை தொடரும் விதம் வெற்றிபெறுவோம் என்று பிஜேபி கணக்கு வைத்துள்ளது. தேர்தலை சந்திக்கவிருக்கும் இந்த சமயத்தில் பிஜேபி எந்தவித வாய்ப்பையும் தவறவிடுவதாக இல்லை என்றே தெரிகிறது.   

மோடியின் இந்த அறிவிப்பு நாடெங்கும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அவருக்கு ஆதரவு அலைகளும் பெருகி வருவதை பார்க்கமுடிகிறது. தாங்கள் சந்திக்கும் இன்னல்களையும் தாண்டி மோடியை பலரும் வரவேற்று வருகின்றனர். 

இந்த அறிவிப்பை நேரடியாக தொலைக்காட்சியில் தோன்றி மோடி அறிவித்தது மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்தாக உள்ளது. ரிசர்வ் வங்கி தலைவர் இதை அறிவித்திருந்தால் பல எதிர் கேள்விகளும், போராட்டங்களும் நடந்திருக்க வாய்ப்புள்ளது. மோடி அறிவிப்பை வெளியிட்டவுடன், அரசு நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் இந்த புதிய முடிவை பற்றி விளக்கத் தொடங்கினார்கள். பல மாதங்களாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்பது போன்ற விளக்கங்களையும் கருத்துக்களையும் அவர்கள் வெளியிட்டனர். 

”இது எதிர்ப்பார்க்கப்பட்டது தான்...”, என்று கர்நாடக பிஜேபி எம்பி யுவர்ஸ்டோரி இடம் கூறினார். 

“சமிக்ஞைகள் தெளிவாக கொடுக்கப்பட்டது. நான் பல பேரிடம் இது பற்றி கூறினேன். பலரும் அதை நம்பவில்லை. மோடி போன்ற ஒரு மனிதரால் மட்டுமே இத்தகைய தைரியமான முடிவை எடுக்கமுடியும்,” என்றார். 

கறுப்புப்பணம், கள்ளநோட்டுகளை ஒழித்து ஊழலை களைந்தெறியவும், தீவிரவாதிகளுக்கு நிதி அளிப்பதை தடுக்கவும் எடுக்கப்பட்ட முடிவு இது என்று மோடி கூறுகின்றார். மோடி பதவிக்கு வரக்காரணமாக இருந்த அவரது கறுப்புபணத்துக்கு எதிரான கொள்கையின் வெளிப்பாடே இந்த முடிவு என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

அரசு இரு தடவை இது சம்மந்தமாக அறிவிப்பு வெளியிட்டது. ஒன்று, வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள ரூ.4147 கோடி கறுப்புப்பணத்தை வைத்துள்ளவர்களின் பட்டியலை 2015 இல் வெளியிட்டது. இந்த ஆண்டு, வரி கட்டாதோர்கான ’வருமானம் வெளியிடும் திட்டத்தை’ அறிவித்ததில், 65000 பேர் சுமார் 65,250 கோடி ரூபாய் வருமானத்தை வெளியிட்டனர். இதில் 32000 கோடி அரசுக்கு சென்றது. இதைத்தவிர வரி ஏய்போர்களின் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு கோடி கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. 

பெங்களுருவை சேர்ந்த பிரபல கல்வி நிலையத்தில் 243 கோடி ரூபாய் பணம் 1000ரூ நோட்டு கட்டுகளாக பாலித்தீன் பைகளில் பதுக்கிவைக்கப்பட்டது வெளிவந்தது. 

இத்தனை வெளிப்படையான நடவடிக்கைகளை இந்திய மக்கள் பார்த்துவந்திருந்தாலும், இது போன்ற 500,1000 ரூ நோட்டுகள் திடீர் தடை ஒரே இரவில் வரும் என்று எவரும் எதிர்ப்பார்க்கவில்லை.

மறைமுகமான பழிவாங்குதல்

கறுப்புப்பணத்துக்கு எதிரான நடவடிக்கை இது என்று மோடி மற்றும் பிஜேபி தரப்பில் சொல்லப்பட்டாலும் இது அவர்கள் பலவிதங்களில் பழிவாங்க எடுத்துள்ள நடவடிக்கை என்றே சொல்லலாம். 2014 பொது தேர்தலின் போது, ஜனவரி மாதம் அப்போது இருந்த ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன், 2005க்கு முன்பு வெளிவந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் அறிவிப்பின்றி செல்லாமல் போய்விடும் என்று கூறினார். இது காங்கிரஸ், பிஜேபி’யை தேர்தல் சமயத்தில் அவர்களிடம் உள்ள நிதியை முடக்குவதற்கான அடியாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் 1998 முதல் 2004 வரை பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது அவர்கள் சேர்த்துவைத்த பணத்தை ஒழிக்கவே காங்கிரஸ் இத்திட்டத்தை தீட்டியது. 

இதை ஒப்புக்கொண்ட பிஜேபி எம்பி, “இந்த நடவடிக்கை அப்போது பிஜேபி தேர்தலை சந்திக்க ஒரு பெரிய நெருக்கத்தை ஏற்படுத்தியது,” என்றார். 

பண பறிமுதல்கள் அதிகரிப்பு

குற்றப்பின்னணி உடைய அரசியல்வாதிகள், வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரம், ஆகியவற்றை ஆய்வு செய்யும் ஜனனாயக சீரமைப்பு கூட்டமைப்பின் முடிவுகளின் படி, ஓவ்வொரு சட்டமன்ற தேர்தலுக்கு பின்னரும், ஓட்டு போடுவோர்களை விலைக்கு வாங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட பணம் அதிகரித்துவருவதாக வெளியிட்டது. தேர்தல் சமயங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், மதுபானம், மற்றும் பரிசுப்பொருட்களின் மதிப்பு 2008 கர்நாடகா தேர்தலில் ரூ.45.57 கோடியாக இருந்தது. 2011 தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் ரூ.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு நடைப்பெற்ற தமிழக தேர்தலில் ரூ.120 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது பரிசுப்பொருட்கள் அல்லாத கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு வேட்பாளரின் சொத்து மதிப்பு லட்சங்களில் இருக்க, அவர்கள் தேர்தல் சமயத்தில் செய்யும் செலவு கோடிகளை தொட்டு வந்தது. இதை வைத்து ஒவ்வொரு கட்சியும் கறுப்புப்பணத்தை தேர்தல் சமயத்தில் செலவழித்து வந்தது புரிந்து கொள்ளமுடியும். 

இந்த முறை எதிர்கட்சிகள் புதிய அறிவிப்புக்கு எச்சரிக்கையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் துணை தலைவர் ராஹுல் காந்தி ட்வீட்டில்,

“மீண்டும் ஒருமுறை மோடி ஏழைமக்களை பற்றி கவலை படவில்லை என்பதை நிரூபித்துள்ளார். நாட்டின் விவசாயிகள், சிறு வணிகர்கள், குடும்ப பெண்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்...” என்று பதிவிட்டார். 
“உண்மை குற்றவாளிகள் தங்களின் கறுப்புப்பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிவிட்டும், ரியல் ஏஸ்டேட்டில் முதலீடு செய்தும் இங்கே அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள், வெல் டன் மோடி...” என்றும் பதிவிட்டார். 

முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம், 

“இந்த நடவடிக்கை உண்மையில் கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டது என்றால் அதை எங்கள் கட்சி வரவேற்கும், ஆனால் 1978’களில் அதிக மதிப்பு ரூபாய் நோட்டுகள் (10,000ரூ) செல்லாமல் ஆக்கப்பட்டது தோல்வியில் முடிந்தது என்றார். அதே சமயம் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதும் தனக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றுள்ளார். 


காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி தனது ட்விட்டரில், “65 சதவீத இந்தியா விவசாயத்தை நம்பி வரியில்லாத பண பரிவர்த்தனைகளை நம்பி வாழ்கின்றனர். பொதுவான வங்கி முறை, க்ரெடிட் கார்ட் முறை இல்லாததையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்றைய 1000 ரூபாய் என்பது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 100 ரூபாயின் மதிப்பே ஆகும்” என்றார். 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மோடியின் அறிவிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். உடனடியாக இதை திரும்பப்பெறவும் கேட்டுள்ளார்.

“கறுப்புப்பணம், ஊழலை வன்மையாக எதிர்க்கும் நான், அதேசமயம் பொது மக்கள், சிறு வணிகர்களின் நலன் பற்றியும் கவலை கொள்கிறேன். தங்கள் அத்தியாவசிய தேவைப் பொருட்களை அவர்கள் எப்படி பெறுவார்கள்?” என்று ட்விட்டரில் பதிவிட்டார். 

டெல்லியின் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், தனது கட்சிக்காரர் அஷுடோஷின் ட்வீட்டை மறுபதிவு மட்டுமே செய்தார். 

“பிஜேபி கோவாவில் உள்ள காசினோக்களை தடை செய்யமாட்டார்கள் ஏனெனில் அதன் மாஃபியாக்கள் அவர்களுக்கு அதிக அளவில் நிதி தருகின்றனர். பெரும் தலைவர்களை அந்த பணம் சென்றடைந்துவிடும்,” என்றார். 

கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யச்சூரி வேறு ஒரு கருத்தை தெரிவித்தார்.

“சட்டவிரோதமாக பணத்தை பதுக்கல் பற்றி அறிய, வங்கிகளில் கடனை அடைக்காத முதல் 100 பேர்களின் பட்டியலை வெளியிடவேண்டும்,” என்றார்.

ரூபாய் நோட்டு தடை மூலம் கறுப்புப்பணத்தை ஒழித்தும், எதிர் கட்சிகளை பின்னுக்கு தள்ளியும் தனது சாமர்த்தியத்தை காட்டியுள்ளார் மோடி. 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தேர்தலில் வெற்றிப்பெற உதவாது என்று எல்லா கட்சிகளுக்கும் தெரியும். செயல்பட்டால் மட்டுமே மக்கள் ஆதரவு இருக்கும். மோடி மேலும் பல ஆச்சர்யங்களை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கலாம். 

ஆங்கில கட்டுரையாளர்: அனில் புதூர் லுல்லா