கடைகளுக்கான கூகுளாக விரும்பும் தில்லி நிறுவனம் 'பிரைஸ் மேப்'

0

எல்லா நேரங்களிலுமே ஆன் -லைன் ஷாப்பிங் தான் சிறந்தது மற்றும் குறைந்த விலையை தரக்கூடியதா? இணையத்தில் தள்ளுபடியில் வாங்கிய ஒரு பொருள் அதைவிட குறைந்த விலையில் உள்ளூர் கடையில் கிடைப்பதை நீங்கள் கண்டறிந்தது உண்டா? இந்த கேள்விகளுக்கு 'பிரைஸ்மேப்' (PriceMap) பதில் அளித்து ஆன் -லைனில் ஷாப்பிங் செய்யும் போது புத்திசாலித்தனமாக செயல்பட உதவுகிறது. Assocham மற்றும் கிராண்ட் தோர்ண்டன் நடத்திய ஆய்வு 2016 ல் இந்தியாவில் ஆன் -லைனில் ஷாப்பிங் செய்பவர்கள் 40 மில்லியனாக இருப்பார்கள் என்று தெரிவிக்கிறது.

ஆன் -லைன் ஷாப்பிங் பிரியரான சுரேஷ் கப்ரா (Suresh Kabra), ஒரு முறை ஸ்னேப்டீலில் லேப்டாப் மேஜை வாங்கினார். அந்த வாரம் தில்லியில் உள்ள பஞ்ச்குயன் மார்க்கெட் சென்ற போது அதே மேஜை 30 சதவீதம் குறைந்த விலையில் விற்கப்படுவதை பார்த்து திகைத்துவிட்டார். இந்த சம்பவமே அவர் மனதில் வர்த்தக எண்ணம் ஒன்றை தோன்றச்செய்தது. இதுவே பிரைஸ்மேப் தளத்திற்கு வித்திட்டது.

தில்லி என்சிஆர் பகுதியில் செயல்படும் இந்த ஸ்டார்ட் அப்பில் இணை நிறுவனர்கள் சுஷீர் துபே (Shishir Dubey ) மற்றும் பாசப்ஜித் தே ( Basabjit Dey) உட்பட பத்து பேர் உள்ளனர். பிரைஸ்மேப் இணையத்தில் விற்கப்படும் பொருட்களின் விலையை உள்ளூர் கடைகளில் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்க உதவும் மொபைல் செயலியாக இருக்கிறது.

2015 செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட பிரைஸ்மேப்பில் கைகடிகாரம், மொபைல்ஸ், காலணி, வீட்டு உபயோக பொருட்கள்,சமையலறை பொருட்கள், ஹோம் ஆடியோ-வீடியோ மற்றும் டிஜிட்டல் காமிரா ஆகிய பிரிவுகளில் 800 விற்பனையாளர்கள் உள்ளனர். ஆறு வாரங்களில் இந்த செயலி 10,000 முறை டவுண்லோடு செய்யப்பட்டுள்ளது.

”ஆன் -லைனில் பொருட்கள் வாங்க வசதி தான் முதல் காரணமாக இருக்கிறது எனும் போது அதே வசதியை உள்ளூர் கடைகளில் வாங்குவதற்கும் கொண்டு வந்தால் என்ன? வாடிக்கையாளர்கள் கருத்துக்கணிப்பு மூலம் நான்கில் மூன்று பேர் உள்ளூர் கடைகளில் வாங்குவதையே விரும்புகின்ற்னர் என கூகுள் கண்டறிந்தது பற்றிய திங் வித் கூகுள் பதிவு மூலமும் பிரைஸ்மேப் கருத்தாக்கத்திற்கு வலு சேர்ந்தது” என்கிறார் சுரேஷ் கப்ரா. தொடர் தொழில்முனைவரான இவர் உருவாக்கிய மொபைல் வீடியோ ஸ்பேஸ் 2013ல் கையகப்படுத்தப்பட்டது.

இலக்கு சந்தையில் கவனம்

12 மில்லியன் சிறிய கடைகளால் நிறைந்திருக்கும் 600 பில்லியன் டாலர் வர்த்தகத்தை பிரைஸ்மேப் குறி வைக்கிறது. கடைகளுக்கு நுகர்வோரின் வருகையை அதிகரிக்கச் செய்வது மூலம் இதை நிகழ்த்த விரும்புகிறது.

ஆன் -லைனில் இருந்து கடைகளுக்கான விற்பனை புது யுக ஆன் -லைன் கடைகள் மற்றும் வழக்கமான கடைகள் இடையிலான இடைவெளியை குறைப்பதுடன் இணையத்தில் பொருட்களை வாங்கும் போது பரவலாக இருக்க கூடிய சந்தேகத்தையும் இல்லாமல் செய்கிறது. சொந்த நிதியில் துவக்கப்பட்ட நிறுவனம் முதலீட்டாளர்களுடன் பேசி வருகிறது.

"ஆன் -லைன் மற்றும் வழக்கமான வாடிக்கையாளர்கள் இரு தரப்பினருக்குமே பொருந்தும் பிரைஸ்மேப் கருத்தாக்கம் முதலீட்டாளர்களுக்கு பிடித்திருக்கிறது. இதை ஆன்லைன் டு ஆஃப்லைன் பரப்பின் உபெராக பார்க்கின்றனர்” என்கிறார் அவர்.

பிரைஸ்மேப் நிறுவனர் சுரேஷ் கப்ரா
பிரைஸ்மேப் நிறுவனர் சுரேஷ் கப்ரா

ரீடைலர்களின் சம்மதம்

ஆரம்பத்தில் சில்லறை விற்பனையாளரிகளின் நம்பிக்கையை பெறுவது கடினமாக இருந்தது. ஆன்லைன் விலைக்கு நிகராக அல்லது மேம்பட்டதாக இல்லை எனும் கருத்து தயங்க வைத்தது. ஆனால் பிரைஸ்மேப்பை பயன்படுத்த துவங்கியவுடன் அவர்களுக்கு விற்பனை கோரிக்கை அதிகமானது என்கிறார் சுரேஷ் புன்னகையுடன். விலையை பொருத்தவரை ஆன் லைன் கடைகளுடன் தங்களாலும் போட்டியிடம் முடியும் என நம்பினர். பிரைஸ்மேப் மூலம் அவர்கள் எந்த தொழில்நுட்ப உள்கட்டமைப்பும் இல்லாமலேயே இணைய வாடிக்கையாளர்களை வழக்கமான வாடிக்கையாளர்களாக மாற்றிக்கொள்ள முடிகிறது.

செயலி பயன்பாடு

இணையத்தில் நீங்கள் வாங்கும் பொருள் உள்ளூர் கடையில் என்ன விலையில் கிடைக்கிறது என அறிய விருப்பமா? இது மிகவும் எளிதானது. இணையத்தில் நீங்கள் கண்டுபிடித்த பொருளுக்கான இணைப்பை பிரைஸ்மேப் செயலியில் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த இணைப்பு கிடைத்ததும் கடைக்காரர்கள் தங்களின் விலையை தெரிவிப்பார்கள்.

"விற்பனையாளர்களைப் பொருத்தவரை, பிரைஸ்மேப் ரியல்டைம் பரிவர்த்தனை அடிப்படையில் செயல்படுகிறது. கடைகளைப் பொருத்தவரை பொருட்களின் புகைப்படங்களை வெளியிடுவது, விவரங்களை தருவது போன்ற பிரச்சனைகள் இல்லை. நவீன ரீடைல் நிறுவனங்களைப் பொருத்தவரை பின்னணியில் ஏபிஐ ஒருங்கிணைப்பு தேவையில்லை ” என்கிறார் சுரேஷ்.

சந்தையின் நிலை

இந்தியாவில் இணைய ஷாப்பிங் பிரபலமாகி வருவது ஜங்லீ (Junglee), மைஸ்மார்ட்பிரைஸ் (MySmartPrice) பிரைஸ்தேக்கோ (PriceDekho, பிரைஸ்பாண்டா(PricePanda), கம்பேர்ராஜா, (CompareRaja) ஸ்கேண்டிட் (Scandid), கிரேபான் (Grabon) மற்றும் ஸ்மார்ட்பிரிக்ஸ் (Smartprix) ஆகிய விலை ஒப்பீடு இணையதளம் மற்றும் செயலிகளுக்கு வித்திட்டுள்ளது.

ஒரு சில ஸ்டார்ட் அப்கள் முதலீட்டாளர்களையும் ஈர்க்கத்துவங்கியுள்ளன. கொல்கத்தாவைச்சேர்ந்த பைஹேட்கே (BuyHatke) கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஜப்பானிய நிறுவனத்திடம் (BEENOS ) இருந்து ஒரு மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. மொபைலில் செயல்படும் ஸ்கேண்டிட், மைக்ரோமேக்சிடம் இருந்து நிதி திரட்டியுள்ளது. சமீபத்தில் அக்சல் பாடனர்ஸ், மைஸ்மார்ட்பிரைஸ் தளத்தில் 10 மில்லியன் டாலர் சீரிஸ் பி நிதி அளித்துள்ளது.

பிரைஸ்மேப் புதிய வரவு என்றாலும் தனக்காக இடத்தை பெற்றுள்ளது. 2016 ல் இந்த நிறுவனம் 20 நகரங்களில் 30 பொருட்கள் பிரிவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

"அடுத்த சில ஆண்டுகளில் பிரைஸ்மேப் கடைகளுக்கான கூகுளாக உருவாக விரும்புகிறது, இதில் வாடிக்கையாளர் இணைய கடை, நிறுவனம் அல்லது இ-காமர்ஸ் தளத்தில் இருந்து ஒரு பொருளை தேர்வு செய்து உள்ளூர் கடையில் அது கிடைக்கிறதா மற்றும் அதன் விலையை தெரிந்து கொள்ளலாம். அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.100 கோடி வருவாயை இலக்காக கொண்டுள்ளோம்” என்கிறார் சுரேஷ்.

இணையதள முகவரி: PriceMap

ஆக்கம்: அபராஜிதா சவுத்ரி | தமிழில்: சைபர்சிம்மன்