பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் ரோபோக்களை உருவாக்கிய கேரள பொறியாளர்கள்!

0

பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டிருப்பினும் இந்த நடவடிக்கை முற்றிலுமாக தவிர்க்கப்படவில்லை. எனினும் கேரளாவைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் ஒருங்கிணைந்து இந்த அருவருப்பான பணியை மேற்கொள்ள ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளதால் இனி நிலைமை மாறக்கூடும்.

பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தக்கூடிய ரோபோவை ஜென்ரோபோடிக்ஸ் (Genrobotics) என்கிற ஸ்டார்ட் அப் உருவாக்கியுள்ளது. இந்த ரோபோவைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனை முயற்சி வெற்றியடைந்ததை அடுத்து இந்த தயாரிப்பு விரைவில் அறிமுகமாக உள்ளது.

ரோபோவின் நான்கு மூட்டுகளிலும் ப்ளூடூத் மற்றும் வைஃபை வசதி அடங்கிய கட்டுப்பாட்டு கருவியும் வாளி போன்ற ஒரு அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இது சாக்கடையிலிருந்து கழிவுகளை அகற்றுவதற்காக உருவாக்கப்பட்ட சிலந்தி வலையை போன்ற ஒரு அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும்.

கேரள ஸ்டார்ட் அப்பின் இந்த முயற்சியை செயல்படுத்த கேரள நீர் வாரியம் (KWA) அவர்களுடன் கைகோர்த்துள்ளது. புதிய சிந்தனைகளை தொழில்நுட்பமாக மாற்றியமைத்து துப்புரவு சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். கேரள நீர் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஏ ஷைனமோல் பிடிஐ-உடன் உரையாடுகையில்,

"இந்த திட்டத்தில் கேரள அரசு அதிக ஆர்வம் காட்டுகிறது. உள்ளூர் திறமைகளை ஊக்குவிக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம். தற்போது முழுமையாக அரசு நிதி பெறும் இந்த தயாரிப்பானது விரைவில் அறிமுகமாக உள்ளது."

இந்த ரோபோக்கள் ’பண்டிகூட்’ என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 5,000 பாதாள சாக்கடைகளைக் கொண்ட திருவனந்தபுரம் பகுதியில் முதலில் பயன்படுத்தப்பட உள்ளது.

பெங்களூருவின் புறநகர் பகுதியில் இரண்டாண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மூன்று தொழிலாளிகள் இறந்த சம்பவம் இந்தப் பொறியாளர் குழுவை பாதித்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு புதுமையான திட்டத்தை உருவாக்க தீர்மானித்தனர். ஜென்ரோபோடிக்ஸ் சிஇஓ-வான 24 வயதான விமல் கோவிந்த் ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு தெரிவிக்கையில்,

டிசிஎஸ் நிறுவனத்துடன் ஓராண்டிற்கு மேல் பணிபுரிந்து இந்த திட்டத்தின் முதல் நிலைக்கான பணத்தை சேமித்தேன். குட்டிபுரம் பகுதியில் உள்ள எம்ஈஎஸ் பொறியியல் கல்லூரியின் மாணவர்களான நாங்கள் ஒன்பது பேரும் உடனடியாக ஒன்றிணைந்து ஆறு மாதத்தில் ஒரு முன்மாதிரியை உருவாக்கினோம்.

இந்த இளம் தொழில்முனைவோர் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் நிதிக்காக போராடினாலும் தற்போது பல வகைகளில் நிதி திரட்டப்படுவதாக தெரிவித்தனர். 80 கிலோ எடையுள்ள இந்த ரோபோவின் விலை சுமார் 3-5 லட்ச ரூபாயாகும். இந்த இயந்திரத்தில் பாதாள சாக்கடைக்குள் செல்லும் பகுதியின் எடை மட்டும் 30 கிலோவாகும்.

கட்டுரை : THINK CHANGE INDIA