அமெரிக்க பணியைத் துறந்து ஆட்டுப்பண்ணை துவங்கி லட்சங்களில் சம்பாதிக்கும் விஞ்ஞானி!

8

பெரும்பாலான இளைஞர்கள் அமெரிக்காவில் பணியில் சேரவே விரும்புவார்கள். அதற்காகவே பல ப்ரொஃபஷனல்கள் கடுமையாக உழைக்கின்றனர். எனினும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு இளம் விஞ்ஞானி அமெரிக்கப் பணியைத் துறந்து தனது கிராமத்தில் ஆடுகளை வளர்க்கத் துவங்கினார். புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் பரத் தற்போது லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார்.

இவரது அப்பா பகவத் பரத் நீர்பாசனத் துறையின் முன்னாள் பொறியாளர். இவர் தனது மகன் சிறப்பாக கல்வி கற்று அதிக சம்பளத்துடன் கூடிய சிறந்த பணியில் சேரவேண்டும் என விரும்பினார். அபிஷேக் அப்பாவின் கனவை நிறைவேற்றி அமெரிக்காவில் ஒரு பணியில் சேர்ந்தார்.

அபிஷேக் 2008-ம் ஆண்டு பஞ்சபராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீத் கல்வி நிறுவனத்தில் பிஎஸ்சி முடித்தார். அதன் பிறகு அறிவியலில் முதுகலை பட்டம் பெறவும் லூசியானா மாநில பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டரேட் பெறவும் அமெரிக்காவிற்குச் சென்றார். 2013-ம் ஆண்டு டாக்டரேட் முடித்ததும் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக பணி கிடைத்தது. இரண்டாண்டுகள் பணியாற்றிய பிறகு அவருக்கு பணியில் திருப்தி ஏற்படவில்லை.

கிராமத்திலிருந்த பெற்றோரிடம் திரும்ப வேண்டும் என்கிற விருப்பத்தை பல்கலைக்கழகத்தில் தெரிவித்ததும் அவரது முடிவை ஏற்றுக்கொண்டனர். வீடு திரும்பியதும் அபிஷேக் விவசாயம் சார்ந்த வணிகத்தைத் துவங்க விரும்புவதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டார். ஆடு வளர்ப்பிற்கான கொட்டகையை வாடகைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தார். ஆரம்பத்தில் கொட்டகையில் 120 ஆடுகள் வைக்கப்பட்டன. எனினும் ஓராண்டில் ஆடுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி தற்போது 350-ஆக அதிகரித்துள்ளது.

அபிஷேக் ஆடுகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். அதன் கொட்டகையை சுத்தமாக வைத்துக்கொண்டார். ஆடுகளுக்கு உணவளிப்பதற்காக சோளம் உள்ளிட்ட சிறுதானிய வகைகளை ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்டார். அபிஷேக் தற்போது ஆட்டுப் பண்ணை வணிகம் மூலமாக 10 லட்ச ரூபாய் லாபம் ஈட்டுகிறார். வருங்காலத்தில் ஆடுகளின் எண்ணிக்கை அதிகரித்து லாபத்தையும் அதிகரிக்க உள்ளார்.

அபிஷேக் மற்றவர்களின் வெற்றிக்கு உதவும் விதத்தில் இளம் விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறார். இதற்காக ஒரு குழுவை உருவாக்கி இலவச வொர்க்ஷாப்கள் நடத்துகிறார். இதனால் பல விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.

கட்டுரை : Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL