அன்பு மகளால் இணையத்தில் வைரலாகி புகழ் பெற்ற அப்பா!

0

இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்ற நட்சத்திரங்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களில் பலர் லட்சக்கணக்கான ஃபாலோயர்களையும் பெற்றிருக்கின்றனர். இந்த பட்டியலில் பகுதி நேர புகைப்படக் கலைஞரான ஒரு பைலட்டும் சேர்ந்திருக்கிறார். அதிலும் எப்படித்தெரியுமா? ஒரே நாளில் இணையத்தில் வைரலாகி, நட்சத்திரமாகவும் ஆகியிருக்கிறார்.

அவருக்கு இணைய புகழ் தேடி வந்த கதையை கேட்டால் ஆச்சர்யமாகவும் இருக்கும். நெகிழ்ச்சியாகவும் இருக்கும். ஏனெனில் அவரது அன்பு மகள் விடுத்த ஒரு கோரிக்கை தான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைரலாக்கி லட்சக்கணக்கில் ஃபாலோயர்களையும் பெற்றுத்தந்துள்ளது.

இந்த அப்பா-மகள் இன்ஸ்டாகிராம் வெற்றிக்கதையை உருவான விதத்தை பார்க்கலாம்.

49 வயதாகும் பில் யங் பைலட்டாக இருக்கிறார். அவருக்கு புகைப்படக்கலையிலும் ஆர்வம் உண்டு. பைலட்டாக உலகம் முழுவதும் பறப்பவர் பல நகரங்களில் காணும் காட்சிகளை எல்லாம் கிளிக் செய்யும் பழக்கமும் கொண்டிருந்தார். இந்த காட்சிகளை அவர் புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொண்டு வந்தார்.

ஆனால் பில் யங் வித்தியாசமான ரசனை கொண்டிருந்தார். அவர் எல்லாவிதமான காட்சிகளையும் கிளிக் செய்வதில்லை. மாறாக தான் தங்கும் ஹோட்டல் அறைகளில் உள்ள கார்பெட்களை மட்டும் கிளிக் செய்து பகிர்ந்து கொண்டு வந்தார். கார்பெட்களின் கலைநயத்தில் மனதை பறிகொடுத்தவர் இன்ஸ்டாகிராமில் அவற்றை ஆர்வத்தோடு பதிவு செய்து வந்தார்.

2015-ம் ஆண்டு முதல் இப்படி கார்பெட் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். ஆனால் அந்த பக்கத்திற்கு பெரிய அளவில் வரவேற்பெல்லாம் கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் அவர் வெறும் 83 ஃபாலோயர்களையே பெற்றிருந்தார். இது குறித்து அவர் அதிகம் கவலைப்பட்டதும் இல்லை. ஃபாலோயர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்ததும் இல்லை.

ஆனால், அவரது அன்பு மகள் ஜில் யங் இதை மாற்றிக்காட்ட விரும்பினார். தந்தை எடுக்கும் அருமையான கார்பெட் படங்களின் ரசிகையான ஜில், மற்றவர்களும் தந்தையின் கலையை ரசிக்க வேண்டும் என விரும்பினார். அது மட்டும் அல்ல அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைரலாக்கி புகழ்பெற வேண்டும் என்றும் விரும்பினார்.

இந்த எண்ணத்தோடு தனது டிவிட்டர் பக்கம் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். 

’கிற்ஸ்துமசுக்கு நான் விரும்புவதெல்லாம், அப்பாவின் இன்ஸ்டாகிராம் கார்பெட் பக்கம் வைரலாக வேண்டும் என்பது தான். தயவு செய்து இதை நிகழ்த்திக்காட்ட உதவுங்கள்,” 

என்று ஒரு வேண்டுகோளை டிவீட் செய்து அதனுடன் அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் இணைந்திருந்தார். அவ்வளவு தான், அவரே எதிர்பார்த்திராத அளவுக்கு அந்த பக்கம் பிரபலமாகத்துவங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் ஜில்லின் வேண்டுகோள் டிவீட்டிற்கு விருப்பம் (லைக்) தெரிவித்ததோடு அதை ரிடிவீட்டும் செய்தனர். விளைவு அந்த டிவீட் மேலும் பரவி வைரலானது. அடுத்த சில நாட்களில் பார்த்தால், அந்த டிவீட் 25,000 முறை விரும்பப்பட்டு, 8,000 முறை ரிடிவீட் செய்யப்பட்டது.

அது மட்டும் அல்ல, வெறும் 83 ஆக இருந்த பில்லின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தொட்டது. இந்த ஆதரவை பார்த்து பில் மட்டும் அல்ல அவருக்காக வேண்டுகோள் விடுத்த ஆசை மகளும் திக்குமுக்காடிப்போனார். இதனிடையே பத்திரிகைகள், மற்றும் இணையதளங்கள் இந்த நிகழ்வு பற்றி செய்தி வெளியாக பில்லின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மேலும் ஆதரவு குவிந்தது. அடுத்த சில நாட்களில் ஆயிரம் பல்லாயிரமாக, லட்சங்களையும் தொட்டது.

”என் அப்பாவுக்கு 1.5 லட்சம் ஃபாலோயர்கள் மேல் கிடைத்துள்ளனர். இந்த கிறிஸ்துமஸ் கனவை நினைவாக்கியதற்காக நன்றி. இது நம்ப முடியாமல் இருக்கிறது,” என ஜில் தனது டிவிட்டர் பக்கத்தில் தாள முடியாத உற்சாகத்துடன் நன்றி கூறியிருந்தார். அவரது அப்பாவுக்கு அதைவிட ஆனந்தம்,“ நம்ப முடியாத நாள். 

இது ஹோட்டல் கார்பெட் படம் அல்ல. என் வீட்டு வரவேற்புப் படம். என்னுடைய அருமை மகள் டிவிட்டரில் விடுத்த வேண்டுகோளால் எனக்கு இணைய புகழ் கிடைத்திருக்கிறது’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். அப்போது அவருக்கு 2.83 லட்சம் ஃபாலோயர்கள் கிடைத்திருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை ஆறு லட்சத்தை தொட இருக்கிறது.

அப்பாவுக்கு கிடைத்துள்ள திடீர் புகழால் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் கல்லூரி மாணவியான ஜில், அப்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், ஆனால் அதை பிரபலமாக்க அவர் முயற்சிக்காதது குறித்து வருத்தம் இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அப்பாவுக்கு புகழ் பெறுவது எல்லாம் நோக்கமாக இல்லை, அவருக்கு கார்பெட்களை பிடித்திருந்தது அதனால் படமெடுத்து பகிர்ந்து கொண்டு வந்தார் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்பாவை பிரபலமாக்க தான் மேற்கொண்ட முயற்சி பலன் அளித்தது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் பல லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் பெற்றவர்கள் பலர் இருந்தாலும், இப்படி ஒரே ஒரு டிவீட்டால் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை சில நாட்களில் ஒருவர் பெற்றிருப்பது அபூர்வமானது தான்.

இந்த ஆச்சர்யத்தை ஜில் தனது டிவிட்டர் பக்கத்தில் (@jillisyoung ) விடாமல் பதிவு செய்து கொண்டிருக்கிறார். பில்லின் கார்பெட் படங்களில் அப்படி என்ன இருக்கிறது என பார்க்க விரும்பினால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு விஜயம் செய்யலாம்: https://www.instagram.com/myhotelcarpet/

ஆனால் ஒன்று, அவரது கார்பெட் படங்கள் கலைநயம் மிக்கவையாக இருப்பதை மறுப்பதற்கில்லை. டிவிட்டரில் அவருக்கு ஆதரவு தெரிவித்த பலரும் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். இது அருமையான ஐடியா, இது போன்ற படங்களை பார்க்க விரும்புகிறோம், இவை கலை படைப்புகள் என்றெல்லாம் புகழ் பாடியிருக்கின்றனர்.

ஆக, இன்ஸ்டாகிராமில் புகழ் பெற வேண்டும் என்றால், வித்தியாசமான ஐடியா அடிப்படையில் படங்களை பகிர்ந்து வர வேண்டும். அப்படியே பில்லின் அன்பு மகள் போல ஒரு ஆசை மகளும் இருக்க வேண்டும் போலும்!

Related Stories

Stories by cyber simman