நெகிழ்ச்சியான பல நிஜ தருணங்களை வெளிக்கொண்டு வந்த கேரள வெள்ளம்!

0

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள மாநிலம் கடுமையான மழை பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை என அனைத்தும் வெள்ளத்தின் அளவிலா பசிக்கு உணவானது. இதனால் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை முற்றிலும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் படுகின்றனர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கி தவிக்கும் மக்களையும் ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.

ஆலுவா பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. வெள்ளப் பாதிப்புகளினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்க, அப்பகுதியில் இருந்த சஜீதா ஜபீல் என்ற கர்ப்பிணிப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதிக்கு விரைந்த கடற்படையினர், பத்திரமாக சஜீதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெள்ளம், பிரசவம் என மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டு வந்த சஜீதா ஜபீலுக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கேரள மாநிலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் முழுமூச்சாய் பணியாற்றும் கடற்படை உள்ளிட்ட அனைத்து மீட்புக்குழுவினருக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

நிலச்சரிவுகளும் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளமும் சாப்பாட்டுக்கு வழியில்லாத குழந்தைகளின் அழுகைகளும் தொடர்ந்துகொண்டே உள்ளன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே உள்ளது. இயற்கையின் கோரத்தாண்டவத்தால் சிக்கி பரிதவிக்கும் கேரளத்துக்கு அண்டை மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன.

கேரளாவில் பத்திரிகையாளர் ஒருவரின் செயல், பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேசபிமாணி என்ற கேரள பத்திரிகையில் எடிட்டராக இருப்பவர் மனோஜ். இவர் தன் மகளுக்கு 19ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்தார். கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்திய மனோஜ், அந்தப் பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். இந்த முடிவை மணமகன் வீட்டாரும் வரவேற்றனர். இது தொடர்பாக மனோஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 

`என் மகள் தேவி மற்றும் வழக்கறிஞர் சுதாகரன் ஆகியோருக்கு 19-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. கேரளாவின் இயற்கைப் பேரிடரைக் கருத்தில் கொண்டு நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வைத்தோம். இருவீட்டாரும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு, நிச்சயதார்த்தத்துக்காகச் சேர்த்து வைத்த பணத்தை வழங்கினோம்' என்று பதிவிட்டுள்ளார்.

கேரளாவில் பரவூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 101 வயது பெண்மணியை விமானப்படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். 

மீட்புப் பணியின்போது இந்தியக் கடற்படையைச் சேர்ந்த கேப்டன் பி.ராஜ்குமார் சாதுர்யமாகச் செயல்பட்டு 26 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இவரது சேவை அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது. 

மீட்புப் பணியில் ஈடுபடுவது விமானிகளுக்குக் கடும் சவாலாக உள்ளது. மோசமான வானிலையும்கூட சேர்ந்ததால் ஹெலிகாப்டர்களை இயக்குவதும் அவர்களுக்கு சவால்தான். இந்த இடர்பாடுகளையும் பொருட்படுத்தாமல், ஆபத்தான பகுதிகளையும் கடந்து, SK42B ரக ஹெலிகாப்டரை கவனமாக இயங்கியுள்ளார் கேப்டன் ராஜ்குமார். இவரது, விடாமுயற்சியால் வெள்ளத்தில் சிக்கிப் போராடிய 26 பேரை பத்திரமாக மீட்டுள்ளார். இவரது, துணிச்சலான சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர். முன்னதாக, கேப்டன் ராஜ்குமாரின் சேவையைப் பாராட்டி ஷ்வரியா சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

அலுவா பகுதியில் உள்ள நிவாரண முகாமிற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் உட்பட ஏராளமானோர் லாரிகளில் கொண்டு வந்து இறக்கப்படும் காட்சி மனதை உலுக்குவதாக அமைந்துள்ளது. கட்டப்பன்னா பகுதியில் குமுளி - இடுக்கி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தின் மங்கலம் அணைப்பகுதியில் தற்காலிக மரப்பாலம் அமைத்த மீட்புப்படையினர், அதன் வழியாகச் சென்று கிராமப்பணிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். 

கொடகு பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புப்படையினர் கயிறுகள் கட்டி மீட்டு, நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர். கொச்சியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கடற்படையினர், ஹெலிகாப்டரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்

பொள்ளாச்சியில் கேரளா செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2 நாட்களுக்கு மேலாக வாகனங்கள் நிற்பதால் ஏராளமான பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.

கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நாமக்கல்லில் இரண்டரை கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. திண்டுக்கல்லில் கேரளாவுக்கு அனுப்ப வேண்டியை 40 டன் பூக்கள் தேங்கியுள்ளன. பூக்களை வாங்க யாரும் இல்லாததால், அவை குப்பையில் கொட்டப்படுவதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுரையாளர்: ஜெசிக்கா

Related Stories

Stories by YS TEAM TAMIL