ஐஐடி டூ கல்விச்சேவை: சாலையோர சுட்டிகளுக்கு வருணின் வீதியோர பாடசாலை!

0

குடிசைப் பகுதி வாழ் குழந்தைகளுக்கு தரமான கல்வி அளித்து நல்ல எதிர்காலத்துக்கு பாதை காட்டும் நோக்கத்தில், உபே (UPAY - Under Privileged Advancement by Youth) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் வருண் ஸ்ரீவத்சவா.

என்.டி.பி.சி.யில் பணிபுரியும் வருண், ஐ.ஐ.டி. கரக்பூரில் படித்துக் கொண்டிருக்கும்போது, வறுமையில் வாடும் குழந்தைகளைக் கண்டு கலங்கியிருக்கிறார். குறிப்பாக, அவர்கள் தெருக்களிலும் போக்குவரத்து சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதைக் கண்டு மனம் வருந்தியிருக்கிறார். அத்தகைய ஏழைச் சிறுவர், சிறுமிகளின் எதிர்காலத்துக்காக ஏதாவது செய்தே தீர வேண்டும் என்று தீர்மானித்தார்.

ஏழைக் குழந்தைகளை முன்னேற்றும் நோக்குடன் நாக்பூரில் 2010-ல் உபே என்ற பெயரில் என்.ஜி.ஓ. ஒன்றைத் தொடங்கினார். நகரின் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று, பெற்றோர் பலரையும் சந்தித்துப் பேசிய அவர், தன் நோக்கத்தை எடுத்துரைத்தார். வருண் உடன் அவரது நண்பர்களும் கைகோர்த்து குடிசைப் பகுதி குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரத் தொடங்கினர். இன்று, உபே-வில் 120 தன்னார்வலர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர துறையினர் அடங்கிய குழுக்கள் இருப்பதைப் பெருமிதமாக அடுக்கும் வருண் விவரிக்கிறார்...

"ஆரம்ப காலத்தில் நிறைய இடர்பாடுகளைச் சந்தித்தோம். நாங்கள் பாடம் நடத்திய குழந்தைகள் அதற்கு முன் பள்ளிக்கே செல்லாதவர்கள். அவர்களிடம் பேசி, உணவு ஊட்டி, விளையாடவும் செய்தோம். ஒரு வழியாக, அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டதன் பலனாக, அந்தக் குழந்தைகளுக்கு படிப்பு மீது நாட்டம் வரவழைக்க முடிந்தது."

இதைவிட, பெற்றோர்களை எதிர்கொள்வதுதான் வருண் மற்றும் அவரது நண்பர்களின் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. இதுகுறித்து வருண் கூறும்போது, "குழந்தைகளைப் படிக்க அனுப்பிவிட்டால், அவர்களை வைத்து சிக்னல்களில் பொருட்களை விற்பது, பிச்சை எடுப்பது போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயை இழக்க நேரிடும் என்பதால் பெற்றோர்கள் தயங்கினர். அவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைத்து, பிள்ளைகளைப் படிக்க அழைத்து வருவதே பெரும் போராட்டம். எனினும், விடா முயற்சியால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தினோம்" என்கிறார்.

உபே தற்போது இரண்டு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒன்று 'ரீச் அண்ட் டீச்'. அதாவது, தன்னார்வலர்கள் பயணம் செய்து, குழந்தைகள் உள்ள குடிசைப் பகுதிகள், தொழிலாளர் முகாம்கள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று பாடம் சொல்லித் தர வேண்டும். இதற்கு, பள்ளிக் கட்டிடங்கள், அங்கன்வாடிகள் போன்ற அரசு கட்டிடங்களைப் பயன்படுத்திக்கொள்வர். அப்படி எதுவும் கிடைக்கவில்லை எனில், தற்காலிகமாக ஒரு டென்ட் கொட்டகையை அமைத்து அங்கேயே குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தருவர்.

'ரீச் அண்ட் டீச்' திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு 'பாட்ச்' வாரியாக பாடங்கள் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்துக்கும், வகுப்புக்கும் ஏற்றவாறு பாடத்திட்டம் வடிவமைத்தும் மேம்படுத்தியும் செயல்படுத்தப்படுகிறது. ஓர் எழுத்து கூட எழுதப் படிக்க முடியாத சிறுவர்கள் இப்போது 90% மதிப்பெண்களைப் பெறுகின்றனர் என்று பெருமிதத்துடன் பகிர்கிறார் வருண்.

இரண்டாவது திட்டத்தின் பெயர் 'ஃபுட்பாத் ஷாலா'. நடைபாதைகளிலும் தெருக்களிலும் வசிக்கும் வீடில்லா குழந்தைகளுக்கான கல்வித் திட்டம் இது. போதுமான வசதிகள் இல்லாத சூழலிலும், சாலை ஓரங்களிலேயே இந்தக் குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் படிப்புச் சொல்லித் தருவார்கள். எழுத்தறிவு பின்னணி இல்லாத குடும்பங்களில் இருந்து வருவதால், இந்தக் குழந்தைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அவர்களுக்கு ஏற்றாற்போல் பாடம் சொல்லித்தரப்படும்.

உபே பாடத்திட்டத்தின் கீழ் வாரத்தில் ஒருநாள் விளையாட்டுகளுக்காகவே ஒதுக்கப்படுகிறது. இன்னொரு நாள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கதை சொல்லும் கலைக்காக ஒதுக்கப்படுகிறது. பள்ளிச் சென்று படிக்க முடியாத குழந்தைகளுக்கு கல்வி அளித்து, அவர்களையும் சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதர்களாக உருவாக்குவதே உபேரின் உன்னத நோக்கம். இதுபற்றி வருண் கூறியது:

"குழந்தைகளை வகுப்புக்கு வரவழைப்பதற்காக, அவர்களுக்கு விளையாட்டு சாதனங்கள், உடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் தருகிறோம். இவற்றுக்கு அதிக செலவு ஆகிறது. ஒவ்வொரு மாதமும் எங்கள் தன்னார்வலர்கள் தங்கள் சொந்தப் பணத்தை செலவிடுவதைத் தவிர்க்க முடியாமல் போகிறது. எங்கள் நோக்கம் மீது நம்பிக்கை கொண்ட நண்பர்கள் சிலர் நன்கொடை அளிக்கின்றனர். இது உபே-வின் நிதி நிர்வாகத்துக்கு உதவுகிறது. நாங்கள் இதுவரை அரசிடமோ அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களிடமோ நிதிக்காக அணுகவில்லை."

தங்கள் மாணவர்களுக்கு பள்ளிகளில் இடம் கிடைப்பது பற்றியும் நம்மிடம் வருண் பகிர்ந்தார். அப்படிச் சேரும் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும், விடுதிக் கட்டணத்தையும் இவர்களே அளிக்கின்றனர். உபே-யில் இருந்து பள்ளிகளில் சேர்ந்த 25 மாணவர்கள் இப்போது நன்றாகப் படித்து வருகின்றனர். நிறைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் வருணின் விருப்பம். ஆனால், அவர்கள் பள்ளிக்கான கட்டமைப்புக்குள் பொருந்தக் கூடிய சூழலில் இல்லை என்பது அவரை கவலைக்குள்ளாக்கும் விஷயம்.

படிப்பு மீது ஆர்வம் காட்டாத பள்ளிக் குழந்தைகளின் திறன் மேம்பாட்டுக்கும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இதில், பெற்றோர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அத்துடன், apnasaamaan.com என்ற இ-காமர்ஸ் தளத்தையும் நடத்தி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற, குடிசை வாழ் மக்களால் தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்திகள், ஊதுபத்திகள் உள்ளிட்ட இதர கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதில் ஈடுபடும் பெற்றோரின் குழந்தைகளின் கல்விக்கே இந்த வருவாய் செலவிடப்படுகிறது.

மத்திய மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் தற்போது உபே-வின் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் மென்மேலும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை சென்றடையவே உபே விரும்புகிறது. அர்ப்பணிப்பு மிக்க தன்னார்வலர் குழுக்களின் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறது. நம் அனைத்துப் பிரச்சினைகளுக்குமே கல்விதான் தீர்வு என்பதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார் வருண். 

"சமூகத்தில் பொறுப்பும் தார்மிகக் கடமையும் மிக்க குடிமக்கள் ஆவதற்கு உதவுவது மட்டும் போதாது; சமத்துவமின்மை உள்ளிட்ட சமூக அவலங்களைப் போக்குவதற்கும் கல்விதான் துணைநிற்கும்" என்கிறார் உறுதியுடன். தன் இலக்கில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டிருந்தாலும், இது நல்லதோர் ஆரம்பமே என ஆர்ப்பாட்டமின்றி உணர்கிறார் வருண்.

ஆக்கம்: சவுரவ் ராய் | தமிழில்: கீட்சவன்