அமித்தவாவின் நாட்டுப்புற கலை வளர்ச்சிக்கான பயணம்

0

இந்தியாவின் ஒவ்வொரு கிராமங்களிலும் கலைகள் மண்டிக் கிடக்கின்றன. ஆனால் கலைஞர்களோ வறுமையில் புதைந்து கிடக்கின்றனர். இக்கலைகளுக்குப் புத்தெழுச்சியையும், கலைஞர்களுக்குப் புதுவாழ்வையும் அளிக்கும் நற் பயணத்தைத் துவக்கியுள்ளார் அமித்தவா.

கரக்பூரில் ஐஐடி பயின்ற அமித்தவா பட்டாச்சார்யா, அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்தார். இந்தியாவை வளமிக்க நாடாக்கும் தன் கனவை நினவாக்க 1999 இல் தனது வேலையை உதறி விட்டு வந்து விட்டார். சமூக வளர்ச்சிக்காக குறிப்பாக கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டிற்காக 'பாங்க்ளாநாட்டக் டாட் காம்' எனும் அமைப்பை உருவாக்கினார். கிராமப் புற தொழில் வளர்ச்சிக்கு பாரம்பரயமான நாட்டுப்புற பேச்சுக்கலையையும், நிகழ்த்து கலையையும் பயன்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறார் அமித்தவா.

அமித்வா
அமித்வா

அமித்தவா 200 ஆம் ஆண்டு 'ஆர்ட் ஃபார் லைவ்லிஹுட்' (Art For Livelihood) எனும் அமைப்பை நிறுவினார். இதில் 3200 கிராமியக் கலைஞர்களை இணைத்துக் கொண்டு மேற்க வங்கத்தின் 6 பாரம்பரிய கலைவடிவங்களின் மூலமாக 6 மாவட்டங்களில் பாங்க்லா நாட்டக் டாட் காம் அமைப்பைப் பரப்புரை செய்யும் திட்டத்தை மேற்கொண்டார். "மக்களை ஊடுறுவ கலாச்சாரம் ஓர் மகத்தான வடிவம். கிராமப் புறத் தொழில் வளர்ச்சிக்கு நமது பாரம்பரியமான பேச்சுக் கலையும், நிகழ்த்து கலையும் ஒரு அற்பதமான மூலதனச் செல்வம். பயிற்சி மற்றும் செழுமைப்படுத்துதலின் வாயிலாக நமது பாரம்பரியக் கலை வடிவங்களைப் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது AFL. இந்தியாவில் உள்ள கலை வடிவங்களையும், பாரம்பரிய தொழில் நுணுக்கங்களையும் மேம்படுத்துவதற்கு புதிய சந்தை மற்றும் புதிய வர்த்தகப் பெயர்களை வளர்த்தெடுக்கலாம். வாழ்வாதாரத்திற்கும், மக்கள் ஊக்கத்திற்கும் பாரம்பரியம் புதிய அர்த்தத்தை வழங்குகிறது. ‘கலைகளைப் பாதுகாப்போம், கலைஞர்களுக்கு வாழ்வளிப்போம்’ என்பதே எங்களது இலட்சியம். சமூகப் புறக்கணிப்பு, வறுமை, விளிம்பு நிலை ஆகியவற்றைப் பொதுத் தளத்தில் முன் வைப்பதற்கு பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதை எங்களது நோக்கமாகக் கொண்டுள்ளோம்’’ என்று விளக்குகிறார் அமித்தவா.

மேற்கு வங்கம், பிகார், ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 14000 கலைஞர்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு தொடக்க நிலையிலேயே AFL ஒரு கருவியாகச் செயல்பட்டுள்ளது. இன்று AFL பல லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது. புதிய பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. ஊடகங்களின் ஆதரவைப் பெற்று அதன் மூலமாக புதிய தன்னம்பிக்கையை ஈட்டியுள்ளது. ஊரகத் தொழிலினருக்கு உருவாக்கித் தந்த சந்தைத் தொடர்பின் மூலமாக நிலையான சமூக பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்துள்ளது. இந்த முன்வடிவம் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த முறையினை பாராட்டியதுடன், பாங்க்லா நாட்டக் டாட்காம் அமைப்பைத் தனது பாரம்பரிய குழுவிற்கு ஆலோசனை வழங்குமாறு 2010 இல் அறிவித்தது யுனெஸ்கோ தலைமை.

"கலைகளில் வைக்கப்படுகிற மூலதனம் திறனற்ற அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு கலைஞர்கள் என்ற அடையாளத்தையும் நுண் பொருளாதார வளர்ச்சிக்கான ஊக்கத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் கெடு வினையாக நமது சமூகக் கலாச்சாரத்திற்கு அளிக்கப்படும் மூலதனம் மிகக் குறைவாக இருக்கிறது. அவற்றிற்கு போதிய விளம்பரங்கள் கிடைப்பதில்லை. நமது கலைகள் கிராமியத் திருவிழாக்களில் நிகழ்த்தப்படுகிற ஒன்றாக மட்டுமே சுருங்கிக் கிடக்கின்றன. ஏனென்றால் தொழில் திட்டத்தினரும், தொழில் பயில்வோரும் நமது கலைகளை வளர்ச்சிக்கான பாதை என்று கருதுவதில்லை. உலகளாவிய சந்தைப் பொருளாதார நெருக்கடியில் நமது கலைகளுக்கு போதிய முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. நமது நிலைத்த பொருளாதார வளர்ச்சியில் பாரம்பரியக் கலைகள் முதன்மைப் பங்காற்ற முடியும் என்று கருதுகிறேன். பொருளியல் லாபத்தில் தமக்குரிய பங்கு வழங்கப்படும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டால், கிராமியக் கலைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை ஒரு முறை கண்டு விட்டால் தமது கலாச்சாரத்தில் கலைகளுக்கு இருக்கும் மதிப்பைத் தெரிந்து கொண்டால் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தாமாகவே முன்வந்து ஏற்பார்கள் கலைஞர்கள். கலாச்சாரத்திற்கு முன்னுரிமையும், மூலதனமும் அளிக்கப்பட வேண்டியுள்ளது. தேசிய, சர்வதேசிய அளவில் கொள்கை வகுப்பாளர்களும், திட்டத்தை வடிவமைப்பவர்களும் கலைகளையும் கலைஞர்களையும் ஒருங்கிணைப்பதில் இருக்கும் முக்கியத்துவத்தை உணர வேண்டியுள்ளது’’ என்கிறார் அமித்தவா.

AFL கடமைகளின் ஒரு பகுதியாக பாங்க்லா நாட்டக், மே.வங்கம், பிகார் மாநிலங்களில் கலாச்சார சுற்றுலா வளர்ச்சியிலும், மக்கள் ஒற்றுமை பேணுவதிலும், இயற்கை மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. உள்ளூர் மக்களுக்கும், கலாச்சார சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதன் மூலம் சுற்றுலாக் கல்வியை மேம்படுத்தக் கூடிய நாட்டுப்புறக் கலை மையங்களை கலைக் கிராமங்களில் நிறுவியுள்ளது AFL. அதன் மூலம் சுற்றுலாப் பயணிகளிடம் கிராம மக்கள் தங்களது பாரம்பரியத்தைப் பகிர்கின்றனர். பயணிகள் வரலாற்றைத் தம்முடன் எடுத்துச் செல்கின்றனர். உள்ளூர் சமூக கட்டமைப்பை மேம்படுத்தவும், கலாச்சார சுற்றுலாவைப் பாதுகாப்பத்தில் தமக்குள்ள பொறுப்பை மக்கள் உணரவும் நுண் சமூகப் பொருளாதாரத்தின் மூலம் மக்களை வலிமை பெறச் செய்வதிலும் இக் கலை மையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. கிராமியக் கலைஞர்கள் புதுமையான சுற்றுலாத் தயாரிப்புகளை உருவாக்குவதற்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. 

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கிராமியப் பாடகர்களைக் கொண்டு நிகழ்த்தும் இசை நிகழ்ச்சிகளில் பிரபல இசையமைப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள். வெளிநாட்டுச் சுற்றுலாவினர் இயற்கையான மலர்களையும், பழங்களையும் பறிக்கக் கற்றுக் கொள்வதோடு கிராமிய ஓவியர்களிடமிருந்து இயற்கையான வண்ணங்களில் ஓவியம் வரையவும் கற்றுக் கொள்கிறார்கள். நாட்டுப்புறக் கலைகள் வளர்ச்சிக்கான திருவிழா நிகழ்ச்சிகளும் சுற்றுலாப் பயணிகள் வருகையின் போது நிகழ்த்தப்படுகின்றன. இதன் மூலமாக பெருமளவிலான நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. மே.வங்க ஓவியக் கிராமங்களான மதுபாணி போன்றவற்றிலும், சூஃபி இசைக்கலைஞர்கள் உள்ள மலைக் கிராமங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

"கலாச்சாரப் பன்மைத்துவத்தை மேம்படுத்தவும், இளைஞர்கள் பங்கேற்கவும், விளிம்பு நிலைக் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நகர்ப்புறங்களில் கலாச்சாரத் திருவிழாக்களை ஏற்பாடு செய்கிறோம். இதன் வாயிலாக நகர்க் கலைஞர்களுக்கும், கிராமியக் கலைஞர்களுக்கும் இடையிலான உறவு மேம்படுகிறது. ஆண்டுதோறும் கொல்கத்தா, கோவா, டெல்லி, பிகார் போன்ற இடங்களில் சூஃபி சூத்ரா நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். இந்நிகழ்ச்சிகளில் மே.வங்கத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள், சர்வதேசக் கலைஞர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் இதுவரை 27 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதுதான் உண்மையான சர்வதேசக் கலை நிகழ்ச்சி’’ என்று விளக்குகிறார் பட்டாச்சார்யா.

சில ஆண்டுகளாக AFL கலைஞர்களின் வாழ்க்கையில் பிரம்மாண்டமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களின் திறமை தேசிய மற்றும் சர்வதேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. ‘’நாட்டுபுறக் கலைஞர்களின் மாதந்திர சராசரி வருமானம் 8 அமெரிக்க டாலரில் இருந்து இன்று 40 டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. கலைஞர்களில் 40% பேருக்கு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பது முதன்மையான வாழ்வாதாரமாக இருக்கிறது. மற்றொரு பகுதி 40% கலைஞர்களுக்கு இரண்டாம் நிலை வருமானமாக இருக்கிறது. இன்னுமொரு 10% கலைஞர்கள் மாதத்திற்கு சுமார் 250 டாலர்கள் சம்பாதிக்கின்றனர். கலைக் கிராமங்களில் 10% இருந்த சுகாதாரம் இன்று 80% உயர்ந்துள்ளது. கலைஞர்கள் பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி சிறப்பான கல்வி அளிக்கின்றனர். கலை நிகழ்வுகளில் பங்கேற்கும் கிராமியக் கலைஞர்களின், பெண்களின் அதிக பட்ச வயது 28 ஆக இருந்தது இன்று 40 ஆக உயர்ந்துள்ளது’’ என்கிறார் அமித்தவா.

மே.வங்கத்தின் தனித்துவமான கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் கைவினை மற்றும் நுட்பக் கலைஞர்களின் கலைப் படைப்புகளை மேம்படுத்துவதற்காக அமித்தவா 10 கிராமங்களில் இருந்து பணியாற்றி வருகிறார். இக்கலைப் படைப்புகளில் டெரகோட்டா (சுடுமண் சிற்பங்கள்) டோக்ரா, காந்தா பூத்தையல், மரப் பொம்மைகள், மதுர்காதி, சிடல்பதி, படச் சித்ரம், சாவ் முகமூடி, களிமண் சிற்பங்கள் போன்றவை அடங்கும். "மே.வங்கம் கலைப் படைப்புகளுக்குப் பெயர் பெற்றவை. இவற்றைத் தயாரிப்பதில் சுமார் 5,50,000 கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படிக் கலைப் படைப்புகள் சர்வதேச, தேசிய அளவில் பிரபலம் அடைந்திருப்பதால் கலைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பாகவும் அமைகிறது. ஏற்றுமதிக்கான வாய்ப்பும் பெருமளவு உயர்ந்துள்ளது. மிகக் குறைந்த வருமானம் பெற்று வந்த இக்கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் தாழ்வான நிலையிலேயே இருந்து வந்தது. இன்று சர்வதேசச் சந்தை உருவாக்கப்பட்டிருப்பதால் கிராமிய அடித்தட்டுச் சமூகங்கள் தங்களுக்குரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. கிராமியக் கலைஞர்கள் பொருளாதாரப் பலன்களும், அங்கீகாரமும் பெற்றுள்ளதால் அவர்களது பெருமிதமும் தன்னம்பிக்கையும் உயர்ந்துள்ளது. கலைக்கான வாழ்வு என்ற கருத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக மேற்கு வங்க அரசின் MSSE (சிறு மற்றும் குறு தொழில்கள் & நெசவு) துறை மற்றும் யுனெஸ்கோ ஆதரவுடன் பத்து கிராமங்களை மாதிரிக் கிராமங்களாக வளர்த்தெடுக்கிறோம்’’ என்று தெரிவிக்கிறார் அமித்வா.

‘’எங்கள் தனித்துவ முயற்சி’ ‘கேமரா’ ‘எங்கள் நகரம், எங்கள் தேவதை’ எனும் பயிற்சித் திட்டத்தில் கொல்கத்தா, புவனேஷ்வர், கோவா ஆகிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று புகைப்படக் கலை பயின்று தங்களது நகரங்களின் மேன்மையை காமிரா லென்சுகள் மூலமாகப் படம் பிடித்துள்ளனர். அப்படங்கள் பல்வேறு பொது இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. தங்களது வளமையையும், வரலாற்றுச் சிறப்பான இடங்களையும் கண்டு வியந்து போற்றினர் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்’’ என்று கூறினார் பாங்க்லா நாட்டக் டாட்காம் அமைப்பின் இணை நிறுவனரான அமித்தவாவின் மனைவி.

நாட்டுப்புற பாடல்கள் மீது மிகவும் ஆர்வம் கொண்ட அமித்தவா, தனது வழக்கத்திற்கு மாறான உடையில் கிராமியப் பாடகர்களுடன் பங்கேற்றுப் பாடும் போது அவரை உங்களால் அடையாளம் காண முடியாது. AFL உருவாக்கிய முன் மாதிரியைப் பின் பற்ற விரும்புவோருக்காக ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் கருத்தரங்குகளில் பங்கேற்று அமித்தவா உரையாற்றி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். பல நாட்டுப்புறக் கலைஞர்களை இந்தியா முழுவதிலும் அங்கீகாரம் பெறச் செய்வதற்காகத் திட்டமிட்டு வருகிறார். கலைத் திறமைகள் வாழ்வாதாரமாக மாற்றப்பட வேண்டும் என்பதற்கான கொள்கைத் திட்ட உருவாக்கத்தில் தற்பொழுது ஈடுபட்டுள்ளார் அமித்தவா.

இணையதள முகவரி: BanglaNatak.com

ஆக்கம்: பைசாலி முகர்ஜி |தமிழில்: போப்பு