இந்திய நகரங்களின் எழுச்சியும், வளர்ச்சியும்; வேலைவாய்ப்பு சவால்களும்! 

0

இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது. பொருளாதார சீர்திருத்தங்கள் புதிய முதலீடுகளை ஈர்த்து, மக்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளன. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது நல்ல அறிகுறி என்றாலும், இந்த வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக்கொள்வது தொடர்பான கேள்விகளும் இருக்கின்றன. ஏனெனில், நகரப்புற மற்றும் கிராமப்புற இயக்கங்களை, அலுவல் அமைப்புகளை மாற்றி அமைப்பது, ஜிடிபியை பரவலாக்குவது ஆகியவை அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானவை.

இந்திய நகரங்கள் மோசமானதொரு முரணை எதிர்கொண்டுள்ளன. அவை கட்டுமான நோக்கில் உலகிலேயே மிகவும் குறைந்த தரை பரப்பை பெற்றுள்ள நிலையில், அதிக மக்கள் தொகை அடர்த்தி மிக்கதாகவும் இருக்கின்றன. மேலும் இந்தியா பொருத்தமில்லாத வகையில் அதிக அளவிலான நிலப்பரப்பை, 48 சதவீத பரப்பை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறது. சுதந்திர காலத்தில் விவசாயம் மூலமான வேலை வாய்ப்பு 75 சதவீதமாக இருந்த நிலை மாறி தற்போது 58 சதவீதம் என ஆகியுள்ள நிலையில் நகரங்களின் எழுச்சி தவிர்க்க இயலாதது.

டென்னிஸ் மற்றும் ஜேராவின் 2014 அறிக்கையின்படி, விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டவர்களின் எண்ணிக்கை 2001ல் 103 மில்லியனில் இருந்து 2011ல் 98 மில்லியனாக குறைந்துள்ளது. 2014 ல், சி.எஸ்.டி.எஸ் நடத்திய விவசாயிகள் ஆய்வு, இதில் பங்கேற்றவர்களில் 62 சதவீதத்தினர், வேளாண்மையை விட்டுவிட்டு நகரத்து வேலை வாய்ப்பை நாடி செல்ல தயாராக இருப்பதாக கூறினர்.

60 சதவீத விவசாயிகள் தங்கள் பிள்ளைகள் நகரங்களுக்கு குடிபெயர வேண்டும் என விரும்புவதாகவும், 19 சதவீதத்தினர் மட்டுமே நகர வாழ்க்கையை விட கிராம வாழ்க்கை மேம்பட்டதாக நினைப்பதாக லோக்நிடி சர்வே தெரிவிக்கிறது. இதனிடையே, இந்த விவசாய நிலங்கள் குறைந்த விளைத்திறனையே பெற்றுள்ளன. எனவே விளைத்திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு விவசாயம் அல்லாத துறைகளிலும் வளர்ச்சி வாய்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

மேம்பட்ட வாழ்க்கை மற்றும் பொதுச்சேவைகளை எளிதாக அணுகும் வசதிகளோடு நகர வாழ்க்கை ஈர்ப்பதால், இந்தியா சேவைத்துறை ஆதிக்கம் செலுத்தும் பொருளாதாரமாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஆனால் நகரமயமாக்கல் நிகழும் வேகத்தை பார்க்கும் போது, இது இந்தியாவுக்கு கொள்கை வகுப்பு மற்றும் நிர்வாக நோக்கில் சவாலானதாக இருக்கும். கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கான இந்த மாற்றம், வேகமாக வளரும் நகரங்களில் அதிக அளவில் மக்கள் குவிவதை உணர்த்துகிறது. இதன் காரணமாக, கிராமங்கள் நகரமயமாகும் அதே நேரத்தில், இந்திய மெட்ரோ நகரங்கள் மேலும் வேகமாக வளரும் நிலை உள்ளது.

மெக்கின்ஸி குலோபல் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள அறிக்கை படி, தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய ஐந்து பெரிய மாநிலங்களின் வளர்ச்சியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இந்த நகரங்களில் கிராமங்களை விட நகரங்களில் அதிக மக்கள் வசிக்கும் நிலை இருக்கும். தேசிய அளவில், நகரமயமாக்கள் பரவலான தாக்கத்தை பெற்றிருக்கும்.

2030ல், இந்தியா ஒரு மில்லியனுக்கு மேல் மக்கள்தொகை கொண்ட 68 நகரங்களை கொண்டிருக்கும், 4 மில்லியனுக்கு மேல் மக்கள்தொகை கொண்ட 12 நகரங்களை மற்றும் 10 மில்லியன் அல்லது அதற்கு மேல் மக்கள்தொகை கொண்ட (தில்லி மற்றும் மும்பை இவற்றில் இரண்டு நகரங்கள்) 6 பெரு நகரங்களை கொண்டிருக்கும். எனவே, மேம்பட்ட வாழ்க்கையை நாடி வேளாண்மையை விட்டு வெளியேறும் இந்த மக்களுக்கு இந்தியா வாழ்வளிக்க வேண்டும் எனில், அது தனது நகர்புறங்களை அலட்சியப்படுத்த முடியாது.

நகர்புறம் என்பது, பெரிய நகரங்கள் மட்டும் அல்ல, வேலைவாய்ப்பை உருவாக்கும் உற்பத்தி, சிறுதொழில்கள், கட்டுமானம் ஆகிய தொழில்கள் அதிக அளவில் நடைபெறும், சிறிய நகரங்கள், பெரிய கிராமங்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது.

எதிர்பார்க்கப்படும் நகரமயமாக்கல் இதனுடன் இணையும் போது நம்முன் உள்ள செயல் எளிதல்ல. நகர்புற மக்கள்தொகை மற்றும் வருமானம் அதிகரிக்கும் போது, வசதிகள் மற்றும் முக்கிய சேவைகளுக்கான தேவையும் அதிகரிக்கும். தற்போதைய வேகத்தில் இது நிகழுமானால், மெட்ரோ நகரங்களுக்கு ஈடு கொடுக்க வேண்டிய உள்கட்டமைப்பு வசதியில் போதாமையே இருக்கும்.

அடுத்த பத்தாண்டுகளின் தேவைக்கு ஈடு கொடுக்க, இந்தியா தனது நகர்புற உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ஜிடிபியில் 8 முதல் 10 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டும். திறன் வளர்ச்சியோடும், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளில் முதலீடு செய்வது இந்த பகுதிகளில் வேலைவாய்ப்பு உற்பத்தித் திறனை மேம்படுத்தும். இந்தியா தனக்கான சொந்த பயணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

வரலாற்றில் இதே போன்ற சவால்களை எதிர்கொண்டுள்ள நாடுகள் மற்றும் நகரங்களிடம் நம் பொருளாதாரம் பாடம் கற்றுக்கொள்ள முடியும். யூ.கே, தென்னாப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்கள் நகரங்களை 10 ஆண்டுகளுக்குள் மாற்றியுள்ளன. நிதி, நிர்வாகம், திட்டமிடல் உத்திகள், துறைசார் கொள்கை மற்றும் நாட்டின் வடிவம் ஆகிய ஐந்து முக்கிய துறைகளின் பரிமானத்தை மாற்றுவதாக அவற்றின் சவால்கள் அமைந்திருந்தன எனலாம்.

இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் தனது நகர்புற பரப்பை இரு மடங்காக, மொத்த பரப்பில் 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்திக்கொள்ள உள்ளது. அதிகரிக்கும் குடிமக்களுக்கு ஏற்ப நகரங்களை உள்ளடக்கிய தன்மை கொண்டதாக மாற்ற சரியான வரைவு திட்டங்கள் மற்றும் திட்டமிட்டலில் முதலீடு தேவை.

ஆனால் முதலில், நகரமயமாக்களுக்கான நிலம் கிடைப்பதற்கு, நில உரிமங்கள் தெளிவாக இருக்க வேண்டும். நில கையகப்படுத்தல்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, இத்தைய பெரிய முதலீட்டிற்கான நிதி திரட்ட, நகரங்கள் தங்கள் சொந்த மக்களை தான் அணுக வேண்டும். நிலங்களை அதிகம் பயன்படுத்துவது, பொதுச்சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது அல்லது அதிக சொத்து வரி மூலம் இது நிகழலாம். எனவே கீழிருந்து நிகழும் மாற்றக்கள், நகர்புற இந்தியாவை அங்கீகரிக்கும் கொள்கை வரையறை மற்றும் இந்த மக்கள் பரப்பை பொருளாதார நோக்கில் பயன்படுத்திக்கொள்ளும் தன்மையுடன் மேலிருந்து ஆதரிக்கப்பட வேண்டும்.

இந்திய நகரங்கள் அளிப்பதற்கு இன்னும் நிறைய உள்ளன என்பதோடு இந்த நகரங்கள் தங்கள் வளர்ச்சி சாத்தியங்களை அடைய அரசிடம் இருந்தும் அதிக ஆதர்வு கிடைக்க உள்ளன.

ஆங்கில கட்டுரையாளர்: வருண் மணியன் | தமிழில்: சைபர்சிம்மன்

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மற்றும் பார்வை கட்டுரையாளருடையவை. யுவர்ஸ்டோரியின் பார்வையை பிரதிபலிப்பவை அல்ல).