பிளாஸ்டிக்கை ஒழிக்க கந்தல் துணிக்கு உயிர் கொடுக்கும் சென்னை அமைப்பு!

3

இன்று தொழில்நுட்பம் அதிகம் வளந்தாலும் அது இயற்கையை பாதிக்கக் கூடாது என்று அதை காக்க பல அமைப்பினர் முயற்சி செய்கின்றனர். இயற்கை விவசாயத்தை தற்பொழுது வரவேற்பது போல் பலர் பிளாஸ்டிக் ஒழிப்பையும் தீவிரமாக பின்பின்பற்றுகின்றனர். அந்த வகையில் தற்பொழுது ஜெர்மனில் வசிக்கும் சுமித்ரா தனது நண்பர் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து சென்னையில் “எகோ மித்ரா” (Eco Mitra) என்னும் அமைப்பை துவங்கியுள்ளார்.

இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகளை பயன்படுத்துவது தான். ஒரு முறை பயன்படுத்தி தூக்கிப்போடும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச் சூழல்களை அதிகம் பாதிக்கிறது அதனால் பயன்படுத்திய துணியை மறுசுழற்சி செய்து விற்கின்றனர்.

“ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் நண்பர் இதே போல் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் அபாயத்தை பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது தான் அந்த அமைப்பை சென்னையில் துவங்கும் யோசனை புலப்பட்டது,” என்கிறார் சுமித்ரா.

ஆனால் இதை, பிளாஸ்டிக்கிற்கு பதில் பயன்படுத்தக் கூடிய துணி பைகள் என்று ஒரு சமூக நலனுடன் பற்றி மட்டும் சிந்திக்காமல் இதன் மூலம் ஓர் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார் சுமித்ரா. பயன்படுத்திய தேவை இல்லாத துணிகளை பெற்று மறுசுழற்சி செய்து பின்தங்கிய தையல்காரர்களிடம் கொடுத்து பைகளாக தைக்கின்றனர். அதன் பின் அப்பைகளை 10 மற்றும் 20 ரூபாய்களுக்கு விற்று அந்த பணத்தை அவர்களிடம் ஒப்படைக்கின்றனர்.

“தற்பொழுது எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் கிடைத்துள்ளது; இதனால் எங்களுடன் இணைந்து இருக்கும் பெண் தையல்காரர்கள் ஓர் வருமானம் பெறுவதை கண்டு மகழ்ச்சி அடைகிறார்கள். குழந்தைகள் படிப்புக்கு உதவுவதாக தெறிவிக்கிறார்கள்.”

சுமித்ரா சென்னையில் இல்லை என்றாலும் ஏற்கனவே பல அரசு சாரா அமைப்புடன் இணைந்து செயல் பட்டு வருகிறார். அதன் மூலம் கிடைத்த பல தன்னார்வளர்களை கொண்டு ஜெர்மனியில் இருந்து கொண்டே எகோ மித்ராவை இயக்குகிறார். பைகள் தைக்க தேவையான துணிகளை சமுக ஊடகங்கள் மூலமும், தெரிந்தவர்களிடம் இருந்தும் பெறுகின்றனர்.

சுமித்ரா மற்றும் ஸ்ரீகாந்த்
சுமித்ரா மற்றும் ஸ்ரீகாந்த்
“பைகளோடு நின்றுவிடாமல், பொம்மைகள், வால் ஹாங்கிங் போன்றவற்றையும் இந்தத் துணிகளை கொண்டு தயாரிக்க உள்ளோம். கூடிய விரைவில் பள்ளி மற்றும் குடியிருப்புகளுடன் இணைந்து இதைப் பற்றிய விழிப்புணர்வை அளிக்க விரும்புகிறோம்,” என தெரிவிக்கிறார் சுமித்ரா.

தற்பொழுது இவர்கள் தயாரிக்கும் பைகள் 3 முதல் 5 கிலோ வரை எடையை தாங்கக் கூடியவை, கடைகளுக்கு காய்கறிகள் வாங்க செல்லும்பொழுது இந்த பைகளை எடுத்து சென்று கடையில் கொடுக்கு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கலாம். இதன் மூலம் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு குறையும் என நம்புகிறது இவ்வமைப்பு.

கூடிய விரைவில் உலகில் உள்ள பல இடங்களில் எகோ மித்ராவை செயல்முறைப் படுத்த வேண்டும் என விரும்புகிறார் சுமித்ரா. பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்றாலும் முடிந்த வரை குறைத்து நம் அடுத்து சந்ததியினர்களுக்கு இதில் உள்ள அபாயத்தை எடுத்துரைக்கலாம் என நம்புகின்றனர்.

“இந்த பிளாஸ்டிக் சுற்றுச் சூழலை பாதிப்பதோடு இல்லாமல் கடலில் கலந்து பல விலங்குகளின் உயிரையும் எடுக்கிறது. பல விலங்குகள் பிளாஸ்டிக்கை உட்கொள்கின்றன, இது மனிதனுக்கான இடம் மட்டும் அல்ல அனைத்து உயிரினமும் வாழ வேண்டும்,” என முடிக்கிறார் சுமித்ரா

முடிந்த அளவு பிளாஸ்டிக்கை தவிர்த்து நம் நிலம், தண்ணீர் மற்றும் பிற உயிரினங்களை காப்போம்!

முகநூல் பக்கம்: EcoMithra

Related Stories

Stories by Mahmoodha Nowshin