’BookMyShow’ தளத்தை தொடங்க ஆஷிஷ் ஹேம்ரஜானியின் வாழ்வில் நடந்த சுவாரசியமான அந்த நிமிடங்கள்!

2

சினிமா, நிகழ்ச்சி பிரியர்களுக்கு ‘புக் மை ஷோ’ BookMyShow தளத்தைப் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அப்படிப்பட்ட ’புக்மைஷோ’ புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்தலின் காரணமாக தொடங்கியது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 

நான் புகைப்பிடிப்பது இல்லை ஆனால் புகைப்பிடிப்பவர்களை கண்டால் எந்த பிரச்சனையும் எனக்கு இல்லை. நான் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன், அங்கே பெரும்பாலானோர் ஒரு கையில் டீ, மறுகையில் சிகரட்டுடன் வலம்வருவர். JwT விளம்பர நிறுவனம் ஏன் ஊழியர்களை அலுவலகத்துக்குள் புகைப்பிடிக்க அனுமதிக்கிறது என்று யோசித்தேன்... உண்மை என்னவெனில் ஐடிசி குழுமம் JwT’ வின் மிகப்பெரிய க்ளையன்ட் என்று பின்பு தெரிந்துகொண்டேன். எனக்கு ஒரு இடைவேளை தேவைப்பட்டது. நான் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டேன்,” என்றார் ஆஷிஷ் ஹேம்ரஜானி யுவர்ஸ்டோரி ‘டெக்ஸ்பார்க்ஸ்2016 விழாவில்.

இந்த இடைவேளையில் தான் ‘புக்மைஷோ’ BookMyShow உதித்தது. 90-2000இல் ஆஷிஷ் தனது விடுமுறையை கழிக்க தென்னாப்ரிகா மற்றும் போட்ஸ்வானாவுக்கு சென்றிருந்தார். அது ஒரு சாலைப்பயணம். அப்போது ரேடியோவில் ரக்பி மேட்சுக்கு டிகெட் வாங்க அழைப்பு வந்தது. அப்போது ஆஷிஷ் இதேப்போல் இந்தியாவில் எதாவது செய்யமுடியுமா என்று யோசித்தார். 

புதிய ஐடியாவிற்கான முதல் விதை அது. ஆனால் அதையும் தாண்டி மது அருந்தியதன் பயனாக ஆஷிஷ் தொழில் புரியவேண்டியதாயிற்று  என்றே சொன்னார். எப்படி என்றும் விளக்கினார்...

“எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... நாம் அப்போதெல்லாம் சினிமா தியேட்டர்களில் நீண்ட க்யூவில் நிற்போம். டிக்கெட் வாங்க ஒரு சிறிய ஓட்டை இருக்கும், அதன்வழியே கையைவிட்டு வாங்கவேண்டும். சிலமுறை கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லத்தி அடிகூட கிடைக்கும். இதை யோசித்துக்கொண்டே பயணித்தேன்...”

தென்னாப்ரிக்காவில் பயணத்தை தொடர்ந்த ஆஷிஷ், வைன் விளையும் இடத்தை அடைந்தார். அங்கே வைன் இலவசமாக கிடைக்கும். டீ குடித்தால் பேச்சுவழக்கில் மாறுதல் இருக்கும் ஆனால் வைன் அருந்தினால் வேறுமாதிரியான சிந்தனையும் பேச்சும் இருக்கும். 

“நான் வித்தியாசமானவன், ஏனெனில் நான் ஒரு இந்தியன். வைனை வீணடிக்க விரும்பவில்லை (வாந்தி எடுத்து). அதனால் மதியத்திற்குள் என் மூளையில் ஏதோ வெடித்தது. புகைப்பிடிப்பதில் தொடங்கி குடிப்பதில் முடிந்தது. அங்குள்ள யூத் ஹாஸ்டல் பெட்டில் படுத்துக்கொண்டு நான் பணிபுரிந்த நிறுவன மேலாளருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பினேன். 186ரூபாய் செலவில் ஒரு மெசேஜ் அது, ‘நான் வேலையை விடுகிறேன்’ என்று... அப்படி அனுப்பியதைப்பற்றி அடுத்த நாள் நினைவிற்கு வந்ததுமே உணர்ந்தேன்,” என்றார்.

மும்பைக்கு திரும்பியதும், ஆஷிஷ்க்கு வேலை பறிபோய் இருந்தது. உடனே தொழில் புரியும் எண்ணத்தில் ப்ளான் ஒன்றை தயார் செய்தார். பல முதலீட்டாளர்களிடன் பேசினார். இறுதியாக, 2 கோடி ரூபாய் முதலீட்டில் ‘புக்மைஷோ’ துவக்கினார் ஆஷிஷ். அப்போதுதான் டாட்காம் வளர்ந்துவந்த காலம். 

1999 இல், புக்மைஷோ தொடங்கியப்போது பல அழைப்புகள் வந்தன. ஆன்லைன் புக்கிங் அதிகரித்தது. வீட்டிற்கே வந்து டிக்கெட்டை கொடுத்து பணத்தை வசூலித்த முதல் தளம் இது. புக்மைஷோ’ விற்கு முதலீடு கிடைத்திருந்தாலும், 2002இல் டாட்காம் சரிவின் போது இவர்களும் சரிவை சந்தித்தனர். 150 பேர் கொண்ட குழு 6 ஆக குறைந்தது. 2500 சதுர அடி அலுவலகம் பாந்திராவில் உள்ள ஒரு வீட்டிற்கு மாற்றப்பட்டது. 

அப்போதுதான் புதிய யோசனையை முன்வைத்து, தங்கள் தொழிலுக்கு ஏற்ற சுற்றுச்சூழலை உருவாக்க முடிவெடுத்தனர். 

“நாங்கள் கால் செண்டர் நடத்த ஒன்றை தொடங்கினோம். டிக்கெட் மென்பொருளை எல்லா இடத்திலும் வைத்தோம். பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான சேவையை சேர்த்தோம். உங்கள் பொது அறிவை பயன்படுத்தினால் கடினமான பிரச்சனைகளுக்கும் சுலபமான தீர்வுகள் கிடைக்கும்.” 

இந்த பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை இருப்பினும் ஒரு தொழில்முனைவராக வேறு வழி இல்லை என்றார் ஆஷிஷ். 

நம்பிக்கையற்றவன் பாதி கோப்பை காலி என்பான், நம்பிக்கை உடையவன் பாதி கோப்பை நிறைந்துள்ளது என்பான். ஒரு தொழில்முனைவோன், காலியான பாதிப்பகுதியை பார்த்துவிட்டு அதற்கு தேவையான பானத்தை சேர்த்து கோப்பையை முழுமை அடையச்செய்து, பயணத்தை சுவாரசியம் ஆக்குவான் இல்லையேல் அதை அருந்தி கவலையின்றி இருப்பான்.

ஆங்கில கட்டுரையாளார்: சிந்து கஷ்யப்