சென்னையில் வாழும் நிஜ 5 ரூபாய் ‘மெர்சல்’ டாக்டர்!

4

ஐந்து ரூபாய் கையில் இருந்தால் என்ன செய்யமுடியும்? ஒரு மாங்காய், தேங்காய் கூட வாங்க முடியாது என்கிறீர்களா. உண்மைதான் எதையும் வாங்க முடியாவிட்டாலும், தரமான மருத்துவ சிகிச்சைப் பெற முடியும் என்றால் நம்ப முடிகிறதா? 

ஆம், சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற மருத்துவர் கடந்த 45 ஆண்டுகளாக ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். மெர்சல் படத்தில் ஐந்து ரூபாய் கட்டணம் மட்டும் வாங்கும் மருத்துவராக நடித்திருப்பார் நடிகர் விஜய். சினிமாவில் மட்டுமே இது சாத்தியம். நிஜத்தில் சாத்தியமில்லை என படத்தைப் பார்த்தவர்கள் பலர் விமர்சித்தனர்.

ஆனால், அவர்களது விமர்சனங்களைப் பொய்யாக்கி கடந்த 45 ஆண்டுகளாக மிகக் குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்து பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஜெயச்சந்திரன்.

பட உதவி: தினமலர்
பட உதவி: தினமலர்

தற்போது 68 வயதாகும் ஜெயச்சந்திரன், வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வருகிறார். இவரைப் பார்க்க வரும் நோயாளிகள் பெரும்பாலும் தெரு வியாபாரிகள், குப்பை அள்ளுபவர், செருப்பு தைப்பவர் என ஏழை எளிய மக்கள் தான்.

பேசுபவர்களிடம் எல்லாம் அன்பை அள்ளிக் கொட்டுகிறார் ஜெயச்சந்திரன். பாதி நோய் அவரது மருத்துவத்தில் குணமாகிறது என்றால், மீதி அவரது அன்பான வார்த்தைகளிலேயே குணமாகி விடும் போல. அந்தளவிற்கு கனிவைக் குழைத்து எல்லாரிடமும் பேசுகிறார் ஜெயச்சந்திரன்.

“சென்னை கல்பாக்கம் அருகே உள்ள கொடைப்பட்டிணம் தான் நான் பிறந்த ஊர். அப்பா, அம்மா இருவருமே விவசாயிகள். படிப்பின் வாசனையே இல்லாத ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். எங்களது ஊரிலேயே முதன்முதலில் பத்தாம் வகுப்பு படித்தது நான் தான். உரிய வைத்தியம் கிடைக்காததால் பலர் உயிரிழந்த அவலத்தை நேரில் பார்த்து வளர்ந்ததால், எப்படியும் டாக்டராகிவிட வேண்டும் என்ற கனவு என்னுள் வளர்ந்தது. காசு இல்லாத காரணத்தால் மருத்துவம் யாருக்கும் எட்டாக்கனியாகிவிடக் கூடாது என்பதற்காகவே குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்க்கத் தொடங்கினேன்,” என்கிறார் ஜெயச்சந்திரன்.

மருத்துவக்கல்லூரியில் தன்னுடன் படித்த கனகவேல் என்ற நண்பருடன் சேர்ந்து, கடந்த 71-ம் ஆண்டு இந்தச் சேவையை ஜெயச்சந்திரன் தொடங்கியுள்ளார். படிப்புச் செலவிற்கே கஷ்டப்பட்ட ஜெயச்சந்திரனுக்கு கனகவேலின் அப்பா தான் கிளீனிக் வைக்க உதவியுள்ளார். ஆரம்பத்தில் வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே சிகிச்சைக் கட்டணமாக வசூலித்துள்ளனர். காலப்போக்கில் தற்போது அது ஐந்து ரூபாய் ஆகியுள்ளது.

“ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால், அப்படி இலவசமாக வைத்தியம் பார்த்தால் மக்கள் மதிக்க மாட்டார்கள், எனவே இரண்டு ரூபாயாவது கட்டணமாக வாங்குங்கள் என எனது நண்பரின் அப்பா அன்புக் கட்டளை இட்டார். அதன்படி வைத்தியத்திற்கு வருபவர்களிடம் இரண்டு ரூபாய் வாங்கத் தொடங்கினோம். 

“ஆனால், யாரிடமும் கட்டாயப்படுத்தி காசு கேட்பதில்லை என்பதில் இன்று வரை உறுதியாக இருக்கிறேன். விருப்பப்பட்டு தந்தால் மட்டுமே காசு வாங்கிக் கொள்வேன். மற்றபடி யாரையும் காசு கேட்டு கஷ்டப்படுத்துவதில்லை,” என்கிறார் ஜெயச்சந்திரன்.

கைராசி டாக்டர்:

இவரது கைராசி காரணமாக ஏழை மக்கள் மட்டுமின்றி, வசதி படைத்தவர்கள் பலரும் இவரிடம் சிகிச்சைப் பெற வருகின்றனர். அப்படி வருவோர் வைத்தியக் கட்டணமாக ஐநூறு, ஆயிரம் தரவும் தயங்குவதில்லை. ஆனால், அவற்றை பணமாகப் பெற்றுக் கொள்ளாமல் மருந்துகளாக வாங்கித் தரச் சொல்லி, மருந்து வாங்க காசில்லாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு அதை தருவதை ஜெயச்சந்திரன் வழக்கமாக் கொண்டிருக்கிறார் .

ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும், ஆரம்பத்தில் இருந்த அதே அக்கறை, அன்பு மற்றும் சுறுசுறுப்புடனேயே நோயாளிகளிடம் நடந்து கொள்கிறார் அவர். ஒரே குடும்பத்தில் முதலில் தாத்தாவிற்கு, அப்பாவிற்கு பின் மகனிற்கு தற்போது பேரனுக்கு என நான்கு தலைமுறையாக ஜெயச்சந்திரன் வைத்தியம் பார்த்து வருகிறார்.

“நான் கற்ற மருத்துவத்தை வியாபாரமாக்க நான் விரும்பவில்லை. ஜாதி, மத, இன பேதமில்லாத கிளீனிக்கை நடத்தி வருகிறேன். மனிதநேயத்தை காசு கொடுத்து வாங்கிவிட முடியாது. அன்புதான் முக்கியம். ஏழை எளிய மக்களுக்கு வைத்தியம் பார்ப்பதில் கிடைக்கும் மன திருப்தி, மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

மன நிம்மதி:

அவரிடம் வைத்தியத்திற்கு வரும் பெரும்பாலானோர் அவரை டாக்டர் என்றே அழைப்பதில்லை. ‘அப்பா, தாத்தா’ என்றே உரிமையுடன் அழைக்கின்றனர். இதுவே ஜெயச்சந்திரனை அப்பகுதி மக்கள் தங்களது குடும்பத்தில் ஒருவராக கருதுகின்றனர் என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஆகும்.

ஜெயச்சந்திரனின் மனைவி வேணியும் மருத்துவர் தான். மருத்துவக் கல்லூரி டீனாக இருந்த வேணி, தற்போது மகளிர் மகப்பேறு மருத்துவர் சங்கத் தலைவராக உள்ளார். ஜெயச்சந்திரனுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களும் மருத்துவர்கள் தான்.

“நான் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் விருப்பப்படி சேவையைத் தொடருங்கள் என என் மனைவி அளித்த சப்போர்ட் தான், இன்றளவு பொருளாதாரப் பிரச்சினை இன்றி என் சேவையைத் தொடர உத்வேகம் அளித்து வருகிறது. உலகத்திலேயே நான் அதிகம் நேசிப்பது என் மருத்துவத் தொழிலைத் தான். ஒரு உயிரைக் காப்பாற்றும்போது கிடைக்கும் மன திருப்தியும், மகிழ்ச்சியும் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது,” என்கிறார் ஜெயச்சந்திரன்.

சமூகசேவை:

மருத்துவம் மட்டுமின்றி வடசென்னை மக்கள் மீதான அக்கறையால் பல்வேறு சமூகசேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார் அவர். வடசென்னை மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். உதாரணமாக மெட்ரோ ரயிலை திருவொற்றியூர் வரை கொண்டு வந்ததைக் கூறலாம். இதேபோல் ராயபுரம் ரயில் நிலையத்தை இந்தியாவின் 3-வது முனையமாக மாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக தற்போது போராடி வருகிறார். இது தொடர்பான ரயில் பயணிப்போர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ஜெயச்சந்திரன் பதவி வகித்து வருகிறார்.

இதேபோல், இதுவரை மூவாயிரத்திற்கும் மேலான மருத்துவ முகாம்களையும் ஜெயச்சந்திரன் நடத்தியுள்ளார். நேதாஜி சமூகசேவை இயக்கம் முலம் ஏழை மாணவர்களுக்கு பீஸ் கட்டுதல், மரம் நடுதல், ரத்ததான முகாம் போன்றவற்றையும் செய்து வருகிறார்.

நடப்போர் நலச்சங்கம் என்ற ஒன்றைத் தொடங்கி அதன் தலைவராக உள்ள ஜெயச்சந்திரன், கடந்த 15 வருடங்களாக ஏறக்குறைய 800 முகாம்களை நடத்தியுள்ளார். இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு பிராணயாமம், உடற்பயிற்சி, யோகா போன்றவை கற்றுத் தரப்படுகிறது. ரத்ததானம் செய்வதற்கு என ஒரு பெரிய நட்பு வட்டமே வைத்துள்ளார்.

விருதுகள்: 

தனது சேவைக்காக பல்வேறு விருதுகள் வாங்கியுள்ளார் ஜெயச்சந்திரன். தமிழ் ஆர்வலரான அவர் மகப்பேறும் மாறாத இளமையும், குழந்தை நலம் உங்கள் கையில், தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவம் மற்றும் உடல் பருமன் தீமைகளும், தீர்வுகளும் என தமிழில் சில நூல்களையும் எழுதியுள்ளார்.

“குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்ப்பதைவிட சுமார் 3 ஆயிரத்திற்கும் மேலான மருத்துவ முகாம்கள் நடத்தியுள்ளதைத் தான் என் சாதனையாகக் கருதுகிறேன். உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படாத ஏழை மக்களுக்கு சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு கண்டறிதல், பிசியோதெரபி உள்ளிட்ட பல முகாம்களை நடத்தி வருகிறோம். அப்போது கிடைக்கும் மனநிம்மதி விலைமதிப்பற்றது,” என்கிறார் ஜெயச்சந்திரன்.

Related Stories

Stories by jayachitra