ஜே.என்.யு பிரச்சனை; துவேஷத்தை பரப்பும் செயலை உடனே தடுக்க வேண்டும்!

0

1948 ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் தேதி அப்போதைய உள்துறை அமைச்சர் மற்றும் துணை பிரதமரான வல்லப பாய் பட்டேல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜி கோல்வாக்கருக்கு நீண்ட கடிதம் எழுதினார். இந்த கடிதம் எழுதப்படக் காரணம் இருந்தது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ், அரசால் தடை செய்யப்பட்டிருந்தது. கோல்வாக்கர் இந்த தடையை நீக்கக் கோரி பட்டேலுக்கு கடிதம் எழுதியிருந்தார். பட்டேல் இதற்கு பதில் எழுதினார். "இந்துக்களுக்காக ஆர்.எஸ்.எஸ் நிறைய செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இதை ஏற்றுக்கொள்ள யாருக்கும் தயக்கம் இருக்காது” என குறிப்பிட்டிருந்தவர் அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ்-க்கு பிடிக்காத கருத்தை கூறியிருந்தார்."ஆனால் இவர்களே முஸ்லீம்களை பழி வாங்க வேண்டும் என்று கூறி தாக்குதலை நடத்தும் போது சிக்கலாகிறது. இந்துக்களுக்கு உதவுவது என்பது வேறு. ஆனால் ஒருபாவமும் அறியாத பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது”.

பட்டேல் தனது கடிதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த தவறவில்லை. பதற்றமான நிலையை ஆர்.எஸ்.எஸ் உண்டாக்குவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். அவர்கள் நச்சை விதைப்பதாக, அவர்கள் பேச்சுக்கள் மதவாத தன்மை கொண்டிருப்பதாக கூறினார். இந்துக்களை காக்க, துவேஷத்தை பரப்புவதற்கு என்ன தேவை என அவர் கேட்டிருந்தார். அதன் பிறகு "இந்த துவேஷ அலையால் தான் தேசம் அதன் தந்தையை இழந்திருக்கிறது. மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். எனவே ஆர்.எஸ்.எஸ்-யை தடை செய்வது தவிர வேறு வழியில்லை” என கூறியிருந்தார்.

அதே பட்டேல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசால் தங்கள் அடையாள தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது தான் முரணானது. பட்டேல் ஒரு காங்கிரஸ்காரர். அவர் மகாத்மாவின் விசுவாசமான தொண்டர் மற்றும் நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் நெருங்கிய தோழர். நேருவுக்கு பதில் பட்டேல் நாட்டின் பிரதமராகி இருந்தால் நாடு வேறு விதமாக இருந்திருக்கும் என்று கூறி நேருவுக்கு எதிராக பட்டேலை நிறுத்த ஆர்.எஸ்.எஸ் எல்லாவிதங்களிலும் முயன்றது. கடந்த சில மாதங்களில் நேருவை இழிவு படுத்த பலவிதங்களில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு நாட்டின் பிரச்சனைகளுக்கு எல்லாம் அவரே காரணம் எனும் நிருபிக்க முயற்சி நடக்கிறது. இந்தியாவின் இரண்டு மகத்தான தலைவர்கள் குறித்து வரலாறு தீர்ப்பளிக்கும். ஆனால் அது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துதிபாடிகளை மன்னிக்காது.

பட்டேல் தனது கடிதத்தில் குறிப்பிட்டது போன்ற சூழல் இப்போது மீண்டும் உருவாக்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களாக தேசியம் எனும் பெயரில் புதிய விவாதம் தூண்டப்பட்டிருக்கிறது. ஜே.என்.யு வில் ஒரு சில மாணவர்களால் எழுப்பப்பட்ட இந்தியாவுக்கு எதிரான கோஷங்களும், ஜே.என்.யு.எஸ்.யு தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டதுமே இதற்கு காரணம். இரு விதமான கருத்துக்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. ஒன்று ஜே.என்.யு தீவிரவாதிகளின் இருப்பிடமாக இருக்கிறது, அது மூடப்பட வேண்டும் என்பது. மற்றொன்று இந்த கருத்துக்கு யார் முரண்பட்டாலும் அவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் மற்றும் இந்த கருத்தின் கீழ் எல்லாமே நியாயமானவை தான்.

ஜே.என்.யுவில் நான் நான் நீண்ட காலம் படித்திருப்பதால் அது இந்தியாவில் மட்டும் அல்ல உலகிலேயே சிறந்த கல்வி அமைப்பு என்று கூற முடியும். அது தாராளவாத சிந்தனையின் ஆலயமாக விளங்கி நமது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திறந்த முறையிலான விவாதம் மற்றும் கருத்துக்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. எனவே, கருத்துக்களுக்கு இருக்கும் பரவலான ஆதரவை மீறி அனைத்து வகையான எண்ணங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் இது வாய்ப்பளித்து வந்திருப்பதில் வியப்பில்லை. தாராளவாத சிந்தனையுடன் அது தீவிரவாத கருத்துக்களுக்கும் இடம் அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரியவர்கள் மற்றும் காஷ்மீர தீவிரவாதிகள் சிலர் அங்கு வசித்துள்ளனர். ஆனால் இதை வைத்துக்கொண்டு ஜே.என்.யு தேச விநோத சக்திகளுக்கு இடமளிக்கிறது என தீர்ப்பளிப்பது, ஜே.என்.யு வை உருவாக்கிய மற்றும் இந்திய அரசியல் சாசனம் அனுமதிக்கும் எண்ணங்களை அவமதிப்பாகும். இது போன்ற தீவிரவாத கருத்துக்களை கொண்டவர்கள் எப்போதுமே விளம்பில் தான் இருக்கின்றனர் என்றும் பரவலான ஆதரவு ஒருபோதும் இருந்ததில்லை என்றும் என்னால் கூற முடியும்.

ஜே.என்.யுவின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவதற்கான முயற்சி ஏன் என புரிந்து கொள்ள வேண்டும். கோவாக்கர் தனது புத்தகமான தி பன்ச் ஆப் தாட் நூலில் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் கம்யூனீஸ்ட்களை இந்தியாவின் விரோதிகள் என கூறியிருப்பதை வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஜே.என்.யு எப்போதுமே இந்துவா கோட்பாட்டை வெறுத்திருக்கிறது. மாறாக அது இந்த கோட்பாடு வேரூன்ற அனுமதித்ததில்லை. அது எப்போதும் இடதுசாரி கருத்துக்களின் கோட்டையாக இருந்ததால் இந்த இரண்டு வேறுபட்ட எண்ணங்களுக்கும் இடையே பகை இருந்தது. இந்து அடிப்படைவாதிகளைப்பொருத்தவரை தாங்கள் எதிர்க்கும் எல்லாவற்றின் அடையாளமாக ஜே.என்.யு இருக்கிறது. தேச விரோத கோஷங்கள் இந்த சக்திகளுக்கு ஒரு சாக்காக அமைந்து விட்டன. ஆனால் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்க பல ஆண்டுகள் தேவை என்பதையும் அதை அழிக்க ஒரு சில நிமிடங்கள் போதும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஜே.என்.யு உலக கல்வி அரங்கில் பெருமைக்குறிய இடம் வகிக்கிறது. அதை இழிவுபடுத்தும் எந்த செயலும் தேச நலனுக்கு எதிரானது.

ஆனால் மிகப்பெரிய கேள்வி என்ன எனில் ஜே.என்.யுவை ஆதரிக்கும் எவரையும் காஷ்மீர் பிரச்சனையில் கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவர்களை தேச விரோதிகள் என முத்திரை குத்துவது தொடர்பானதாகும். கன்னையா தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஏன் வில்லனாக்கப்பட்டார் என்பதற்கு இன்று வரை காவல்துறை ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. அவர் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. அவரது உயிருக்கு ஆபத்தான நிலை இருக்கிறது. இதைவிட மோசமான நிலை என்ன எனில் ஜனநாயகத்தின் மற்ற அமைப்பின் நிலை தான். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழக்காடு மன்றத்தில் வாதாட வேண்டிய பொறுப்பு கொண்ட வழக்கறிஞர்கள் ,கன்னையாவை குற்றவாளி என முடிவு செய்து வழக்க நடத்தாமலேயே அவரை தண்டிக்க முற்பட்டுள்ளனர். அவர்கள் சட்ட்த்தை கையில் எடுத்துக்கொண்டு, மீடியா முதல் உச்சநீதிமன்ற பார்வையாளர்கள் வரை தங்கள் கருத்துக்களை எதிர்க்கும் எவரையும் தாக்குகின்றனர். காவல்துறை வேடிக்கை பார்க்க மட்டுமே செய்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, காவல்துறை வன்முறை அலையை அனுமதித்தது. இதை எழுதும் வரை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை இல்லை.

சில டிவி சேனல்களின் செயல்பாடும் கண்டிக்கத்தக்கது. ஒரு சில எடிட்டர்கள் மற்றும் தொகுப்பாளரின் செயல்,ரவுடி வழக்கறிஞர்களின் செயல் போலவே இருந்தன. நடுநிலை கொண்டவர்கள் பாதிக்கப்பட்டு, கன்னையா மற்றும் அவரைப்போன்றவர்கள் மீது துவேஷம் கொள்ள வைக்கும் வகையில் அவர்கள் டிவியில் உணர்ச்சியை தூண்டுகின்றனர். மற்றவர்களை விட தங்களை தேசியவாதிகளாக காட்டிக்கொள்ளும் முயற்சியில் அவர்கள் கன்னையாவுக்கு எதிராக உணர்வை தூண்ட ஜோடிக்கப்பட்ட வீடியோவை ஒளிபரப்பினர். ஆனால் நல்லவேளையாக மற்ற சேனல்களை இதை அம்பலப்படுத்தின. உண்மையில் இந்த சேனல்கள் இது போன்ற செயலுக்கு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அவர்களும் இதில் உடந்தையோ என சந்தேகிக்க தோன்றுகிறது.

இந்தியா ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவர்கள் மீது சட்டம் நடவடிக்கை எடுக்கட்டும்.இத்தகைய செயலை செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இதில் கருணை காட்ட வேண்டியதில்லை. ஆனால் நாடு முழுவதும் துவேஷத்தை பரப்ப இதை காரணமாக அனுமதிக்க முடியாது. வழக்கறிஞர்கள் நீதிபதிகளாகி தங்கள் கைகளில் சட்ட்த்தை எடுத்துக்கொள்ள முடியாது. எம்.எல்.ஏக்கள் செயற்பாட்டாளர்களை தாக்க அனுமதிக்க முடியாது. எதிர்கட்சி அலுவலகங்களை சூறையாட அனுமதிக்க கூடாது. காவல்துறை கடமையை மறந்து வேடிக்கை பார்க்கும் நிலை கூடாது. பத்திரிகையாளர்கள் தாக்கப்படக்கூடாது. உச்சநீதிமன்றத்தை மீறக்கூடாது. டிவி எடிட்டர்கள் உணர்வுகளை தூண்ட முயற்சிக்க கூடாது. இவை எல்லாம் நடந்தால் ,நாம் குடியரசு என அன்புடன் அழைக்கும் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். மாறக்கூடாது.

இந்த உணர்வை தான் கோல்வாக்கருக்கு எழுதிய கடிதத்தில் பட்டேல் குறிப்பிட்டிருந்தார்.துவேஷத்தை உண்டாக்குவது எளிதானது. ஆனால் இந்த துவேஷம் தான் காந்தியை கொன்றது என இந்த சக்திகள் மறந்துவிடக்கூடாது. இது போன்ற இன்னொரு பயங்கரத்தை நம்மால் அனுமதிக்க முடியாது. இந்த துவேஷம் பரப்பும் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இது எவருக்கும் நல்லதல்ல. 

கட்டுரையாளர்: அசுடோஷ் | தமிழில்: சைபர் சிம்மன்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்