மென்டர் முத்து: தொழில்முனைவில் முத்திரைப் பதிக்க 6 முத்துகள்!

0

ஆயிரம் மைல் தூரப் பயணமாக இருந்தாலும், முதல் காலடியை எடுத்து முன்னே வைப்பதுதான் மிக முக்கியம். ஏற்கெனவே வெற்றிகரமாக தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களும், தொழில்முனைவுகளில் தடம் பதிக்க தயாராகும் நம்பிக்கையாளர்களுக்கும் வெற்றிக்கு வித்திடும் சூத்திரங்களை வழிகாட்டுதல்களாக வழங்குகிறார் 'மென்ட்டர் முத்து'. சென்னை ஏஞ்சல்ஸ் தயாரித்துள்ள கற்பனை வழிகாட்டி தான் இந்த 'மென்டர் முத்து'. தொழில்முனைவோருக்கு வழிக்காட்டும் அறிவுரைகளை வழங்கும் வீடியோ மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறது சென்னை ஏஞ்சல்ஸ். 

இதோ தொழில்முனைவுகளில் முத்திரைப் பதிக்க மென்டர் முத்துவின் 6 முத்துகள்:

1. திட்ட யோசனை அவசியம்; ஆனால், அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதே ஒரு நிறுவன வெற்றிக்கு மிக முக்கியம்: ஐடியா என்பது ஒரு தொழில்முனைவுக்கு முதன்மையான ஒன்று. ஆனால் அந்த எண்ணத்தை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்ற வழிகளை தொழில்முனைவோர் திட்டமிட்டு, தங்கள் நிறுவனத்தில் செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி இலக்கை அடையமுடியும். 

2. திறமையும், நிபுணத்துவமும் மிக்க குழுவை கண்டறிந்து ஒரு நிறுவனத்தை நிறுவுவது முக்கியம்: ஒரு நிறுவனத்தை நிறுவக்கூடிய குழு, முக்கிய பொறுப்புக்களையும் ஆற்றல்களையும் கொண்டிருக்க வேண்டும். அந்த குழு உறுப்பினர்களுக்கு, அத்துறைப் பற்றிய திறமைகளோடு அதில் நிபுணத்துவம் இருப்பதும் மிக அவசியமாகிறது. நிறுவனத்தின் ஒவ்வொரு அடியும் இந்த குழுவின் முடிவுகளின் அடிப்படையிலே அமையும் என்பதால் இது இன்றியமையாகிறது.

3. உங்கள் தொழிலில் லாபம் ஈட்டுங்கள்; அதைக் கொண்டு உங்கள் வெற்றிகரமான தொழில்முனைவுத் திட்டத்தைக் கொண்டு வருவாயை பலமடங்கு ஆக்குங்கள்: ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதன் முக்கிய செயல்பாட்டை வெற்றியடைச் செய்து அதில் முதலில் லாபத்தை ஏற்படுத்துவது அவசியம். அதன் பின்னரே அந்த திட்டத்தை மேலும் பலமடங்காக செயல்படுத்தி வருவாயை பெருக்க முயற்சிப்பது புத்திசாலித்தனம்.

4. சிறிய முயற்சிகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டாதீர்: ஒரு நிறுவனத்தை பெரிய அளவில் தான் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை. குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் தொடங்கப்படும் நிறுவனமும் நல்ல ஒரு திட்டத்துடன் இருந்தால் நிச்சயம் சந்தையில் வெற்றியடையும்.

5. உங்களை விட திறைமைசாலிகளை பணியில் அமர்த்துங்கள்: நிறுவனத்தின் நிறுவனர் நீங்களாக இருக்கலாம், ஆனால் ஒரு தொடக்க நிறுவனத்தைப் பொறுத்தவரையில் உங்களைத் தாண்டி அதில் பணிபுரிபவர்களின் பங்களிப்பு நிறுவன வளர்ச்சிக்கு மிக முக்கியம். எனவே சிறிய குழுவாக இருப்பினும் உங்களையும் விட திறமைமிகு ஊழியர்களை பணியமர்த்துங்கள். அதுவே வெற்றியின் தாரக மந்திரம்.

6. சந்தைப்படுத்தலுக்கு மலிவான வழிகள் என்று ஏதுமில்லை: இன்றைய போட்டி யுகத்தில், நிறுவனம் சிறியதோ, பெரியதோ சரியான முறை சந்தைப்படுத்துதல் இன்றி வெற்றி சாத்தியம் இல்லை. எனவே குறைந்த செலவில் மலிவான மார்க்கெட்டிங் வழிகளை தேடிப்போகாதீர்கள். உங்கள் நிறுவனத்துக்கான வாடிக்கையாளர்களை சென்றடையத் தேவையான சரியான சந்தைப்படுத்தும் முறைகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள்... லாபம் தன்னால் உங்களை வந்தடையும்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan