பிரார்த்தனை பொருட்கள் விற்பனை மூலம் உழைக்கும் கரங்களையும் உயர்த்தும் சியா!

1

வாழ்வில் அனைத்து விஷயங்களுக்கும் போராடிக் கொண்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நிச்சயம் பெரிதாக ஒரு கனவும் லட்சியமும் இருக்கும், சியா உமேசும் அதற்கு விதிவிலக்கல்ல. அன்றாட வாழ்க்கை நடத்த அல்லல்படும் கீழ்தட்டு குடும்பப் பின்னணியில் இருந்தாலும், தடைகளை தகர்த்தெரியும் தைரியம் நிறைந்த இந்த பெண்ணுக்கு முடியாத காரியங்களிலும் வெற்றியை காண்பதில் அதிக ஆர்வம். இன்று சியா, இணைவழியில் இந்து மத பூஜைகள் குறிப்பாக வழிபாடுகளுக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்யும் சொந்த தொழிலை செய்து வருகிறார்.

சியாவின் கதை நன்மதிப்புடையது - நிதிப் பற்றாக்குறை அவருடைய நோக்கம் மற்றும் பயணிக்கும் பாதைக்குத் தடையென அவர் ஒரு போதும் கருதியதில்லை. சிறு பெண்ணாக இருந்தாலும் சியா பணத் தட்டுப்பாட்டால் பள்ளிப் படிப்பை கைவிட்ட தனது சகோதரிகளை பார்த்து வளர்ந்தவர். மூன்று சகோதரிகளில் இளையவளான சியாவை படிப்பை தொடரும் படி அவருடைய தாயார் வற்புறுத்தினார். என் அம்மா என்னை பள்ளிக்கு அனுப்பியதே என்னுடைய வெற்றிக்கான மிகப்பெரிய காரணம் என்று தன் தாயின் செயலுக்கு பாராட்டளிக்கிறார் சியா. “இன்றைய அளவில் என்னுடைய நிலைப்பாடு என்னவென்றால், கல்வி தான் ஒரு குழந்தைக்கு நம்மால் கொடுக்க முடிந்த மிகச்சிறந்த பரிசு,” என்கிறார்.

பள்ளிப் படிப்பை முடித்ததுமே தன்னுடைய கல்லூரி படிப்பிற்காக சியா பணியாற்ற வேண்டி இருந்தது. வகுப்புகள் முடிந்ததும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடினமாக வேலை செய்து பணத்தை சேமிக்கத் தொடங்கினார். பட்டம் பெற்றவுடன் சியா, பெங்களூருக்கு சென்று அங்கிருந்த பயோடெக்னாலஜி நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார், வார இறுதியில் தன்னுடைய பெற்றோரை சந்திக்க மங்களூர் வந்துவிடுவார். சியாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய மற்றொரு நிகழ்வு 2010ல் அவருடைய தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்ட போது நடந்தது. அந்தச் சூழலில் சியா வீட்டுக்குத் திரும்ப நேரிட்டது.

“அந்த சமயத்தில் அது ஒரு திட்டமிட்ட நகர்வு அல்ல, ஏனெனில் எனக்கு நல்ல நிதி பின்பலம் இல்லை. அதுமட்டுமின்றி ஒரு பயோடெக் பொறியாளர் டிகரியை மட்டும் வைத்துக் கொண்டு மங்களூர் நகரில் ஒரு வேலை தேடுவது கடினமான விஷயம். சில மாதங்கள் வேலை செய்யாமல் வீட்டிலேயே இருந்ததால் என்னுடைய சேமிப்புகளும் கரைந்தன. கடைசியாக நான் ஒரு தொழில் தொடங்கலாம் என முடிவு செய்தேன், ஆனால் அதில் ஒரு தயக்கம் இருந்தது, அதை எப்படி காட்சியாக கொண்டு வருவது என்ற தெளிவில்லாமல் இருந்தது” என்று சொல்கிறார் சியா.

சியா வெறும் ரூ.500 முதலீட்டை வைத்து "கர்மஷ்யா" (karmashya) என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் நோக்கம் பூஜை தொடர்பான கட்டுரைகளை இணையவழியில் விற்பனை செய்வது. இது போன்ற விஷயங்களில் சந்தை இப்போது தான் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறது, அதுமட்டுமின்றி இது போன்றவற்றிற்கான வளர்ச்சி நல்ல நிலையில் இருக்கும் என்பதும் சியாவின் அனுமானம், அதிலும் குறிப்பாக NRIகளிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைத்தார். கர்மஷ்யா உயர்தர பூஜை கட்டுரைகளை விநியோகம் செய்வதில் சிறப்பிடம் பெற்றது, அதே போன்று அதிகாரப்பூர்வ பொருட்களான ருத்ராட்சம் மற்றும் ஜெம் கற்கள் விற்பனையில் பிரசித்தம். அதே போன்று அவர்கள் ரங்கோலி அச்சுகள், பல வகையான எந்திரங்கள், சிலைகள் மற்றும் ஆத்மார்த்த அணிகலன்களையும் விற்பனை செய்தனர்.

அனைத்து பணிகளையும் சியா ஒரே ஆளாக முன் நின்று செய்தார். அதாவது பொருட்களை வாங்கி, பட்டியலிட்டு, அவற்றை பேக் செய்து கப்பலில் ஏற்றுவது வரை அனைத்தும் ஒரே ஆளாக பம்பரம்போல சுழன்று செய்தார். சியா தன்னுடைய நிறுவனத்துக்கான முதல் வேலையாளை சேர்க்க 6 மாதங்கள் ஆனது, அதுவரை அந்தத் தொழிலில் அனைத்தையும் தனி ஆளாக நின்று கவனித்து வந்தார். “நான் தூங்கவே மாட்டேன் பொருட்களை பட்டியலிடுவேன், விற்பனையை சரிபார்ப்பதற்காக எழுந்துவிடுவேன், அதனால் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே என்னால் தூக்கத்திற்கு ஒதுக்க முடியும். கடைசியாக ஆறு மாதங்களுக்குப் பிறகு கர்மஷ்யா தனக்கு சரியான முதல் வேலையாள் நவ்யாவை பணிக்கு அமர்த்தியது. அவர் தான் இன்று கர்மஷ்யாவை நடத்திக் கொண்டிருக்கிறார்.

நவ்யா, பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு உள்ளூரில் ஒரு பீடி தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நான் அவரை பார்த்தபோது அவள் மற்ற டீன் ஏஜ் பசங்களைப் போன்ற ஒரு சராசரி 18 வயது பெண்ணாக இருக்கவில்லை. அவள் நல்ல எண்ணங்களோடு வளர்வதற்கு ஊக்கமளிக்க யாரும் இல்லை, சமுதாயத்தில் நிலவும் பாலின சமமின்மையை கூறி அவளை மூளைச் சலவை செய்துவைத்திருந்தனர். அவள் நாள் முழுவதும் தன்னுடைய பொட்டணம் போடும் பணியை செய்வாள் மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் நான் அவளுக்கு கணினி பயிற்றுவிப்பேன். இந்த குறுகிய காலகட்டத்தில் நவ்யா கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பொறுப்புகளை அதிகரித்து கொண்டார். அதாவது புகைப்படக்கலை, புகைப்படத்தை மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் கண்டுபிடிப்பு நிர்வாகவியல் உள்ளிட்டவற்றை கற்றுக் கொண்டார். இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது நவ்யா எங்களின் இரண்டாவது தொழிலாளி விசாலினிக்கு அவருடைய திறமைக்கு ஏற்றவாறு பயிற்சி அளித்தார். “இந்தியா போன்ற ஒரு நாட்டில் பெரும்பாலான மக்கள் பணக் கஷ்டங்களால் படிப்பை கைவிடுகின்றனர், இதனால் அவர்களை சரியான பாதையில் ஊக்குவிப்பதில் குறைவு ஏற்படுகிறது, சராசரியான பல்கலைக்கழக பட்டம் ஒன்றை மட்டும் வைத்தே ஒரு மனிதன் எந்த அளவு கற்றுக் கொண்டிருக்கிறான் அல்லது அவனுடைய ஒட்டுமொத்த திறமை என்ன என்பதை அளவிட முடியாது” என்று சுட்டிக்காட்டுகிறார் சியா.

இதுவே கர்மஷ்யா ஏன் கற்பித்தல், பயிற்சி அளித்தல், புதிய திறன்களை ஊக்குவித்தல் போன்றவற்றை தன்னுடைய புதிய பணியாளர்களுக்கு பழைய அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் மூலம் சங்கிலித் தொடர் போல கற்றத் தருகிறது என்பதற்கான முக்கிய காரணம். இன்று கர்மஷ்யாவில் பணிபுரியும் 10 பெண்களும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். கர்மஷ்யா தொடர்ந்து அவர்களுக்கு கற்பித்து வளர்ச்சிக்கான பாதையை காட்டும், அவர்களின் பொருளாதார நிலை அவர்களின் கற்றலுக்கு எந்த வகையிலும் தடையில்லை என்ற நம்பிக்கையை அது ஊட்டும். நம்நாட்டில் கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்களுக்கு இருக்கும் தயக்கம் ஆங்கிலப் புலமை, ஆனால் அவர்கள் அதையும் கற்று வருகிறார்கள். சியா தன்னுடைய முயற்சி மற்றும் கடின உழைப்பை கொண்டு தன்னுடைய வியாபாரத்தை வாடகை வீட்டில் நடத்தி வந்தார். ஆனால் விதி வலியது அவருடைய திட்டத்தை விரும்பாதவர்களும், சுற்றத்தாரும், வீட்டு சொந்தக்காரரும் ஒத்துழைப்பு தராததால் அவர் வேறு இடத்திற்கு மாறும் நிலைக்கு தள்ளப்பட்டார். நம் நாட்டில் சிறு தொழில்களுக்கு விரைவிலேயே ஐடி நிறுவனங்களைப் போல பல்வேறு சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பினார்.

இளம் வயதிலேயே இதுபோன்ற ஒரு பயணத்தை பயணித்து வரும் சியாவின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு eBayயின் ஷீமீன்ஸ் பிசினஸ் போட்டியின் வெற்றி. 6 வெற்றியாளர்களில் ஒருவராக சியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சியாவிற்கு தொடர்ந்து ஊக்கமளித்து, முன்மாதிரியாக இருந்த அவரது தாயார் சியாவின் 16 வயதில் காலமானார், சியா E-bayக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறார், ஏனெனில் அந்த தளம் இவருடைய பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியது. இன்று அவர் 1500 சதுரஅடி இடத்தில் தன்னுடைய சொந்த சில்லறை விற்பனை இணையத்தை நடத்துகிறார். அதே போன்று சியாவிற்கு பெண்கள் மேம்பாடிற்காக பாடுபடும், தங்கள் மீது முழு நம்பிக்கை உள்ள உறுதியான பெண்கள் குழு ஒன்று உதவி செய்கிறது, சியாவின் தாயார் அவருக்கு உதவி செய்தது போல.

இணையதள முகவரி: karmashya

கட்டுரை : பூர்ணிமா மகரம் | தமிழில் : கஜலட்சுமி மகாலிங்கம்