சுற்றுச்சூழலை சிதைக்கும் யானைகளின் வாழ்விட மாற்றங்கள்!

அதிகளவு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இருக்கும் நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், யானைகளின் வாழ்வியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் சுற்றுச்சூழலை எப்படி சீரழிக்கிறது என்பதை அறிய வேண்டியது அவசியம்.

2

ஜங்கிள் புக் படத்தில் ‘யானைகள் தான் காட்டின் மூதாதையர்கள்’ என வனத்தை உருவாக்கும் யானைகளுக்கு மற்ற விலங்குகள் சிரம் தாழ்த்தி வணங்குவது ஞாபகம் இருக்கிறதா? அந்த காட்சி எப்போதுமே ஒரு பிரம்மாண்டத்தை கண்ட உணர்வை உண்டாக்கும். யானையும் கடலும் பார்த்து சலிக்காது என்று சொல்வார்கள் அல்லவா? அது போல...

“வனத்தையே உருவாக்குவது யானைகள் தான் என ருட்யார்டு கிப்லிங் எழுதியிருப்பதும் சரி தான். யானை, காட்டில் மிக முக்கியமான உயிரினம். ஏனென்றால், காட்டில் மரங்களோடு நேரடித் தொடர்பு இருப்பது யானைகளுக்கு மட்டும் தான். யானைகள், நம்மைப் போல கொட்டையை துப்பி விட்டு பழத்தை மட்டுமே உண்ணாது, பலாப்பழமாக இருந்தாலும் முழுப்பழத்தையுமே தின்னும். யானையின் உடலில் ஜீரணம் அவ்வளவு சிறப்பாக நடக்காது - அதன் சாணத்தை எடுத்துப் பார்த்தாலே அதில் புல் கூட பச்சை மாறாமல் இருப்பது தெரியும். ஒரு இடத்தில் எதையாவது உண்டு விட்டு, வேறொரு இடத்தில் போய் சாணம் போடும் போது அங்கு புதிதாக பல மரங்களும் செடிகளும் முளைக்கத் தொடங்கும்,” என்கிறார் கோவையை சேர்ந்த யானை ஆர்வலர் ஜேபஸ் ஜான் ஆனந்த்.

யானைகளின் வாழ்வியலில் உண்டாகியிருக்கும் மாற்றங்கள் குறித்து ஜான் பேசியவதன் சுருங்கிய வடிவம் இது.

பட உதவி: istock
பட உதவி: istock

யானைகள் வாழ்வியலில் மாற்றங்கள் :-

யானைகளுடைய வாழ்வியல் மாற்றங்களுக்கு இயற்கையாகவும், செயற்கையாகவும் பல காரணங்கள் இருக்கின்றன. யானைகள் மரங்களை பல்வேறு காரணங்களுக்காக தள்ளி வீழ்த்துகின்றன. இந்த மரங்கள் பிற விலங்குகளுக்கு உணவாகின்றன. இப்படி ஒரு இடத்தில் நிறைய யானைகள் இருக்கும் போது, அங்கு யதார்த்தமாகவே யானைகள் நிறைய வளங்களை எடுத்துக் கொள்பவையாக இருக்கும். இதனால் மாற்றங்கள் வரலாம்.

அடுத்தது, மனிதர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் வரும் மாற்றங்கள் பல. காட்டிற்குள் ரோடு போடுவது, காட்டிற்குள் விவசாயம் செய்வது, காட்டிற்குள் மனிதர்களை குடியமர்த்துவது, காட்டிற்குள் ரயில் தண்டவாளங்கள், ஃபாக்டரிக்கள், ந்யூட்ரினோ திட்டங்கள் போன்றவை, சிமெண்ட் நிறுவனங்கள் காட்டிற்குள் வருவது, சுரங்கங்கள் அமைப்பது எல்லாம் யானைகளின் வாழ்விடத்தை நேரடியாக பாதிக்கின்றன. 

ஐம்பது சதுர அடி காட்டு நிலத்தை நாம் எடுப்பது கூட யானைகளுக்கு பெரிய அளவிலான வாழ்விட இழப்பு தான்.

அடுத்தது, புவி வெப்பமயமாகுதல், பருவநிலை மாற்றம் போன்றவை காட்டில் உண்டாக்கும் தாக்கங்கள் பெரிது. பருவநிலை மாற்றம் காட்டில் இருக்கும் நீர் மேசையின் அளவை குறைத்துக் கொண்டே இருக்கிறது. அதன் காரணமாக பசுமையும் இல்லாமல் போகிறது. வனத்துறையே இப்போது காட்டுக்குள் போர் போட்டு தான் நீர் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காட்டில் நீரின் அளவு குறையக் குறைய, உயிர் வாழ்வதற்கு வளங்கள் வேண்டி யானைகள் காட்டில் இருந்து வெளியேறத் துவங்கி விட்டன.

யானைகளின் உணவு முறை :-

ஆசிய யானைகள் பெரும்பாலும் புல் உண்பவை தான். மரங்களை விடவும் அதிகம் புற்களை தான் உண்ணும். மூங்கிலோ, வேறெந்த புல் வகையோ, எதுவாக இருந்தாலும் யானைகளின் உணவில் 80 சதவிகிதம் புற்களாகத் தான் இருக்கும். மீது 20 சதவிகிதம் தான் மரங்களையும், பட்டைகளையும், புதர்களையும் உண்ணும். இப்படி வகை வகையான உணவை உட்கொண்டால் தான் யானைகளுக்கு தேவையான மேக்ரோ மற்றும் மைக்ரோ சத்துக்கள் கிடைக்கும். 

ஆனால், காட்டுக்குள் வாழ்வியலில் மாற்றங்கள் வந்திருப்பதால், யானைகள் வெளியேறி வயல்வெளிக்கு வருகின்றன. இதை கிராப் ரெய்டிங் என்று சொல்கிறோம். கிராப் ரெய்டிங்கிற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
Photograph By Paul Hilton for WCS
Photograph By Paul Hilton for WCS

பதினைந்து வயதிற்கு மேல் ஆன ஆண் யானையை பெண் யானைகள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளாமல் துரத்தி விடும். இப்படி தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் ஆண் யானைகள் எல்லாம் ஒரு கூட்டமாகிவிடும். இவர்கள் எல்லாம் கற்றலின் ஆரம்ப நிலையில் தான் இருப்பார்கள். எங்கு தண்ணீர் கிடைக்கும், எந்த மரத்தில் எப்போது உணவு கிடைக்கும் என்பதை எல்லாம் யானைகள் வாழ்நாள் முழுவதுமே கற்றுக் கொண்டே தான் இருக்கும். தனியே செல்வதை விட கூட்டமாக சென்று உண்பது நல்லது என்று தான் இவர்கள் கூட்டமாக வயல்வெளிக்கு போவார்கள்.

நம் குழந்தைகள் எப்படி ‘ஜங்க் ஃபுட்’ உண்கிறார்களோ அது போலத் தான் யானைகளுக்கு இந்த உணவு முறையும். உண்மையில், யானை காட்டிற்குள் ஐந்து மணி நேரம் அலைந்து உணவு சேகரித்து உண்பதனால் கிடைக்கும் சத்துக்கள், ஒரு மணி நேரம் வயலில் உண்பதனால் கிடைத்து விடும். சில யானைகள் விவசாயிகள் பட்டாசு வெடித்தோ நெருப்பு மூட்டியோ விரட்டுவதை கண்டு பயப்பட்டு வயலுக்கு வராமல் இருக்கலாம். ஆனால், சில யானைகள் பகல் முழுக்க காட்டிற்குள் இருந்து விட்டு இரவில் வயல்வெளிக்கு வந்து உண்ணும்.

நாம் கவலைப்பட வேண்டியது எங்கே என்றால், யானைகள் வாழ்க்கை முழுவதும் நகர்ந்து கொண்டே இருக்கும் விலங்குகள். ஆனால், இப்படி உணவு இருபத்து நான்கு மணி நேரமும் பக்கத்திலேயே இருப்பதனால் யானைகள் நகர்வது இல்லை. காட்டிற்குள் கிடைக்கும் உணவில் நார்ச்சத்து இருக்கும், வயலில் கிடைக்கும் உணவில் புரதச் சத்து தான் இருக்கும். நமக்கு எப்படி ஜங்க் ஃபுட் உண்பதால் உடல் பெருமனாகிறதோ அதே போல யானைகளும் பருமனாகின்றன. 

நாம் இப்போது பார்க்கும் யானைகள் எல்லாம் உருண்டையாக தெரிகிறதல்லவா? அது கிடையாது யானைகளின் வடிவம். இந்த உணவு முறையில் வந்திருக்கும் மாற்றம் தான். யானைகள் ஆரோக்கியமில்லாதவையாக மாறக் காரணமாக இருக்கிறது.

யானைகளின் மரணங்கள் :-

கடந்த மூன்று வருடங்கள் கோவையையும், அதைச் சுற்றி உள்ள இடங்களிலும் ஏறத்தாழ ஐம்பது யானைகள் இறந்திருக்கலாம். யானைகளும் மனிதர்களை போலத் தான், யானைகளுக்கும் மரணம் வரும். ஆனால், மனிதர்களால் யானை மரிப்பது தான் கவலைக்குரிய விஷயம்.

எழுத்தாளர் ஜெயமோகன் ‘யானை டாக்டர்’ என்று எழுதியிருக்கும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தான் யானைகள் இறந்த பிறகு அவற்றுக்கு நிச்சயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார். ஏனென்றால், அப்போது யானைகளுக்கு விஷம் வைத்துக் கொல்லுதல், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல் என யானை கொலைகள் நிறைய நடந்து கொண்டிருந்தது. இப்போது நேரடியாக யானைகளை கொல்லுதல் குறைந்திருக்கிறது. ஆனால், மின் வேலிகளிலும் மாட்டியும், ரயில் தண்டவாளங்களில் அடிபட்டும் யானைகள் சாவது நடந்து கொண்டிருக்கிறது. 

சமீபத்தில் மதுக்கரையிலும் வாளையாரிலும் ஒசூர் ரோட்டிலும் இப்படியான மரணங்கள் நடந்தன. இதை தவிர்க்கத் தான் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

காட்டிற்குள் ஒரு பதினைந்து வயது யானையும் இருபது வயது யானையும் சண்டைப் போட்டு அதில் ஒன்று செத்துப் போனால் ‘ அய்யோ, பதினைந்து வயதில் யானை செத்துப் போச்சே’ என்று நாம் கவலைப்படலாம். ஆனால், அந்த இரண்டு யானைகள் ஏன் அங்கு வந்தது என்று யோசித்துப் பார்த்தால் அதன் வாழ்விடம் சுருக்கப்பட்டிருப்பது புரியும்.

Photograph by Dhritiman Mukherjee
Photograph by Dhritiman Mukherjee

கேரளாவில் நான்கு யானைகளுக்கு காசநோய் இருப்பதாக சொல்கிறார்கள்; மனிதர்களிடம் இருந்து யானைகளுக்கு சென்றிருக்கிறது - அது பற்றிய ஆய்வு வெளியாகவிருக்கிறது. இப்படி மனிதர்களிடம் இருந்து யானைகளுக்கு பரவியிருக்கும் நோய்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

நேரடியாக நமக்கும் யானைகளுக்கும் தொடர்பு இருப்பதில்லை என்றாலும், நம் மேசைக்கு வரும் உணவிற்கும், மரங்களுக்கும், அத்தனை வளங்களையும் உட்கொண்டிருக்கும் வனங்களுக்கும் யானைகளோடு நேரடியாக தொடர்பு இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. 

வன விவசாயி, வனப் பாதுகாவலன், வனத்தின் தந்தை என பலவாயும் இருக்கும் யானைகள் புகைப்படமாக மட்டுமே மிஞ்சும் தினம் வந்தால், பூமி அதன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.