உங்கள் காரை தண்ணீரில் இயங்க வைக்கும் நானோ தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்!

0

பெட்ரோல் விலை உயர்வு பயமுறுத்துகிறதா...?

Log 9 என்கிற நானோ தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான 25 வயது அக்‌ஷய் சிங்கால் இதற்கு தீர்வளிக்கிறார். ஐஐடி-ரூர்க்கியில் பிஎச்டி முடித்த சிங்கால் உங்கள் கார் தண்ணீரில் இயங்க உதவும் மெட்டல்-ஏர் பேட்டரியை உருவாக்கியுள்ளார்.

மின் வாகனங்களுக்கும் இன்வெர்டர் போன்ற சாதனங்களுக்கும் வணிக ரீதியாக மலிவான மெட்டல்-ஏர் பேட்டரிக்களை உருவாக்க Log 9 கிராபீன் பயன்படுத்துகிறது.

கிராபீன் பேப்பரைக் காட்டிலும் மில்லியன் மடங்கு மெல்லியதாகவும் ஸ்டீலைக் காட்டிலும் 200 மடங்கு உறுதியானதாகவும் இருக்கும் என்றும் அடுத்த தலைமுறை பேட்டரிகளுக்கு இவையே அதிக பயன்பாட்டில் இருக்கும் என்றும் சிங்கால் குறிப்பிட்டார்.

மின்வேதியியல் எதிர்வினையினால் உற்பத்தியாகும் மின்சாரத்தால் கார் இயங்கும் என Log 9 தெரிவிக்கிறது. உலோக தட்டுடன் கிராபீன் கம்பியை சேர்ப்பதால் தண்ணீரில் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த ரசாயன எதிர்வினைக்கு தண்ணீர் அடிப்படையாகும். இதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரமானது மின்சார மோட்டாருக்கு அனுப்பப்படும்.

இதற்கு மாறாக லித்தியிம்-அயன் பேட்டரி ஆற்றலை சேமிக்குமே தவிர ஆற்றலை உற்பத்தி செய்யாது என சிங்கால் குறிப்பிட்டார். ’தி இந்து’ உடனான நேர்காணலில் அவர் கூறுகையில்,

”உதாரணத்திற்கு ஒரு மின் வாகனத்திற்கு 100-150 கி.மீ மைலேஜ் இருக்கும். அதன் பிறகு அது சார்ஜ் செய்யப்படவேண்டும். சார்ஜ் செய்வதற்கு சராசரியாக ஐந்து மணி நேரம் ஆகும். கோரமங்கலாவில் இருந்து பெங்களூரு விமான நிலையம் வரை நீங்கள் வாகனம் ஓட்டிச் சென்று திரும்ப வேண்டுமானால் ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைக் கொண்டு திரும்பி வரும் வரை பயன்படுத்தமுடியாது. மின் வாகனங்கள் சார்ஜ் செய்யப்படவேண்டிய அவசியத்திற்கு மாற்றை உருவாக்கவேண்டும். எரிவாயு போன்றே தண்ணீரைக் கொண்டு மீண்டும் நிரப்பும் வசதியை உருவாக்கவேண்டும். இதுவே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்,” என்றார்.

Log 9 உருவாக்கும் மெட்டர்-ஏர் பேட்டரியின் செயல்திறன் குறித்து தெரிவிக்கையில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1,000 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும் என்றும் லித்தியம்-அயன் பேட்டரியைக் காட்டிலும் பாதி விலையே ஆகும் எனவும் இந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

இந்நிறுவனம் ஐஐடி-ரூர்க்கியில் 2015-ம் ஆண்டு இன்குபேட் செய்யப்பட்டது. சிங்கால் மற்றும் இணை நிறுவனர் கார்த்திக் ஹஜேலா இருவரும் மருந்து, பயோடெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பயன்பாட்டினை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு Log 9 நிறுவனம் PuFF என்கிற தயாரிப்பை அறிமுகப்படுத்தியது. இது சிகரெட்டுடன் இணைக்கப்படக்கூடிய கிராபீன் சார்ந்த ஃபில்டராகும். இது நச்சு நிறைந்த ரசாயனங்களைக் குறைக்க உதவுகிறது. இந்த சாதனம் ‘Filtr’ என்கிற மருந்து பிராண்டின்கீழ் விற்பனையாகிறது.

மேலும் இந்த ஸ்டார்ட் அப் மின்சார பயன்பாடு தேவைப்படாத தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்பு, காற்று சுத்திகரிப்பான் மற்றும் இதர சுத்திகரிப்பு சாதனங்களையும் தயாரித்துள்ளது. கிராபீன் சேர்க்கை மற்றும் கிராபீன் தயாரிப்புகளில் மூன்று காப்புரிமைகள் பெற்றுள்ளது என ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுகிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA