'தகவல் திங்கள்'- விளம்பரம் இல்லா உலகம் எது?

0

இனி வரும் காலத்தில் நாம் இணையத்தை பயன்படுத்தும் விதம் பெருமளவில் மாற இருக்கிறது என்பது உங்களுக்குத்தெரியுமா? இந்த மாற்றம் சாதகமாகவும் இருக்கும், பாதகமாகவும் இருக்கும். இதற்கான போராட்டம் இப்போது இணையத்தில் கண்ணுக்குத்தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா? இதனை அடையாளம் தான் அட்ரி இணைய சேவை!

குரோம் பிரவுசர் நீட்டிப்பாக அறிமுகமாகி இருக்கும் அட்ரி.மீ (https://www.atri.me/) , இணையத்தில் மேற்கொள்ளப்படும் புதுமையான புதுமை முயற்சியாக அமைந்திருக்கிறது. இந்த வாசகத்தில் அடுத்தடுத்து வந்து விழுந்திருக்கும் புதுமை டைப்பிங் பிழை என்று நினைக்க வேண்டாம். இந்த சேவையின் அடிப்படை கருத்தாக்கம் மற்றும் செயல்முறை இரண்டிலும் உள்ள மாறுபட்ட தன்மையே இப்படி வர்ணிக்கத்தோன்றுகிறது.

அட்ரியின் புதுமை, இணையவாசிகளின் தாராள மனதை சோதித்துப்பார்க்கக் கூடியது. அதனால் தான் இதை ஒரு முழு நீள சேவையாக அல்லாமல் மூன்று மாத காலத்திற்கான பரிசோதனை முயற்சியாக மேற்கொண்டிருக்கின்றனர்.

அட்ரி பயன்படுத்த ஒப்புக்கொள்பவர்கள் முதலில் பத்து டாலர் செலுத்த ஒப்புக்கொள்ள வேண்டும். இது மாதாமாதம் செலுத்த வேண்டிய கட்டணம் என்பதை கவனத்தில் கொள்க!

இணையத்தில் கட்டணம் என்றாலே எட்டிக்காயாக நினைப்பவர்களுக்கு இது கசப்பான செய்தியாக இருக்கலாம். இதை முயன்றவரை ஏற்கக் கூடியதாக செய்வது தான் அட்ரியின் நோக்கம்- அட்ரி எதற்காக பயனாளிகளிடம் இருந்து 10 டாலர் கேட்கிறது என்றால் தனக்காகவோ அல்லது தனது சேவையை பயன்படுத்துவதற்காகவோ அல்ல! உண்மையில் அட்ரி எந்த சேவையையும் வழங்கவில்லை. நீட்டிப்பு சேவையான அட்ரியை தரவிறக்கம் செய்த பிறகு அது பின்னணியில் ஒசைப்படாமல் இருக்கும். அவரவர் இணையத்தை தங்கள் விருப்பம் போல பயன்படுத்தலாம். பின்னர் மாத முடிவில் பயனாளிகள் கொடுத்த தொகையை அவர்கள் சார்பாக, இணையதளங்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்கியவர்களுக்கு அட்ரி பிரித்தளிக்கும். அவர்கள் எந்த கட்டுரைகள் அல்லது செய்திகளை அதிகம் படித்துள்ளனரோ அதன் அடிப்படையில் இந்தத் தொகை பகிர்ந்தளிக்கப்படும். இது தொடர்பான விவரமும் உங்களுக்கு அறிக்கையாக அளிக்கப்படும்.

இந்த பகிர்ந்தளித்தலை விளம்பரம் சார்ந்த இணையத்திற்கான மாற்று தேடும் பரிசோதனை முயற்சி என்கிறது அட்ரி.

ஏன்? எதற்காக? என்ற கேள்விகளுக்கான பதிலை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இணையத்தில் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டணச் சேவை தொடர்பான விவாதத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். கட்டணச்சேவை மட்டும் அல்ல விளம்பரங்களின் தேவை தொடர்பான விவாதமாகவும் இது அமைந்துள்ளது.

இணையதளங்கள் மற்றும் இணைய சேவைகளின் வருவாய் ஆதாரம் என்பது பெரும்பாலும் விளம்பரங்கள் சார்ந்த்தாகவே இருக்கின்றன. கூகுள் போன்ற தேடியந்திரங்களில் தேடும் போது தேடல் முடிவுகளுக்கு இடையே எட்டிப்பார்க்கும் விளம்பரங்கள், இமெயில் பெட்டியில் எட்டிப்பார்ப்பவை, இணையதளங்களின் பக்கவாட்டில் இடம்பெறுபவை, கட்டுரைகளுக்கு நடுவே இருப்பவை என இணையத்தில் எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் தான். பல நேரங்களில் இவை இணைய உலாவுவதலுக்கு இடையூறாக இருக்கலாம். வாசிப்புக்கும் தடையாக இருக்கலாம். எத்தனை முறை கட்டுரைகளை வாசிக்கும் போது, அவற்றின் பக்கவாட்டில் அல்லது கீழே, படிக்க வேண்டிய செய்திகள் என கட்டம் கட்டமாக தொடர்பே இல்லாத செய்திகளும், கட்டுரைகளும், வீடியோக்களும் பரிந்துரைக்கப்படுவது கண்டு எரிச்சல் அடைந்திருக்கிறோம். ஆனால் இது போன்ற விளம்பரங்களை சகித்துக்கொள்வதை தவிர வேறுவழியில்லை.

விளம்பரம் தான் வருவாய் நிதி என்பதால் இணையதளங்கள் முடிந்த வரை விளம்பரங்களுக்கு இடமளிக்கவே முயற்சிக்கும். இந்த விளம்பரங்களை அதிக எண்ணிக்கையில் பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காகவே பயனாளிகளை அதிகம் ஈர்க்க கூடிய உள்ளடக்கத்தை உருவாக்க முயல்கின்றன. இது தான் இணைய யதார்த்தம்- அதாவது நேற்று முன் தினம் வரை!

இன்று இதற்கு ஒரு மாற்று வழி இணையவாசிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது தான் ஆட்பிளாக்கர் எனப்படும் விளம்பரம் தடுப்பு மென்பொருள்கள். பிரவுசர் நீட்டிப்புகளாகவும், ஸ்மார்ட்போன் செயலிகளாகவும் வரும் இந்த மென்பொருள்கள், இணையதளங்களில் உள்ள விளம்பரங்களை நீக்கி விடுகின்றன. இதன் பயனாக விளம்பர இடைஞ்சல்கள் இல்லாமல் இணையத்தில் செய்திகளையும், கட்டுரைகளையும் வாசிக்கலாம். நல்ல விஷயம் தான், பயனாளிகளுக்கு! ஆனால் இணையதள உரிமையாளர்களுக்கு அல்ல!

இணையவாசிகள் விளம்பரங்களை பார்வையிடுவதன் மூலமே தளங்களுக்கு வருவாய் எனும்போது, விளம்பரங்களை உருவி எரிந்துவிடும் ஆற்றல் இணையவாசிகள் கைகளில் கொடுக்கப்பட்டால் என்ன ஆகும்? ஆக, விளம்பர தொல்லையில் இருந்து இணையவாசிகள் தப்பிக்க வழி செய்யும் மென்பொருள்கள், இணையதள உரிமையாளர்களின் வருவாயை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் எது சரி, எது நியாயம் எனும் விவாதம் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இணையவாசிகள் கண் கொண்டு பார்த்தால் விளம்பரங்கள் இடையூறு தான். அதிலும் பொருத்தமில்லாத, தேவையில்லாத விளம்பரங்கள் நிச்சயம் கவனத்தை சிதறடிப்பவை தான். அதோடு, விளம்பர நிறுவனங்கள் இணையவாசிகளின் இணைய பழக்கங்களை ஒற்று அறிவது போன்ற புகார்களும் இருக்கின்றன. எனவே, தொழில்நுட்பம் மூலம் இணையவாசிகளுக்கு விளம்பரம் இல்லாத அனுபவத்தை அளிப்பது சாத்தியம் எனில் அது வரவேற்க வேண்டியது தானே.

ஆனால் இணையதள உரிமையாளர்கள் மற்றும் உள்ளட்டக்கங்களை உருவாக்குபவர்கள் இதன் தங்கள் வருவாயை பாதிக்கும் செயலாக பார்க்கின்றனர்.

விளம்பர வருவாய் இல்லை பாதிக்கப்படும் போது, தரமான உள்ளடக்கத்தை உருவாக்குவது எப்படி சாத்தியம்? கட்டுரையாளர்களுக்கு ஊதியம் அளிப்பது எப்படி சாத்தியம்? என்று இணையத்தில் தரமான உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்ற வயர்டு.காம, ஆர்ஸ்டெக்னிகா போன்ற தளங்கள் தங்கள் வாசகர்களிடம் கேள்விகளை வைத்துள்ளன.

ரெஸ்டாரண்ட்களுக்கு வருபவர்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றால் எப்படி இருக்கும், அது போல தான் இதுவும் என்று அர்ஸ் டெக்னிகா சில ஆண்டுகளுக்கு முன்னரே இது பற்றி கேள்வி எழுப்பியிருந்தது. வயர்டு.காம், கட்டணச்சேவை மற்றும் ஆட்பிளாக்கர் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் முழு அளவிலான கட்டுரைகளை பார்க்க முடியாத கட்டுப்பாடு பற்றிப் பேசியுள்ளது. இப்படி பல தளங்கள் விளம்பர தடுப்பு மென்பொருளை நாட வேண்டாம் எனும் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, விளம்பர தடுப்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் விளம்பரங்களை அனுமதிக்கும் வகையில் செயல்பட்டு வருவாய் பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த விவாதத்தில் இன்னும் முக்கியமான கோணங்கள் எல்லாம் இருக்கின்றன.

இந்த பின்னணியில், அட்ரி பிரவுசர் நீட்டிப்புச் சேவை விளம்பரம் சார்ந்த இணையத்திற்கான மாற்று வழி என்று சொல்வதன் முக்கியத்துவத்தை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? முழுவதுமாக விளம்பரங்களை நம்பி இருக்கவும் வேண்டாம்; அதே நேரத்தில் விளம்பர வருவாயை இழப்பையும் ஈடு செய்யலாம். இதற்கு அட்ரி முன்வைக்கும் வழி தான், இணையவாசிகள் சார்பில் உள்ளட்டகங்களை உருவாக்குபவர்களுக்கு கட்டணம் அளிப்பது.

எப்படியும் இணையவாசிகள் கவனத்திற்கு தான் விளம்பர நிறுவனங்கள் பணம் கொடுக்கின்றன. அந்த கவனத்தை அளவிட்டு ஒரு தொகையை இணையதள உரிமையாளர்களுக்கு செலுத்த முடிந்தால் நல்லது தானே என்று அட்ரி சேவைக்கான விளக்கம் அளிக்கும் மீடியம் வலைப்பதிவு சொல்கிறது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள அல்கோரிதம் இணையவாசிகள் எந்த கட்டுரைகள் அல்லது இணைய பக்கங்களில் கவனம் செலுத்துகின்றனர் என கவனித்து அதனடிப்படையில் தளங்களுக்கு பரிசளிக்கிறது. இதற்காக தான் மாதச்சந்தா கேட்கிறது.

விளம்பர் சச்சரவே வேண்டாம், நல்ல உள்ளடக்கம் கவரும் தன்மைக்கேற்ப இணையவாசிகளிடம் இருந்தே கட்டணம் பெற்றுத்தருகிறோம் என்று சொல்வது புதுமையான முயற்சி தானே! ஆனால் இது சரியாக வருமா? எனும் கேள்வியும் இருக்கிறது. அதனால் இந்தச் சேவையை 3 மாத காலத்திற்கு 10,000 பயனாளிகளிடம் சோதனை முறையில் அமல் செய்ய தீர்மானித்திருக்கிறது. இந்த சேவைக்கான தேவை மற்றும் இதில் உள்ள குறைகளை இந்த காலத்தில் தெரிந்து கொண்டு விடலாம் என நம்புவதாக அட்ரி வலைப்பதிவு தெரிவிக்கிறது.

எனவே நல்ல முயற்சி தான், ஆனால் வெற்றி பெறுமா? எனும் கேள்விக்கே இடமில்லாமல், பரிசோதனையாகவே இது முன்வைக்கப்படுகிறது. பார்ப்போம் இதற்கான வரவேற்பும் ,எதிர்வினையும் எப்படி இருக்கிறது என்று!

நிற்க, இந்த வகை பணம் செலுத்துதலை நுண் கட்டணம் என்று சொல்கின்றனர். இணையவாசிகளுக்கு கையை கடிக்காமல் இருக்கும் என்பதால் அவர்கள் இணைய பயன்பாட்டின் போது இதற்கு முன்வருவார்கள் என்பது நம்பிக்கை. இணையதளங்களுக்கோ ஆயிரக்கணக்கில் நுண் கட்டணம் சேரும் போது சீரான வருவாயாக இருக்கும்.

கட்டணம் அல்லது சந்தா செலுத்தினால் தான் உள்ளே வரலாம் என கராராக சொல்லும் கட்டணச்சுவர் வசதியை விட மேம்பட்டதாக கருதப்படுகிறது. எப்படியோ இணையம் எல்லாமே இலவசம் எனும் மாதிரியில் இருந்து மாறிக்கொண்டிருக்கிறது என்பது தான் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்!

அட்ரி தொடர்பான மீடியம் வலைப்பதிவு

தகவல் திங்கள் தொடரும்... 

எளிதினும் எளிது கேள் இணையதளங்கள்!

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதுமையான நினைவூட்டல் சேவை!