தமிழ் நாட்டில் 5 மாவட்டங்களில் ரூ.60 கோடி ரூபாய் செலவில் ஷெட்யூல்ட் வகுப்பு மாணவிகளுக்கு உறைவிடப் பள்ளிகள்!

0

தமிழ் நாட்டில் ஐந்து மாவட்டங்களில் ஷெட்யூல்ட் வகுப்பு மாணவிகளுக்கு உறைவிடப் பள்ளிகள் ரூ.60 கோடி செலவில் அமைக்கப்படும் என்று மத்திய சமூக நீதி மற்றம் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் தென் மாநில மற்றும் யுனியன் பிரதேச சமூக நலத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளரிடம் பேசினார்.

மத்திய அரசு இந்த திட்டத்தை அண்மையில் அறிவித்து செயல்படுத்தியுள்ளதாகவும் இத்திட்டம் தொடர்பாக இன்றையக் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாகவும் அவர் கூறினார். இந்த திட்டத்தை எந்தந்த மாவட்டத்தில் செயல்படுத்தலாம் என்று பரிந்துரை செய்தால் மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கும் என்றார்.

இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12 வகுப்பு வரையில் ஷெட்யூல்டு வகுப்பு மாணவிகளுக்கு இந்த பள்ளிகளில் உறைவிட வசதியுடன் கல்வி அளிக்கப்படும். இதற்கான பள்ளிக் கட்டிடங்கள் 12 கோடி செலவில் கட்டப்படும். மலைப் பகுதிகளில் இத்தகையப் பள்ளிகள் அமைக்க 16 கோடி ரூபாய் வீதம் மத்திய அரசு வழங்கும். 

இந்த பள்ளிகளில் ஏற்படும் தொடர் செலவினங்களை முதல் மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். 4-வது ஆண்டு முதல் இப்பள்ளிகளில் நடப்புச் செலவினம் மத்திய மாநில அரசுகளால் 60%, 40% என்ற விகிதாச்சாரத்தில் செலவிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இப்பள்ளிகளில் பயிலும் மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூபாய் 85,000 வீதம் மத்திய அரசு வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

பத்தாம் வகுப்புகளுக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான ஷெட்யூல்ட் வகுப்பு மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை மத்திய அரசு அறிவித்த நெறிகளின் படி அந்தந்த மாணவ மாணவியரின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும் என்றார். இதற்கென அந்தந்த மாநிலங்களில் வலைதளங்களை உருவாக்கி விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே பெற வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் குர்ஜர் கூறினார்.

மத்திய அரசு முதியோருக்கான பிரத்யகமான புதிய திட்டம் ஒன்றை அறிவித்து செயல்படுத்தி வருவதாகவும், இத்திட்டம் தமிழ்நாட்டில் தென் சென்னையிலும் கன்னியாகுமரியிலும் செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கபட்ட முதியவர்களுக்கு கண் கண்ணாடி, சக்கர நாற்காலி, செயற்கைப் பல் செட் உள்ளிட்டவை வழங்கப்படும்.

மத்திய அரசின் நெறிமுறைகளின்படி செயல்படாத மாநிலங்களுக்கு இனி மானியங்கள் வழங்கப்பாடது என்று கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.