ஒன்றுமே செய்யாமல் ஆறு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

3

மக்களுக்கு அதிக பயன்தரக் கூடிய ஒரு பொருளை நம்பமுடியாத அளவிற்கு குறைந்த விலையில் தருவதாக அறிவிப்பதன் மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்பதை கிண்டலாய் சொல்லும் கட்டுரை இது.


மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உங்கள் பொருளை தயாரிப்பதாகக் கூறுங்கள் (இதற்கு சல்லி பைசா செலவாகாது)

எல்லாரும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பற்றி மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில் யாரும் நம்பமுடியாத விலையில் ஒரு ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய இருப்பதாக அறிவியுங்கள். அதன் பெயர் எல்லாரையும் கவரும் விதத்தில் இருக்கவேண்டும். உதாரணத்திற்கு 'ஃப்ரீடம் 251'. மேலும் அதில் இரண்டு கேமரா, 3ஜி, ஹெச்.டி திரை உள்ளிட்ட கவர்ச்சியான அம்சங்கள் இருப்பதாக அறிவிக்க வேண்டும்.

மார்க்கெட்டிங் செலவு (இதற்கும் நயா பைசா செலவழிக்க வேண்டியதில்லை) 

மேலே சொன்ன அறிவிப்பின் மூலம் உலக மீடியாக்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பிவிடலாம். இணையதளங்களும் உங்களை மொய்க்கத் தொடங்கிவிடும். சமூக வலைதளங்களில் உங்கள் அறிவிப்பு ட்ரெண்டாகும். இந்த மாதிரியான அறிவிப்புகளில் இந்திய மக்கள் அதிக கவனம் செலுத்துவார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கும் இந்திய மீடியாக்களும் உங்களை கவர் செய்வார்கள்.

பொருளை அறிமுகப்படுத்த ஒரு தேதி குறியுங்கள் (இதற்கான செலவு 5 லட்சம்)

ஒரு தேதி குறித்துக் கொண்டு அந்த தேதியில் உங்கள் பொருளை அறிமுகப்படுத்துங்கள். நீங்கள் குறித்த தேதியில் ஏதாவது அரசு விழாக்கள் நடந்தால் இன்னும் வசதி. அந்த விழாவிலேயே அறிமுகப்படுத்திவிடலாம். எப்படியும் எல்லா மீடியாக்களும் அங்கு இருப்பார்கள். இலவச பப்ளிசிட்டி. 

மட்டமான சைனா மொபைல்கள் ஐந்தை வாங்கி உங்கள் ஸ்டிக்கரை அதில் ஒட்டி விடுங்கள். அழகான மாடல்கள் கையில் அவற்றை கொடுத்து நிற்கச் சொல்லுங்கள். அறிமுக விழா இனிதே நிறைவடைந்தது.

உங்கள் போன்களை புக் செய்ய ஒரு தளத்தை தொடங்குங்கள் (செலவு 7,500 ரூபாய்)

ஒரு சிம்பிளான இணையதளத்தை தொடங்குங்கள். அதில் உங்களைப் பற்றிய விவரங்களையும், தொடர்பு எண்களையும் தருவது உங்கள் மீதான நம்பகத்தன்மையை வளர்க்கும். (ஃப்ரீடம் 251 இணையதளத்தில் இந்த தகவல்கள் இல்லை)

உங்கள் தளத்தில் ஒரே ஒரு விதியை மட்டும் மறக்காமல் குறிப்பிடுங்கள். 'ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களுக்கு பொருள் வழங்க முடியாமல் போனால் பணம் திரும்பத் தரப்படும்' என்பதே அது.

இதுதான் நீங்கள் கோடீஸ்வரனாகப் போகும் இடம்

50 லட்சம் வாடிக்கையாளர்களிடம் போனுக்கு 251 ரூபாய், டெலிவரி செய்ய 40 ரூபாய் என தலா 291 ரூபாய் வாங்குங்கள். இதன்மூலம் உங்களிடம் 145 கோடி ரூபாய் வசூலாகும். ஆறே மாதத்தில் டெலிவரி செய்யப்படும் இல்லையென்றால் பணம் வாபஸ் என அறிவியுங்கள். அந்த 145 கோடியை வங்கிகளில் டெபாசிட் செய்யுங்கள். ஒன்பது சதவீத வட்டியில் ஆறு மாதத்தில் உங்களுக்கு 6.5 கோடி ரூபாய் கிடைக்கும்.

ஆறு மாதம் கழித்து அந்த 145 கோடியை திரும்ப வாடிக்கையாளர்களிடம் கொடுத்து விடுங்கள். உங்கள் கணக்கில் 6.5 கோடி ரூபாய் லாபம்.

பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் அனைத்தும் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே. இதற்கு இந்த தளம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.

ஆக்கம் : ரோஹித் லோஹாடே | தமிழில் : சமரன் சேரமான் 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

251 ரூபாய் ஸ்மார்ட்போன்; மலிவான போனா? மார்கெட்டிங் வித்தையா?