சர்வதேச பொருட்கள் வர்த்தகத்தில் நிலையாக இருக்கும் வெற்றிமங்கை வைஷாலி சர்வன்கர் 

0

ஒரு சர்வதேச வர்த்தக வளாகத்தின் வியபார தளத்தில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை சந்திக்கும் ஆண்கள் அவர்களின் உன்னதத்தை இழக்கிறார்கள். நங்கூரம் இல்லாமல் பறக்கும் வார்த்தைகளின் கடுமையான பனிப்போர் நடக்கும் தளம் அது. நமக்கான நல்ல புகைப்படத்திற்காக, பொங்கிவழியும் தனது கூந்தலை சர்வசாதாரணமாக சரிசெய்யும் வைஷாலினி சர்வன்கருக்கு இது வாழ்வில் இன்னும் ஒருநாள். டன்கிர்கின் ஆவியைபோல் ஆச்சர்யம் என்னவென்றால் இரண்டு தலைமுறையாக இவர் தொடர்ந்து இந்த தொழிலில் நீடிக்கிறார். மகாராஷ்ட்ராவின் கிராமத்திலிருந்து வந்திருக்கும் இந்த பெண்மணி உயர்கல்வி கற்க விரும்பியவர். ஆனால், அது இல்லாமலேயே, இந்தியாவிலேயே சர்வதேச வர்த்தகத்தில் கொடிகட்டிப்பறக்கும் மூன்றாவது பெண்மணியாக திகழ்கிறார்.

பெண் குழந்தை

வைஷாலி மகாராஷ்ட்ராவின் கொன்கனி குடும்பத்தை சேர்ந்தவர், அவர் தன்னுடன் பிறந்த மூன்று சகோதரிகளுடன் வளர்ந்தார். வைஷாலி தன்னுடைய பள்ளிப்படிப்பை மும்பையின் தாய்மொழிப் பள்ளியில் பயின்றார். 

“எங்கள் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாததால், சமூகம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எங்கள் மீது பாரபட்சம் காட்டி ஒதுக்குவதை உணர்ந்தோம்; எங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற ஆண் வாரிசுகளைப் போல எங்களை அவர்கள் நடத்தவில்லை. ஆனால் சில சமயங்களில் இது போன்ற ஒதுக்கி வைக்கும் குணம் உங்களுக்குள் வாழ்க்கை மீதான ஈர்ப்பையும், இலக்கை அடைந்து வாழ்வில் வென்று காட்ட வேண்டும் என்ற எண்ணத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கும்” என்று சொல்கிறார் அவர்.

தனக்குள் திறமையை ஆணித்தரமாக ஊன்றுகோலிட்ட தந்தைக்கு தலைவணங்குகிறார் வைஷாலி. “எனக்கு தொடக்க காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்னுடைய தந்தை, ஒரு மனிதன் எதில் அக்கறை காட்ட வேண்டும் என்பதை நான் அவரிடம் இருந்தே கற்றக் கொண்டேன். அவர் எங்கள் குடும்பத்திற்காக எத்தனை சிறப்பாக செயல்பட்டாரோ அதே போன்று நானும் இருக்க வேண்டும் என்பதே எனக்கு எப்போதும் இருக்கும் விருப்பம் – யாராவது ஒருவரைச் சார்ந்தே குடும்பம் நடத்த முடியும்.”

வைஷாலி தன்னுடைய உயர் கல்வியை மும்பையின் NMIMSல் பயின்றார், ஆனால் சமுதாயப் பிணைப்பால் தான் நினைத்தபடி தன்னுடைய வாழ்க்கையை தொடர முடியாமல் தத்தளித்து வந்தார். “தொழில்முனைவராக வேண்டும் என்பதே எனக்கு எப்போதும் இருந்த ஆசை, ஆனால் என்னுடைய சமூகத்தைப் பொருத்தவரை பெண்களுக்கு அது ஒரு எட்டாக்கனி,” என்று குறிப்பிடுகிறார் வைஷாலி. எனினும் அவர் சோர்ந்துவிடவில்லை, வீதியில் இறங்கி இலக்கை நோக்கி பீடு நடை போட்டார், Bunge இந்தியா நிறுவனத்தில் செயலதிகாரியாக தன்னுடைய முதல் பயணத்தை தொடங்கினார்.

‘பெண்களுக்கு தொழில் செய்யும் வாய்ப்பு இங்கே இல்லை!’

தன்னுடைய பயணத்தின் முதல் அடியில் இருந்து விவரிக்கத் தொடங்கினார் வைஷாலி. “பொதுவாக ஒரு நிறுவனத்தில் சேரும் போது பெண்களை அலுவலகப் பணி அல்லது கிளெரிக்கல் வேலைக்கு மட்டுமே பணியில் அமர்த்துவர், அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது, அதோடு இது சௌகரியமான பணி என்றும் கருதுகின்றனர். ஆனால் நான் இதைச் செய்ய விரும்பவில்லை, என்னுடைய உயரம் எனக்குத் தெரியும், நான் மேலே மேலே உயர நினைத்தேன்,” என்று சொல்கிறார் அவர்.

Bunge ஒரு கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனமாக இருந்த போதும் வைஷாலி பரிந்துரைகளுக்காக எப்போதும் பின்தங்கியதே இல்லை, அதே போன்று மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் அவர் திகழ்ந்தார். “பெண்களுக்கு ஒரு சாதாரண இடம் மட்டுமே இருந்தது, இது அவர்களுக்கு போதுமானதல்ல. பெரும்பாலும் பெண்களின் பங்களிப்பு அதிகாரி அல்லது மேலாளர் அளவிலேயே நின்று விடும், ஆனால் நான் ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த மற்றும் அமைப்புசாரா வணிகத்தில் ஈடுபட்டுள்ளேன். ஆனால் குழந்தைப் பருவம் முதலே நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் முடியாது என்று எதுவுமே இல்லை. இந்த வீழ்ச்சியையே நான் வர்த்தகத்தில் புகுத்த விரும்பினேன், ஏனெனில் பெண்களுக்கு வர்த்தக அறிவு இல்லை என்று பலரும் கருதுகின்றனர். நான் என்னுடைய பாஸ்கள் டீல்களை எப்படி தகர்க்கிறார்கள், வணிகர்களுடன் எப்படி லாவகமாக உரையாடுகின்றனர் என்பதை உற்று கவனிக்கத் தொடங்கினேன், அதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் வணிகர்களுடன் நேரடியாக நானே கலந்துரையாடி அவர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினேன்” என்று தான் எப்படி இந்த வர்த்தகத்தில் நுழைந்தார் என்பதை விவரிக்கிறார் வைஷாலி.

களம் கடினமானது

இந்தத் துறைக்குள் ஆழமாக சென்று பார்த்த போது தான் வைஷாலிக்கு ஒரு உண்மை புலனானது, மேலோட்டமாக பார்த்தால் அது சாதாரணமானதாக இருக்கிறது, ஆனால் பணி நேரத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது இது பெண்களுக்கு ஒத்துவராதத் துறையாக கருதப்படுவதை உணர்ந்தார்.

வைஷாலி அட்லாண்டிக் குழும நிறுவனத்தில் இணைந்தார், அந்த நிறுவனம் சர்வதேச கமாடிட்டி சந்தையில் அங்கம் வகித்தது, அதன் சர்வதேச வர்த்தக பிரிவுத் தலைவராக சேர்ந்தார். “நான் வியாபாரத்தின் சிறு சிறு நுணுக்கங்களையும் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும் என்பது புரிந்தது. முதலில் இந்தத் துறையில் நுழைந்ததும் சற்று கடினமாகவே இருந்தது, எனினும் பெண்களுக்கு க்ளெரிக்கல் வேலைகளே பொருத்தமானவை என்ற கருத்தை உடைக்க நான் நினைத்தேன். நாங்கள் துறைமுகத்தில் அடிமட்ட அளவில் இருந்த வியாபாரிகளுடன் ஒப்பந்தங்களை செய்தோம், அவர்களின் பேச்சு கரடுமுரடாகவும், கோபத்தை தூண்டுபவையாகவும், அநாகரிகத்தின் உச்சமாகவும் இருக்கும் ஆனால் இவை அனைத்தும் வர்த்தகத்தில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். அவர்களுடன் தான் எங்களது கலந்துரையாடல்கள் சென்றன. 

மக்கள் பொருட்களை வாணிபம் மற்றும் கொள்முதல் செய்ய மிகவும் சிரமப்பட்டனர். நாங்கள் அவர்களை மற்றவர்களை போல மின்அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள மாட்டோம், சற்று மிரட்டும் தொனியிலும் அதேசமயம் அவர்களோடு கலகலப்பாக தொலைபேசியில் பேசியும் வாணிபத்தை நடத்துவோம். வர்த்தகத் துறைக்கும் பண்பாட்டுக்கும் தூரம் அதிகம். ஆனால் வர்த்தகம் உங்கள் ரத்தத்தில் ஊறிப் போன ஒரு விஷயம் என்றால் உங்களால் அதோடு எளிதில் ஒன்றிப் போய்விட முடியும். ஆம் நானும் வர்த்தகத்தில் சிறந்து விளங்க உலகம் முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டேன், பலதரப்பட்ட வியாபாரிகள், இடைத்தரகர்களை சந்தித்தேன். அவர்கள் அனைவருமே ஆண்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது வர்த்தகத்திற்காக உலகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்த ஒரே பெண் நான் தான்” என்று சொல்கிறார் வைஷாலி.

தன்னை நிரூபிக்கவும் மெய்ப்பித்துக் காட்டவும் தான் இரண்டு மடங்கு கடின உழைப்பாற்ற வேண்டும் என்பதை அறிந்து வைத்திருந்தார் வைஷாலி. “பெண்களுக்கு இந்தத்துறை ஏற்றதல்ல என்ற பார்வையை நான் மாற்ற நினைத்தேன். அதற்கேற்ப என்னை நான் மெருகேற்றிக் கொண்டேன். இந்தத் துறையில் என்னுடைய கால்தடம் பதிக்க நினைத்தது நிலைகுலையவைக்கும் அனுபவம், ஆனால் காலம் ஒத்துழைத்தால் அனைத்தும் சாத்தியமே. உங்கள் திறமையை நீங்கள் ஒரு முறை வியாபாரத்தில் நிரூபித்து விட்டால், பின்னர் உங்களை யாரும் புறந்தள்ள மாட்டார்கள், எனக்குள் இருக்கும் விஷயங்களை நான் கண்டுபிடிக்கத் தொடங்கினேன் அதுவே எனக்கு ஆறுதலைத் தந்தது” என்று கூறுகிறார் அவர்.

2016ல் வியாபாரத்தில் அவர் ஏற்படுத்திய லாபத்தின் எண்ணிக்கை அவரை நிரூபிக்க உதவியது, ஆம் வைஷாலி $10 மில்லியின் வர்த்தகத்தை $100 மில்லியனாக மாற்றினார். “ஐந்து ஆண்டு கால சுழற்சியில் $100 மில்லியன் ஈட்ட வேண்டும் என்பது எங்களின் இலக்கு, அதை நாங்கள் அடைந்து விட்டோம்” என்று கண்களில் சந்தோஷம் பொங்க கூறுகிறார் அவர்.

வேர்களை மறக்காத வைஷாலி

ஒரு வர்த்தகத் தலைவராக இருந்த போதும் சமூக சேவை மூலம் நட்சத்திரமாகவும் ஜொலிக்கிறார் வைஷாலி. பெண்கள் முன்னேற்றத்திற்காக முழுமனதோடு பாடுபடும் அவர் பழங்கால பழக்கவழக்கங்களை புறந்தள்ளி கார்ப்பரேட் வாழ்க்கை தன் சமூக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார். வைஷாலி தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த 40 பெண் பிள்ளைகளை தத்தெடுத்துள்ளார். அவர்களோடு கைகோர்த்து குழந்தைப்பருவத்தில் தனக்கு தேவைப்பட்ட கல்வி மற்றும் தொழிலில் கிடைக்காமல் போன விஷயங்களை அவர்களுக்கு எளிதில் கிடைக்க உதவிவருகிறார். மேலும் வைஷாலி தன்னுடைய நிறுவனத்தில் பெண்களுக்கான செயல்பாடுகளையும் ஊக்குவித்து வருகிறார். 

“இந்த சமுதாயத்தில் நிலவும் பாலினபாகுபாட்டை உடைத்தெரிய நான் விரும்புகிறேன், இதற்கு பெண்களின் முன்னேற்றமும் அவர்கள் சொந்தக் காலில் நிற்பதும் மிகவும் அவசியம். அவர்கள் அந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பெண்களை சீர்படுத்தும் பயிற்சியை அவர்களுக்குக் கொடுக்கிறோம். மேலும் துறை சார்ந்த வல்லுநர்களை அழைத்து அவர்களின் வெற்றிக் கதைகளை எங்கள் பெண் பணியாளர்களுக்கு பகிர்ந்து கொள்ளச் செய்கிறோம் இதன் மூலம் அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலை உருவாகிறது, என்று விளக்குகிறார் வைஷாலி.

கட்டுரை : பிஞ்ஜால் ஷா | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்