உணர்வுசார் நுண்ணறிவுடன் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

0

ஒரு மேலாளர் ஒரு ஊழியரை பணியிலமர்த்தவேண்டும். இரண்டு நபர்கள் உள்ளனர். முதல் நபர் அதிக அனுபவமிக்கவர், தொழில்நுட்ப திறமைகளில் தகுதி பெற்றவர். ஆனால் எளிதில் கோபம் அடைவதும், சட்டென்று மாறும் மனப்பாங்கும் கொண்டவர், குழு நடவடிக்கைகளில் மோசமானவர், கடுமையான சுபாவமுள்ளவர். இரண்டாவது நபர்; பணிக்குத் தேவையான தகுதியும் தொழில்நுட்ப அறிவும் கொண்டவர். தவிர சிறப்பாக குழு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர், இனிமையாக பழகுபவர் அமைதியாகவும் விவேகமாகவும் செயல்படுபவர். அந்த மேலாளர் இவ்விருவரில் சற்றும் சிந்திக்காமல் இரண்டாவது நபரைத் தான் தேர்ந்தெடுப்பார் இல்லையா?

உலகமே தற்பொழுது அறிவுத்திறன் குறித்து பேசுவதைத் தாண்டி உணர்வு சார்ந்த அறிவு குறித்து விவாதித்து வருகிறது. ஒருவரது பெரும்பாலான பண்புகள் உருவாவது குழந்தைப் பருவத்தில்தான் என்பதால் ஒட்டுமொத்த கவனத்துடனான குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கிய அம்சமாகும். மன அழுத்தத்தை குறைக்கவும், திறமையாக மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும், மற்றவர்களை புரிந்து கொள்ளவும், சவால்களை சமாளிக்கவும், மோதல்களை தணிக்கவும் ஒருவரது உணர்வுகளை கண்டறிந்து, புரிந்துகொண்டு நிர்வகிக்கும் திறமையே EQ எனப்படும் உணர்வுசார் நுண்ணறிவாகும்.

பாரம்பரியமாகவே இந்திய பெற்றோர்கள் கல்விக்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். குழந்தைகளின் கல்வி சார்ந்த வாழ்க்கையை முன்னிறுத்தியே அவர்களது நேரத்தையும் ஆற்றலையும் செலவிடுகின்றனர். கூட்டு குடும்ப அமைப்பு கலைந்ததாலும் ஒற்றைக் குழந்தையாக வளர்வதாலும், வேலைக்குச் செல்லும் பெற்றோர் இன்று அதிகரித்ததாலும், நன்கு அனுசரித்து விட்டுக்கொடுத்துச் செல்லும் குழந்தைகளை வளர்ப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

உங்கள் குழந்தையின் உணர்வு சார்ந்த அறிவை மேம்படுத்த பெற்றோராகிய நீங்கள் பின்பற்றவேண்டிய சில குறிப்புகள்: 

பதிலளியுங்கள்

பச்சிளம் குழந்தையாக இருப்பினும் அதற்கு பெற்றோர் பதிலளிப்பது அவசியமாகும். பச்சிளம் குழந்தை அழத் தொடங்கும்போது, குழந்தையிடம் இனிமையான குரலில் பேசும்போது, நம்மைப் பார்த்துக்கொள்ளவும் நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்யவும் யாரோ இருக்கிறார்கள் என்று குழந்தை புரிந்துகொள்ளும். குழந்தை வளர்ந்த பின்னும் குழந்தைக்கு பதிலளிப்பது அவசியம். குறைந்த பட்சமாக “நான் வேலையாக இருக்கிறேன். இதை முடித்தவுடன் நான் உன்னிடம் பேசுகிறேன் சரியா?” என்பது போன்ற பதிலையாவது குழந்தையிடம் சொல்லவேண்டும்.

கேளுங்கள்

உங்கள் குழந்தை உங்களுடன் பேசுவதற்கு ஊக்குவிக்கவேண்டும். அவனுக்கு கதை சொல்லி தூங்கவைக்கும் முன் அன்றைய நாள் எப்படி இருந்தது என்று கேட்பதை பழக்கப் படுத்திக்கொள்ளவேண்டும். தயக்க சுபாவத்துடன் இருக்கும் குழந்தையெனில் “இன்றைய நாள் எப்படி இருந்தது?” என்பது போன்ற பொதுவான கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. அதனால் ”உன் நண்பன் இன்று என்ன சாப்பாடு எடுத்து வந்தான்?” அல்லது “விளையாட்டு நேரத்தில் இன்று என்ன விளையாடினீர்கள்?” என்பது போன்ற குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பலாம். இப்படிப்பட்ட கேள்விகள் சற்று மனம் திறந்து பேச உதவும். 

தெளிவாக விளக்குங்கள்

குழந்தையின் மோசமான ஒரு நடத்தையை சரிசெய்ய முயற்சிக்கும்போது தவறாமல் அதற்கான காரணத்தை அவனுக்கு விளக்குங்கள். ”அப்படிச் செய்யாதே” என்று சொல்வதற்கு பதிலாக “பொம்மையை தூக்கி தரையில் போடக்கூடாது. அப்படிச் செய்தால் அது உடைந்துவிடும். இது ஒரு தவறான நடத்தை” என்று புரியவையுங்கள். கூச்சலிட்டு திட்டுவதையும் அடிப்பதையும் தவிர்த்துவிடுங்கள். இதைச் சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் செயல்படுத்துவது கடினம்தான். ஆனால் அப்படிச் செய்யும்போது தற்காலிகமாக அப்படிப்பட்ட நடத்தையை நிறுத்தினாலும் வன்முறை நடத்தை அதிகரித்து குழந்தையின் மனதை பாதிக்கும். மாறாக, நீங்கள் குழந்தைக்கு சொல்ல விரும்பும் நியாயத்தை அமைதியான குரலில் விளக்குங்கள். உடனே புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவேண்டாம். ஆனால் காலப்போக்கில் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

புரிந்துகொள்ளுங்கள்

குழந்தை வருத்தமாகவோ கோபமாகவோ இருக்கும்போது அவனை புரிந்துகொண்ட விதத்திலேயே பேசத் தொடங்குங்கள். “உனக்கு ஐஸ்க்ரீம் கிடைக்காத்தால் நீ வருத்தமாக இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் நீ முதலில் உன் மதிய உணவை சாப்பிடவேண்டும்” என்று சொல்லலாம். அல்லது “உனக்கு பிடித்த பொம்மையை உன் சகோதரனுக்கு நீ கொடுக்க விரும்பவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் சிறிது நேரம் அவனுடம் பகிர்ந்துகொள்ளலாம் அல்லவா?” என்று சொல்லலாம். அவர்களது உணர்வுகளை நீங்கள் புரிந்துகொள்ளும்போதுதான் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள அவர்களும் கற்றுக்கொள்வார்கள். 

கட்டுப்படுத்துங்கள்

எல்லைகளை தீர்மானித்தபின் அதில் உறுதியாக இருக்கவும். தன்னிடம் தவறு இருந்தால் எவ்வளவு அடம்பிடித்தாலும் பேச்சுவார்த்தை நடத்தினாலும் விதிகளை மாற்றியமைக்க மாட்டார்கள் என்று குழந்தை புரிந்துகொள்ளும். இதற்கு நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு குழந்தையின் அழுகையையும் கெஞ்சல்களையும் புறக்கணிக்க வேண்டும். நீங்கள் திடமாக இருந்தால்தான் உங்கள் குழந்தை எதிர்காலத்தில் சிறப்பாக அனுசரித்து விட்டுக்கொடுத்துச் செல்லும் குழந்தையாக வளர்வான் என்பதை நினைத்து ஆறுதலடையவேண்டும். 

பேச்சுவார்த்தை

அலுவலகம் சார்ந்தோ அல்லது பொதுவாக மக்களுடன் தொடர்பு கொள்ளும்போது பேச்சுவார்த்தைகளும் சமரசங்களும் தவிர்க்கமுடியாதவை. உங்கள் குழந்தையும் உங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுமதிக்கலாம். ஆனால் உங்கள் முடிவுதான் இறுதியான தீர்ப்பாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு “நீ வீட்டுப்பாடங்களை முடித்தால் விளையாடச் செல்லலாம்”, “உன் அறையை சுத்தம் செய்யவேண்டும். சுத்தம் செய்ததற்காக தூங்கப் போகும்முன் இரவில் ஜூஸ் வேண்டும் என கேட்கக்கூடாது.” 

பேசுங்கள்

குழந்தையுடன் பேசுங்கள். அன்றைய பொழுது உங்களுக்கு எப்படி கழிந்தது, உங்கள் சிறு வயது அனுபவங்கள், செய்திகளில் வரும் சம்பவங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அறிவுரைகளாக அல்லாமல் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டால், உங்கள் குழந்தையிடம் அந்தத் தவறை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கலாம். பெற்றோர் தன் குழந்தையிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்பது குழந்தையிடம் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் என்பதையும் தவறு என்பது அனைவருக்கும் நடக்கும் என்றும் அதை ஏற்றுக்கொண்டு சரிசெய்யவேண்டும் என்றும் உணர்ந்துகொள்வார்கள். அதே சமயம் குழந்தையை அதிகமாக பாராட்டுவதோ அதிகமாக விமர்சிக்கவோ கூடாது. 

எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனிப்பட்ட பண்புகள் இருக்கும். ஒரு குழந்தை வெளிப்படையாக அதிகம் பேசாத கூச்ச சுபாவமுடையவராக இருந்தாலும் அவளுக்குப் பிடித்த பொழுதுபோக்கு குறித்து பேச விரும்புபவளாக இருக்கலாம். மற்றொரு குழந்தை தன்னையே மையமாகக் கொண்டு சிந்திப்பவராக இருந்தாலும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அதிகம் நேசிப்பவராக இருக்கலாம். ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனையும் கொண்டாடுங்கள். குழந்தையின் மாறுபட்ட தவறான கடினமான நடத்தைகளை சீர்செய்யும் முயற்சியாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர சாத்தியமற்ற நூறு சதவீத முழுநிறைவான குழந்தையாக மாற்ற முயற்சிக்கவேண்டாம்.

ஆங்கில கட்டுரையாளர்: சரிகா நாயர்