ஒரு ரூபாய்க்கு வெங்காய விற்பனை கற்றுத்தந்த பாடம்!

2

இந்தியர்களுக்கு வெங்காயத்தின் மீது ஈடுபாடும் விருப்பமும் அதிகம். அண்மைக் காலமாக வெங்காயத்தின் விலை விண்ணை தொடும் அளவுக்கு அதிகரித்து குடும்பங்களின் மாத பட்ஜெட்டை பாதித்திருக்கிறது. நுகர்வோர் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனம் என்ற முறையில், "நின்ஜாகார்ட்" (Ninjacart) "மக்களுக்கு மிகவும் தேவையானதை அளிப்பதில் தான் மிகப்பெரிய மகிழ்ச்சி இருக்கிறது" என்ற தத்துவபடி நடப்பவர்கள். அப்போது தான், ஒரு கிலோ வெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு வழங்கும் விளம்பர திட்டம் பற்றி யோசித்தோம். இதன் மூலம் வெங்காய விலை ஏற்றத்தால் நுகர்வோருக்கு ஏற்பட்டிருந்த அசெளகர்யத்தை குறைக்க விரும்பினோம். இதை நாங்கள் எப்படி செய்தோம் மற்றும் இதில் இருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்பது பற்றி பகிர்கிறார்கள்.

தரமான வெங்காயம் தேர்வு
தரமான வெங்காயம் தேர்வு

பெரிய அளவு தள்ளுபடிக்கு தயாராகுதல்

இது மிகவும் சவாலான திட்டம் என்பதால் இதன் வெற்றிக்காக மார்க்கெட்டிங் முதல் செயல்பாடு வரை எல்லோரும் ஆர்வத்துடன் ஈடுபட்டோம். எங்கள் அணியில் உள்ள அனைவரும் சில நாட்கள் தூக்கத்தை இழந்து தவித்தனர். டெவலப்பர்கள் தவிர எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் இதில் ஈடுபட்டனர்.

நின்ஜா கார்ட் நிறுவனர் குழு
நின்ஜா கார்ட் நிறுவனர் குழு

திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட தினத்திற்காக 10 டன் தரமான வெங்காயத்தை பூனாவில் உள்ள விநியோகிஸ்தரிடம் இருந்து வாங்கினோம். ஒரு நிறுவனமாக, நாங்கள் கவனமாக தேர்வு செய்யப்பட்ட மளிகைப்பொருட்களில் கவனம் செலுத்தி வருவதால், வெங்காயம் கொள்முதலுக்குப்பிறகு வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரமான வெங்காயமே அனுப்ப படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ள கணிசமான நேரம் செலவிடப்பட்டது. ஒரு கிலோ வெங்காயம் பிரத்யேகமான, சுற்றுச்சூழலுக்கு நட்பான நின்ஜா கார்ட் பையில் பேக் செய்யப்பட்டு, நன்றி அட்டையுடன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த செயல்பாட்டில் முக்கிய அங்கம் என்ன என்றால் எங்களுடன் இணைந்திருந்த கிரானா அதாவது மளிகை கடைகளுக்கு, நாங்கள் பேக் செய்யப்பட்ட வெங்காயத்தை அனுப்பி வைத்தது தான். எங்கள் வர்த்தக முறையில் இந்த மளிகை கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதே பிரிவில் உள்ள மற்ற நிறுவனங்களிடம் இருந்து எங்கள் முறை வேறுபட்டது. நாங்கள் மளிகை கடைகளுடன் நெருக்கமாக செயல்பட்டு அவர்கள் தரம் மற்றும் இருப்பை மேம்படுத்துவதில் உதவுகிறோம். அவர்கள் தங்கள் வணிகத்தை இணையத்திற்கு கொண்டு வர கைகொடுக்கிறோம்.

திட்ட நாட்கள்

எங்கள் திட்டம் செப்டம்பர் 4 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு துவங்கி இரண்டு நாள் நீடித்தது. இந்த காலத்தில் 20,000 வாடிக்கையாளர்களுக்கு மேல் எங்களுக்கு கிடைத்தனர் மேலும் தினமும் 2,800 ஆர்டர்களை பூர்த்தி செய்தோம்.

இந்த திட்டத்தின் மூலம் பலவேறு தளங்களின் கவனத்தை ஈர்த்தோம். ஆப் ஸ்டோர் மற்றும் சமூக ஊடகங்களில் முன்னிலை வகித்தோம். திருப்தி அடைந்த பல வாடிக்கையாளர்கள் தங்கள் அனுபவத்தை டிவீட் செய்தனர். பெங்களூருவின் பிரபலமான ஸ்டார்ட் அப் குழுக்களில் எங்களைப்பற்றி குறிப்பிடப்பட்டது. முக்கியமாக பெரும்பாலான வாடிக்கையாளர்களை தேவையை நிறைவேற்றி மகிழ்ச்சியில் ஆழ்த்த முடிந்தது.

கற்ற பாடங்கள்

இந்த மார்கெட்டிங் செயல்பாட்டை, நகரம் முழுவதும் விளம்பர பலகை வைப்பது போன்ற எந்த பெரிய நிகழ்வுடனும் ஒப்பிடலாம். முக்கிய இடங்களில் ஒரு வார காலத்திற்கு விளம்பர பலகை வைக்க ரூ.40 லட்சம் ஆகலாம். (இது குறைவான மதிப்பீடு. முக்கிய இடங்களில் தொகை அதிகமாக இருக்கலாம்). இதனால் ஓரளவு கவனத்தை ஈர்க்க முடியும் என்றாலும் கூட வைரல் தன்மை இருக்காது மற்றும் குறுகிய காலத்திலானது. மேலும் பெரும்பாலான மார்கெட்டிங் விளம்பரங்களில் மக்களின் தேவை பற்றி பேசாமல் தங்கள் தயாரிப்பு பற்றியே பேசுவதால் தாக்கம் குறைவாகவே இருக்கும். இதற்கு மாறாக நாங்கள் ஒரு ரூபாய்க்கு வெங்காயத்தை விற்கும் முயற்சியை அறிவித்தோம். வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்ததால் இதற்கு நல்ல பலனும் இருந்தது. இதன் காரணமாக நல்ல வரவேற்பு கிடைத்து வைரல் தன்மையும் உண்டானது.

  • மூன்று நாட்களில் 20,000 வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.
  • அந்த வாரத்தில் பிளே ஸ்டோரில் எங்கள் செயலிக்கான தேடல் 12 மடங்கு அதிகரித்தது. இதனால் எங்கள் பிளேஸ்டோர் ரேங்கிங் உயர்ந்தது.
  • ஆப் ஸ்டோரிலும் முன்னிலை வகுத்தோம். நாங்கள் வாடிக்கையாளரை கவர்வதற்கான செலவு 100 ருபாய்க்கும் குறைவு.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவது சவாலாக இருக்கும் என அறிந்திருந்தோம். இதை சமாளிக்க பல மூன்றாம் விநியோக நபர்களுடன் கைகோர்த்தோம். ஒரு டெலிவரி கிரிட் அமைப்பை உண்டாக்கினோம். இதன் மூலம் பல்வேறு டெலிவரி அமைப்புகளில் மிகச்சிற்ந்தவற்றை தேர்வு செய்ய முடிந்தது. இதன் மூலம் பெரும்பாலான ஆர்டர்களை இரண்டு மணிநேரத்தில் நிறைவேற்ற முடிந்தது.

நாங்கள் ஏற்றுக்கொண்ட எல்லா ஆர்டர்களையும் திருப்திகரமாக நிறைவேற்ற தானியங்கி டெலிவரி முறையை உருவாக்கினோம். ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவை விட அதிகமாகும் போது ஆர்டர்கள் ஏற்பது நிறுத்தப்பட்டன. பெறப்படும் ஆர்டர்களை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு செய்தோம்.

இது எங்களுடைய முதல் பெரிய விளம்பர திட்டமாகும். இதனால் மற்ற தளங்களிலும் எங்களைப்பற்றிய கவனம் அதிகரித்தது. இந்த திட்டத்திற்கு முன் நாங்கள் நடத்திய சோதனைகளுக்கு சரியான வரவேற்பு இல்லை. ஆனால் இன்று பலரும் ஒரு ரூபாய்க்கு வெங்காயம் விற்றவர்கள் தானே என்று கேட்கின்றனர்.

இது எங்கள் விளம்பர திட்டம், மக்களை சென்றடையும் எனும் எங்கள் நம்பிக்கையை உறுதி செய்கிறது.

இந்த பதிவு நின்ஜாகார்ட் குழுவால் எழுதப்பட்டது.

( குறிப்பு: இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் கட்டுரையாளருடையது.அவை யுவர் ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை).