அண்ணா பல்கலைக்கழகத்தின் 'குருக்ஷேத்ரம்' தொடங்கியது!

1

"தேவையே கண்டுபிடிப்பின் தாய்" என்பது அறிவியல் முதுமொழி. இருந்தும் தேவை, தானே எதையும் உருவாக்கிவிடாது. அதனை உணர்ந்த முயற்சியின் விளைவே அளப்பறிய கண்டுபிடிப்புகள்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப ஆண்டு விழாவாக பிப்ரவரி 17 இல் தொடங்கியுள்ள 'குருக்ஷேத்ரா'16' வின் சூத்திரம் இதுதான்.

அதனால்தான் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் களமான இந்த நிகழ்வை தொடங்கி வைத்து பேசிய பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன்,

"முயல் வெல்லும், ஆமையும் வெல்லும். ஆனால், முயலாமை வெல்லாது "என்றார்.

அந்த முயற்சியின் விளைவாய் சாத்தியமான குருக்ஷேத்ராவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை, மாணவர்கள் கண்டுபிடித்த Dexter எனும் ரோபோ தான் வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றன.

பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் சமூக நலம் சார்ந்த கருவிகள் பட்டியலில் ஏர் லாக், படிக்கட்டு பயண விபத்தை தடுக்கும் கருவி, அப்னியா மானிட்டர், அஷெரா, சாலை விபத்துகளை கண்டறியும் கருவி, கண்காணிப்பு எந்திரன் மற்றும் தூய்மை ரோபோ ஆகியன இடம்பெறுகின்றன.

இதில் தூய்மை ரோபோ திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஸ்வச் பாரத்' திட்டத்தை சார்ந்து வெளியிடப்பட உள்ளது.

தொழில்துறை திட்டங்கள் பட்டியலில் ஸ்மார்ட் ஆட்டோ, என்.ஐ.யு.கவுண்ட்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட வழுக்கா நிறுத்தி ஆகிவை இடம் பெற உள்ளன.

இந்த ஆண்டு குருக்ஷேத்ராவில் 520 -க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்கின்றன. இந்தியா தவிர 18 நாடுகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் வந்துள்ளனர்.

தொழில் நுட்ப யுத்தம் அழிவிற்கல்ல ஆக்கத்திற்கு என்பதன் அடையாளமாக மாணவர்கள் மக்களுக்கு நன்மை தரும் கண்டுபிடிப்புகளை வெளியிடும் களம் இது. இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் அறிவியல் வல்லுனர் அபாஸ் மித்ரா, இதனைப் பாராட்டி பேசிய போது,

"இந்த குருக்ஷேத்ரத்தில் கௌரவர்கள் இல்லை பாண்டவர்கள் மட்டுமே உண்டென்றார். ஆக்க சிந்தனை கொண்ட மூளைக்குள் நடக்கும் போரில் அழிவிற்கு இடமில்லை" என சுட்டிக்காட்டினார்.

இங்கே காட்சிப்படுத்தப்படும் 14 மாதிரி திட்டங்களும் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு உடனே செயலுக்கு வர உள்ளன.கண்டுபிடிப்புகளின் காட்சிப்படுத்துதல் மட்டுமன்றி, பல்வேறு பயிற்சிகள் என ஊக்கம தரும் நிகழ்வுகள் அரங்கேற உள்ளன.

இந்த விழாவில், 'புதிய தொழில்துறை பட்டறைகள்' அறிமுகப்படுத்தபடவுள்ளன.

'பில்ட் யுவர் 3டி பிரிண்டர்' போன்ற இலவச பயிற்சி வகுப்புகளும் உள்ளன. 'கார்னிவல்' (karnival), 'இ ஃபார் எஜுக்கேட்' (E for Educate) மற்றும் 'ஸ்டார்டஅப் வீக்கெண்ட்' (Startup Weekend) போன்ற பல நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.

தமிழ் யுவர்ஸ்டோரி "ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்" நிகழ்ச்சியின் பிரத்யேக மீடியா பார்ட்னர் என்பதில் பெருமிதம் கொள்கிறது.

குருக்ஷேத்ரா, முயற்சி திருவினையாக்கும் என்பதை உறுதிப்படுத்தும் களமாய் திகழும் என நம்பிக்கை தெரிவித்தார் அண்ணா பல்கலைகழக டீன் நாராயணசாமி.

இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக நாசா ஆய்வு மையத்திலிருந்து வந்த விஞ்ஞானி ஏஞ்சலோ, "புதிது புதிதாய் சிந்தியுங்கள்,செயல்படுங்கள்"என்றார்.

சாதனைகளின் சங்கமமாக பத்தாம் ஆண்டில் அடி எடுத்துள்ள இந்த நிகழ்விற்கு, அரிய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கும் யுனெஸ்கோ ஒத்துழைக்கிறது.

இந்த நவீன குருக்ஷேத்திரத்தில் எல்லோரும் வெற்றியாளரே!

குருக்ஷேத்ரா நிகழ்ச்சிகள் விபரம்

ஸ்டார்ட் அப் வீக்கெண்ட் விபரம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்