இந்திய தேர்தல்களின் நவீனமயமாக்கலும், பிகார் தேர்தல் கற்றுத்தர இருக்கும் பாடமும்!

0

தில்லி சட்டமன்ற தேர்தல், பிகாரில் பாஜகாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. "வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளத்தவறுபவர்கள், முதல் முறை சோகமாக, இரண்டாம் முறை கேலிக்கூத்தாக என அதை மீண்டும் நிகழ்த்த நிர்பந்திக்கப்படுகின்றனர்” என்று பிரபலமான சொல்வழக்கு உண்டு. பாஜக புத்திச்சாலித்தனமான மற்றும் அறிவார்ந்த கட்சியாக இருந்திருந்தால் தில்லியில் பெற்ற மாபெரும் தோல்வியில் இருந்து பாடங்கள் கற்று அதற்கேற்ப மாற்றங்களை செய்திருக்கும். ஆனால் அகம்பாவம் என்பது அதிலும் குறிப்பாக அதிகாரம் மற்றும் கொள்கையின் அகம்பாவம் மிகவும் ஆபத்தானது. இவை மகத்தான ஆண்கள்/பெண்களின் கண்களை கூட மறைத்துவிடும். இது தான் பிகார் தேர்தலில் நடந்து கொண்டிருக்கிறது. திருவாளர் பிரதமருக்கு காலில் குத்திய முள்ளாக அமைந்த தில்லி தேர்தலுக்குப்பிறகு இந்த தேர்தல் மோடி/பாஜகாவுக்கு வாட்டர்லூவாக அமைய உள்ளது.

தில்லி தேர்தலின் போது, ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட மற்றும் ஜம்மு-காஷ்மீரில் மோடியின் வெற்றி ஆதரவான வாக்குகளாக கிடைத்தல்ல, உண்மையான மாற்று இல்லாத்தால் கிடைத்தது, என நான் கூறினேன். அப்போது நான் கூறியதை யாரும் நம்பவில்லை. அப்போதைய அரசியல் சூழலால் அதிருப்தி அடைந்த வாக்காளர்களுக்கு பாஜக/மோடி மற்றவர்களை விட கொஞ்சம் மேம்பட்டவர்களாக தோன்றினர். எனவே மக்கள் அவர்கள் மீது பகுதியளவு நம்பிக்கை வைத்தனர். ஆனால் அது முழு நம்பிக்கை அல்ல. ஆனால் தில்லியில் நிகழ்ந்தது வேறு கதை.ஆம் ஆத்மி கட்சிக்கு (ஏஏபி) நல்லெண்ணம் இருந்தது. அது ஒரு புதிய காற்றாக வருகை தந்தது.அது புதிய அரசியல் பற்றி பேசியது. அது தூய்மையான அரசியல் பற்றி பேசியது. பேசியதுடன் நிற்காமல் 2013 தில்லி சட்ட மன்ற தேர்தல் பிரசாரம் மற்றும் அதன் பிற்கு 49 நாள் ஆட்சியின் போதும் தனது செயல்கள் மூலம் நிருபிக்கவும் செய்தது. ஏஏபி தில்லி மக்கள் முன் உண்மையான மாற்றாக இருந்தது. தேர்தல் முடிவுகளிலும் இது பிரதிபலித்தது.

இந்திய தேர்தல் வரலாற்றில் தில்லி புதிதாக உருவாகி கொண்டிருக்கும் ஒரு மாதிரியை கொடுத்துள்ளது. 2009 க்கு பிறகு இந்த மாதிரி தீர்மானமான முடிவுகளை அளித்து வருகிறது. 2009ல் மன்மோகன் சிங் வெற்றி பெறுவார் என யாரும் நினைக்காத போது காங்கிரஸ் 200 இடங்களை வென்றது. பாஜக மோசமாக தோற்றது. இது வளர்ச்சி பாதையில் இருந்த பொருளாதாரத்திற்கான வெற்றியாக அமைந்தது. மன்மோகன் பிரதமராக இருந்ததால் இதற்கு அவரே காரணம் என சொல்லப்பட்டது. தேர்தல்கள், பழைய அடையாளங்களை சுற்றி நடப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்திருந்ததன் பிரதிபலிப்பு இது.மக்கள் உண்மையான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு அவற்றின் மீது வாக்களிக்கபட வேண்டும் என விரும்புகின்றனர். இதை இந்திய தேர்தல்களின் நவீனமயமாக்கல் என்று நான் சொல்வேன்”.

முந்தைய தேர்தல்களில் கூட கடைசி நிமிடத்தில் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யும் 4 முதல் 6 சதவீத மாறக்கூடிய வாக்குகள் இருந்திருக்கின்றன என்பதை அரசியல் நோக்கர்கள் மறந்துவிட்டனர். இந்திய பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் காரணமாக இந்த வாக்குகள் 8 முதல் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. சாதி, மதம், பாலினம், தில்லுமுல்லு, பண பலம் மற்றும் ஆள் பலம் –சாராய பலம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட அரசியல் மீது வாக்காளர்கள் அதிருப்தி கொண்டிருந்தனர். இந்த பிரிவினர் தான் அன்னா ஹசாரே இயக்கத்தை பெருமளவு ஆதிரித்தனர். பின்னர் மோடி மதம் சாராத விஷயங்களை மையமாக கொண்டு தனது பிரச்சாரத்தை அமைத்து தன்னுடன் மதவாத பிம்பத்தை கடந்து நாட்டின் இன்னல்களை தீர்க்கக்கூடிய ஒருவராக தன்னை முன்னிறுத்திக்கொண்ட போது அவருக்கு பெரும் ஆதரவு அளித்து அவரை பிரதமராக்கினர். ஆனால் பிரதமாரான பின், இந்த பிரிவினரை வேதனையில் ஆழ்த்தும் வகையில் அவரது கொள்கை சகாக்களின் மத உணர்வை தூண்டும் விதமான பேச்சுக்கள் அமைந்திருந்தன. மதவதமயமாக்கல் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினரை குறி வைக்கும் போது ஆரம்பமானது. இவர்களுக்கு எதிரான மோடி உறுதியான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்,ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

தில்லி தேர்தலின் போது மோடியின் பாணி, அவரது மொழி, அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவர் கக்கிய நஞ்சு மற்றும் உண்மையான பிரச்சனைகளில் இருந்து கவனத்தை விலக்கி கொண்டது தில்லி வாக்காளர்கள் முன் அவரை அம்பலமாக்கியது. மோடி தனது ஆதார வலுவை இழந்தார். கெஜ்ரிவால் மற்றும் ஏஏபி புதிதாக உருவாகி கொண்டிருக்கும் நவீன அரசியலின் ரட்சகராக பார்க்கப்பட்டார். ஏஏபி புதிய மாற்றாகவும், பாஜக பழைய பிரிவை சேர்ந்ததாகவும் கருதப்பட்டது.எனது புரிதலை தில்லி தேர்தல் முடிவுகள் நிருபித்தன. பாஜக/மோடி அதே தவற்றை மீண்டும் செய்கின்றனர். பிகார் தேர்தலில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்ன என்றால் மக்கள் நிதீஷ் குமார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். நிதீஷ் குமார் 9 வருடங்களாக முதல்வராக இருக்கிறார் எனும் போது இது குறிப்பிடத்தக்க விஷயமாகும். அவரது ஆட்சிக்கு எதிராக எந்த கோபமும் இல்லை. மாநிலத்தின் முகத்தை மாற்றியவராகவும், வளர்ச்சியில் விருப்பம் கொண்டவராகவும் அவர் கருதப்படுகிறார். வலுவான மற்றும் சக்திவாய்ந்த மீடியா உண்டாக்கும் பரபரப்பு மற்றும் பாஜகவின் எதிர்மறையான பிரச்சாரத்தை மீறி அவர் தான் முதல்வர் பதவிக்கான நம்பர் ஒன் தேர்வாக இருக்கிறார் என்றும், தில்லியில் மோடியை விட கெஜ்ரிவால் பிரபலமாக இருந்தது போல பிகாரில் மோடியை விட அவர் செல்வாக்குடன் இருக்கிறார் என்பதும் செய்திகள் மூலம் தெரியவருகிறது.

இந்திய அரசியலில் இது முக்கியமான போக்கு. நிதீஷ் குமாரின் செல்வாக்கு மற்றும் ஏற்கப்படும் தன்மை எல்லா பிரிவினர் மற்றும் சமூகத்தினர் மத்தியிலும் உள்ளது. அரசியால் சாதியால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டு வந்த பிகாரில் இது நிகழ்வது என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும். நிதீஷ் வளர்ச்சி பற்றி தான் பேசி வருகிறார். முதல்வராக அவரது கடந்த கால செயல்பாடுகள் அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. லாலுவுடனான அவரது கூட்டணி குறிப்பிட்ட ஒரு வாக்கு வங்கியை உறுதி செய்வதால் ஒரு சாதகமான அம்சம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் முடிவெடுக்காத 10 சதவீத வாக்காளர்கள் நிதீஷுக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்த பத்து சதவீதம் முடிவை தீர்மானிக்கும். 2014 ல் இந்த 10 சதவீதம் தான் மோடியின் பக்கம் இருந்தது. மோடி/பாஜக இட ஒதுக்கீடு, மாட்டிறைச்சி தடை, உயர்ந்த சாதி- தாழ்ந்த சாதி, இந்து-முஸ்லிம், தலித்-மகா தலித், முன்னேறிய பிரிவினர்- பின் தங்கிய பிரிவினர் பற்றி மட்டுமே பேசி வருவதால் இந்த 10 சதவீதத்தினரை தங்களுக்கு வாக்களிக்கச்செய்ய முடியாமல் இருக்கின்றனர். அக்லாக் படுகொலை மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சுகள், மோடியின் மெளனம், இந்த பிரிவினரை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. வெளிப்படையாக சொல்வது என்றால் வழக்கமான அரசியல் தலைவர்களிடம் இருந்து இவர் மாறுபட்டவராக இருப்பார் எனும் நம்பிக்கையில் 2014 தனக்கு வாக்களித்த இந்த “புதிதாக உருவாகும் மத்திய தர வகுப்பினர்” நம்பிக்கையை மோடி பொய்யாக்கிவிட்டார். இந்த பிரிவினருக்கு மோடி ஏமாற்றம் அளித்துள்ளார். ஆனால் இந்திய தேர்தல்களின் நவீனமயமாக்கல் பிகாரில் முடிவுக்கு வராது ஆனால் மேலும் பட்டை தீட்டப்பட்டு, வழக்கமான அரசியலை மேலும் பலவீனமாக்கும். இது நாம் எல்லோரும் கற்றுக்கொள்வதற்கான பாடம்.

பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.