சென்னையை சேர்ந்த 'ஸ்வச்' அமைப்பின் சமூக அக்கறை!

0

சமூகத்துக்கு ஏதாதவது செய்ய வேண்டும் என்ற துடிப்பும், அது ஒரு சிறு தொழிலாகவும் அதே சமயம் பலருக்கு வருமானம் ஏற்படுத்தி தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அனீஷா நிச்சானி யோசித்திருந்த நேரம் ஏற்பட்ட ஒரு அமைப்பு தான் ”ஸ்வச்”(Svacch). கடந்த ஆண்டு சென்னையில் ஸ்வச் அமைப்பை அனீஷா தொடங்கினார். சொந்தமாக குடும்ப தொழில் இருந்தும் லாப நோக்கின்றி தன் தொழில் இருக்க வேண்டும் என திட்டமிட்டு இந்த அமைப்பை தொடங்கியதாக கூறுகிறார்.

இந்தியாவில் பல லட்சம் பேர் குப்பை கையாளும் பணியில் ஈடுபட்டிருப்பதை மனதில் கொண்டும் அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டும் “ஸ்வச் அமைப்பு சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படாத வகையில், உபயோகப்படுத்திய பேடுகளை அப்புறப்படுத்த, மக்கும் இயற்கை காகித கவர்களை உருவாக்கி வருகின்றனர். “நான் மனதுக்கு திருப்தி தரக்கூடிய வகையில் ஏதேனும் தொழில் செய்ய விரும்பினேன். இந்த சமூகத்தில் எல்லார் மனதிலும் பெரிய மாற்றத்தை என்னால் ஏற்படுத்த முடியுமா என தெரியாது ஆனால் என்னால் முடிந்த வரை ஒரு சிலரது வாழ்வில் மாற்றத்தை கொண்டுவர முடியும்” என்று நம்புவதாக அனீஷா கூறுகிறார்.


மாதவிடாய் காலங்களில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் வயிற்று வலி, உதிரப்போக்குடன் அடுத்து தோன்றும் பிரச்சனை தாங்கள் அந்நாட்களில் உபயோகப்படுத்திய சானிடரி நாப்கின் எனப்படும் பேடுகளை எவருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்துவதை பற்றிதான் இருக்கும். காலத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் கவருடன் பேடுகள் வரத்தொடங்கியுள்ளதால் பெரும்பாலான பெண்கள் உதிரத்துடன் உள்ள பேடுகளை அந்த கவர்களில் அல்லது பேபர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போட்டு விடுகின்றனர். சரிவர மூடப்படாத கவரில் இருந்து விழும் பேடுகள் குப்பை தொட்டியில் வெட்டவெளியில் கிடப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று நம்மில் பலரும் அறியாத ஒன்று.

சரிவர அப்புறப்படுத்தப்படாத சானிடரி பேடுகளால் ஏற்படும் பாதிப்புகள்

ஸ்வச் அமைப்பை தொடங்க பல ஆய்வுகளை நடத்திய போது, அனீஷாவிற்கு கிடைத்த தகவல்கள் படி, குப்பைகளை சேகரித்து அதை குப்பை கிடங்குகளில் கொண்டு செல்லும் தொழிலாளர்களின் உடல்நல பாதிப்பிற்கு இந்த பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்ட பேடுகள் பெரிதும் வழிவகுக்கிறது என்று தெரியவந்தது. ஊர் முழுதும் பலவித கழிவுகளை கையாளும் இந்த தொழிலாளர்கள், உறைந்த பேடுகளிலுள்ள மாதவிடாய் உதிரத்தை கையில் தொடும்போதும், அதனை சேகரிக்கும்போதும் பல அபாயகரமான நோய்கள் தாக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஆராய்சிகள் தெரிவித்துள்ளது. பல நாட்களாக குப்பைத்தொட்டியில் கிடக்கும் சேனிடரி பேடுகளில் உறைந்துள்ள உதிரத்தில் வைரஸ் மற்றும் பேக்டீரியா உருவாகி அதை தொடுபவருக்கு எளிதில் பரவி பல நோய்களை உண்டாக்கிவிடுகிறது என்று ஆராய்சியாளர்கள் எச்சிரித்து உள்ளனர் என அனீஷா கூறுகிறார்.


ஸ்வச் அமைப்பின் நிறுவனர் அனீஷா
ஸ்வச் அமைப்பின் நிறுவனர் அனீஷா

கழிவு அகற்றும் தொழிலாளர்களிடம் காணப்படும் பலவித நோய்கள்

WHO, அதாவது உலக சுகாதார நிறுவனம், குப்பை அள்ளும் தொழிலாளிகளிடம் நடத்திய ஆய்வில் 80% பேருக்கு கண் சம்மந்தமான பிரச்சனை, 73% க்கு சுவாசம் சம்மந்தப்பட்ட கோளாறுகள், 51% இரைப்பை மற்றும் குடல் உபாதைகள், 40% பேருக்கு தோல் மற்றும் அலர்ஜி சம்மந்தப்பட்ட நோய்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள்து. சென்னையில் மட்டும் 20% பெண்கள் மாதவிடாய் உடையவர்கள் என்று வைத்துகொண்டால் கிட்டத்தட்ட 1 மில்லியன் அதாவது 10 லட்சம் பெண்கள் மாதாமாதம் உபயோகப்படுத்திய சானிடரி பேடுகளை குப்பையில் போடுகின்றனர் என்று கணக்கிடப்படுகிறது. சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு மாதத்திற்கு 10 பேடுகள் என்று கணக்கிட்டால் கிட்டத்தட்ட ஒரு கோடி உபயோகப்படுத்திய நாப்கினை குப்பைத்தொட்டி அப்புறப்படுத்தும் தொழிலாளர்கள் கையாளுகின்றனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பல முறை இந்த பேடுகள் சரிவர மூடாமல் குப்பையில் எறியப்படுவதால் சுற்றுப்புற பாதிப்புகளும் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சுற்றுசூழல் மற்றும் கழிவு அள்ளும் தொழிலாளிகளின் நலனுக்காக பேடுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த காகித கவர்கள் தயாரிப்பு

பெண்கள் பேடுகளை பலவகை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி குப்பையில் போட்டுவிடுவதால் குப்பைகளை அப்புறப்படுத்துவோர் அந்த கவர்களை பிரித்த பின்னரே அதில் உதிரம் உறைந்த பேடுகள் இருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். கையில் அதை தோடவும் நேரிடுவதால் நோய் ஆபத்து பெருகிவிடுகிற்து. இதனை தவிர்க்கவே ”ஸ்வச்” அமைப்பு மறுசுழற்சி செய்யப்பட்ட செய்திதாள்களை கொண்டு பைகளை தயாரிக்க தொடங்கியதாக கூறுகிறார் அனீஷா. கழிவு அள்ளுபவர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, உபயோகப்படுத்திய பேடுகள் அடங்கிய இந்த பிரத்யேக பைகளை அடையாளப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்படுகிறது. “இந்த முறையை இந்தியா முழுதும் பிரபலப்படுத்துவதே ஸ்வச் அமைப்பின் தொலைநோக்கு பார்வை” என்கிறார் அனீஷா.


இந்த அமைப்பு, 10 காகித பைகளை 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். ஏழை பெண்களால் மட்டுமே தயாரிக்கப்படும் இந்த பைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் அவர்களின் குடும்ப அதியாவசிய செலவுக்கு பெரும் உதவியாக உள்ளது. இது தவிர இதன் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கு சானிடரி பேடுகள் வாங்கி உபயோகிக்க முடியாத நிலையில் உள்ள வறுமையில் வாடும் பெண்களுக்கு மாதமாதம் இலவச பேடுகள் வழங்கப்படுகிறது. சுற்றுபுற பாதுகாப்பிற்காகவும், கழிவு அகற்றும் தொழிலாளர்களின் நலனுக்காகவும், இந்திய பெண்களின் மாதவிடாய் கழிவினை சுகாதார முறையில் அப்புறப்படுத்தும் முறையை மேம்படுத்த உதவியாக உள்ள இது போன்ற முன்முயற்சிக்கு பெண்கள் வரவேற்பு தந்து ஆதரவு அளிக்கவேண்டும்.

மேலும் தகவல்களுக்கு facebook Page: www.facebook.com/svacch