சீமா மேஹ்தாவின் பன்முக திறன்!

0

கதக் நாட்டியத்தை பார்க்க என் நண்பர் என்னை அழைத்த பொழுது "தயவு செய்து சலிப்படைய வைக்காதீர்கள்" என்று நான் மறுத்துவிட்டேன். பாரம்பரிய நடனங்கள் மீது எனக்கிருந்த கருத்தே அதற்கு காரணம். மிகுந்த வற்புறுத்தலுக்கு பின் பண்டிட் சித்ரேஷ் தாஸ் அவர்களின் நாட்டியதை காணச் சென்றேன். எனக்கு மட்டுமின்றி அந்த நாட்டியதை கண்ட பலருக்கும் நெகிழ்ச்சியான அனுபவமாக மாறிப் போனது என்கிறார் சீமா மேஹ்தா. அத்தருணமே கலிபோர்னியாவில் உள்ள சீமா, கதக் நடனத்தில் பயிற்சி பெற எண்ணினார்.

கதக் பயில ஆரம்பித்து பத்து வருடம் உருண்டோடிவிட்டது. கலிபோர்னியாவில் ஆரம்பித்த இந்த பயிற்சி ஆர்வம், மும்பையில் "சந்தம் ஸ்கூல் ஆஃப் கதக்" (Chhandam school of Kathak) நிறுவும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

நடனப் பள்ளி என்பது சீமாவின் ஒரு அம்சம் தான். மற்றொன்று நாலாவது தலைமுறையாக நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது ஆகும். கீர்திலால்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கீர்த்திலால் காளிதாஸ் மேஹ்தா அவர்களின் பேத்தியான சீமா, அந்நிறுவனத்தின் படைப்பு இயக்குனர் (Creative Director). சீமாவின் இந்த இரு வேறு ஈடுபாட்டை பற்றி யுவர்ஸ்டோரி அவரிடம் உரையாடியது.

குழந்தைப் பருவம்

மும்பையில் பிறந்த சீமா, தன் நான்காவது வயதில், 1980 ஆம் ஆண்டில் பெல்ஜியத்தில் உள்ள அண்ட்வெர்ப் என்ற இடத்திற்கு குடி பெயர்ந்தார். இருபது வயது வரை அங்கு வளர்ந்த அவர், பின்னர் சான்ப்ரான்சிஸ்கோவிற்கு இடம் பெயர்ந்தார். ஏழு வருடத்திற்கு பின்னர் 2004 ஆம் ஆண்டு நாடு திரும்பினார். தற்பொழுது மும்பையில் வசிக்கிறார்.

நுண்கலையில் பட்டம் பெற்ற சீமா சான்ப்ரான்சிஸ்கோவில் உள்ள அகாடமி ஆஃப் ஆர்ட் கல்லூரியில் ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டார்.  

கதக் நடனத்தின் மீதான ஈர்ப்பு

சித்ரேஷ் தாஸ் அவர்களின் நடனத்தை கண்ட பிறகு கதக் நடனத்தை பயில ஆரம்பித்தார். அவரின் அரங்கேற்றம் ஜனவரி மாதம் 2009 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள NCPA வில் நடைப்பெற்றது. 2010 ஆம் ஆண்டு மும்பைக்கு குடி பெயர்ந்தார். அங்கு ஷாந்தம் ஸ்கூல் ஒப் கதக் (Chhandam school of Kathak) என்ற நடனப் பள்ளியையும் தோற்றுவித்தார். இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் மேடையேறும் அவர், கதக் கலையை பாதுகாப்பதிலும் பேணுவதிலும் ஈடுபட்டுள்ளார்.

சாந்தம் ஸ்கூல் ஆஃப் கதக்

"குருஜியின் நடனம் மிகவும் தனித்தன்மை கொண்டது. பாரம்பரியத்தின் கலவையோடு இந்த காலத்திற்கு ஏற்றது போலவும் இருக்கும். அவருடைய மாணவர்கள் பெரும்பாலானோர் அண்டை நாடுகளில் உள்ளதால், அவரின் தனித்தன்மை வாய்ந்த கதக் நாட்டியத்தை இந்தியாவில் கற்பிக்க எண்ணினேன்." என்கிறார் சீமா.

இரண்டு மாணவர்களுடன் ஆரம்பித்த பள்ளியில் தற்பொழுது அறுபது மாணவர்கள் பயில்கிறார்கள். இளைய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்களை பணி அமர்த்தி முதுநிலையில் உள்ள மாணவர்களை சீமா தன் நேரடி பயிற்சியில் கொண்டு வர திட்டமிட்டுள்ளார். தன் பயிற்சி நாட்களை நினைவு கூறும் அவர் "தற்பொழுதுள்ள ஒரு மணி நேர பகுதி நேர பயிற்சியாக இல்லாமல் நான் பயின்ற விதம் வேறுபட்டிருந்தது. இரண்டு மாதம் பணிவிடுப்பில் கொல்கத்தாவில் உள்ள குருவிடம் நாள் முழுவதும் பயின்றேன். கதக் மட்டுமின்றி, உடலையும் ஆரோக்கியத்தையும் எவ்வாறு பேண வேண்டும் என்றும் போதித்தார்கள்."

மாணவர்களின் வாழ்கையில் ஆசிரியர்களுக்கு மிக முக்கிய பங்குண்டு என்று ஆணித்தரமாக சீமா நம்புகிறார். கலையுடன் பயிற்றுவிக்கும் ஆசிரியரும் நம் வளர்ச்சிக்கு முக்கியம். "எனக்கு இரண்டுமே சரியாக அமைந்தது, அவரின் தனித்தன்மையும் பயிற்சியுமே நான் கதக்கில் முழுவதுமாக ஈடுபட காரணம்."

குடும்ப வணிகம்

வளரும் பருவத்தில் சாப்பாடு நேர பேச்செல்லாம் வைரம் பற்றியும் நகைகள் பற்றியுமே இருக்கும். "இதிலிருந்து தள்ளியே இருக்க வேண்டும் என்றே முதலில் விரும்பினேன்".

2004 ஆம் ஆண்டு சித்ரேஷ் தாஸ் இந்தியா வந்திருந்த பொழுது, கோயம்பத்தூரில் உள்ள அவர்களின் தொழிற்சாலை மற்றும் உற்பத்தி இடத்தை பார்வையிட்டார். அவர் தான் சீமாவிற்கு படைப்பு அம்சத்தில் ஈடுபட அறிவுறுத்தினார். அவரின் வேண்டுகோளின்படியே, மூன்று மாதங்கள் குடும்ப வணிகத்தில் ஈடுபட எண்ணினார். ஆனால் மூன்று மாதம் என்பது ஐந்து வருடம் என்றாகி விட்டது.

முதல் ஐந்து வருடம், சீமா கோயம்பத்தூரில் வசித்துக் கொண்டே கதக் பயிற்சியையும் மேற்கொண்டார். பின்னர் நடனப் பள்ளியை துவக்க 2010 ஆம் ஆண்டு மும்பை சென்றார்.

படைப்பு இயக்குனராக

இருபத்திமூன்று படைப்பாளிகளை கொண்ட குழுவில் படைப்பு மற்றும் டிசைனிற்கு பொறுப்பு வகிக்கிறார். டிசைன்னிங் மட்டுமின்றி அதன் தயாரிப்பிலும், தொழில் நுட்பத்திலும் மற்றும் அந்த டிசைன்னை எவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வது என்பது வரை சீமா பொறுப்பேற்கிறார். நுணுக்கத்துடன் டிசைன்களை தனித்தன்மையுடன் வடிவமைப்பது பற்றி இத்தாலிய டிசைன்னரிடம் இரண்டு வருடம் கோயம்பத்தூரில் பயின்றார்.

டிசைன் தயாரானதும் அதை எவ்வாறு வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வது என்ற நுணுக்கத்தையும் சீமா கையாள்கிறார். எழுபது வருட பாரம்பரியம் மிக்க நிறுவனத்தின் மேல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருக்கும். இந்த வணிகத்தில் தனித்தன்மையுடன் திகழ்வது பெரிய சவால் நிறைந்ததாகும்.

தென்னிந்தியாவில் அவர்களின் வணிகம் இருந்தாலும், மும்பையில் அவர்களின் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக ஒரு அலுவலகம் இயங்குகிறது.

நகை வியாபார சூழலை பற்றி பகிரும் அவர் "மிகுந்த மாற்றத்தை கண்டுள்ளது. நகை வாங்கும் தன்மையே தற்பொழுது வெகுவாக மாறியுள்ளது. முன்பெல்லாம் பாரம்பரிய அட்டிகை, பதக்கங்கள் என்று வாங்கிய நிலை மாறி தற்பொழுது பெண்கள் வேலைக்கு செல்வதால் அதற்கேற்றார் போல் காதணிகள், மோதிரங்கள் ஆகியவையே விரும்புகின்றனர். இணையதளம் மூலமாக நகை வாங்குவதும் அதிகரித்துள்ளது, இந்த வகையில் இந்தியாவில் நகை வாங்குவார்கள் என்று எண்ணியதில்லை, ஆனால் அது நடந்து கொண்டிருக்கிறது".

உந்துதல்

எந்த செயலை மேற்கொண்டாலும் அதில் உயரிய நிலையை அடைதல் என்பதே தன்னை உந்தும் சக்தி என்கிறார் சீமா.

தனது பெற்றோர்கள் மற்றும் குருவே அவரை உந்தும் சக்தி என்கிறார். அவர்களின் வயதில் ஒரு இருபத்தி இரண்டு வயதுடைய நபரை போல் செயல்படுவதை பார்த்திருக்கிறேன். சோர்வடையும் பொழுது அவர்கள் எவ்வாறு அவர்களின் பாதையை வகுத்து கொண்டிருகிறார்கள் என்று நினைத்தாலே தானாக புத்துணர்ச்சி வந்து என்னை அடுத்த நிலைக்கு செலுத்தத் துவங்கி விடும்.

ஒவ்வொரு சவாலும் ஒரு புதிய வாய்ப்பை அளிக்கும் என்று சீமா திடமாக நம்புகிறார். சமீபத்தில் அவரது குருவை இழந்தது வாழ்க்கை மற்றும் மரணம் பற்றிய வேறொரு பரிணாமத்தை உணர்த்தியது என்கிறார்.

எப்பொழுதும் தாயாக

மாயா அஞ்சலௌ, மல்லிகா சாராபாய், மேனகா காந்தி போன்றவர்கள் மட்டுமின்றி எல்லா தாய்மார்களையும், தான் போற்றுவதாக கூறுகிறார்.

ஒவ்வொரு நாளும் குழந்தைகளை கையாள்வது வியப்பூட்டும் செயல். மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணமது. குழந்தைகள், கூட இல்லாவிட்டாலும் தாயின் மனப்பான்மை என்றுமே மாறாது. சீமாவிற்கு குழந்தைகள் இல்லாவிட்டாலும் தன் தாய் எப்பொழுதும் சீமாவை பற்றி கவலை அடைவதை உணர்ந்திருக்கிறார்.

ஆசிரியர் மற்றும் படைப்பு இயக்குனர் என்ற பொறுப்பை தவிர, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனக்கு பிடித்த வண்ணம் தீட்டுதல் மற்றும் டென்னிஸ் விளையாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்.

பாரம்பரிய கலை இந்தியாவில் முக்கிய இடம் பெறுமா என்று கேட்டால், யோகாவை மேற்கோள் காட்டுகிறார். "மேற்கத்திய நாடுகள் போற்றும் எதுவும் சர்வதேச முக்கியதுவத்தை பெறுகிறது. அழகான வடிவம் பெற்ற இந்திய முறை எதுவாக இருந்தாலும், இங்கு முக்கியத்துவம் பெற மேற்கத்திய பற்றுதலை பெற வேண்டி இருப்பது கசப்பான உண்மை" என்று முடித்து கொள்கிறார்.