'Doc N Me' - கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் செயலி!

0

கார்ப்பரேட் உலகில் 15 ஆண்டுகள் பரபரப்பாக ஓடி சலித்தபின் கணவன் மனைவியான பூபேந்திர சோப்ராவுக்கும் சமிதா கருட்க்கும் ஒரு பிரேக் தேவைப்பட்டது. அந்த பிரேக்கில் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய நினைத்தார்கள். 2014-ல் இவர்கள் இருவரும் விஜயவாடாவில் இருந்த என்.ஜி.ஓக்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் செய்து கொண்டிருந்தபோது, அங்கே கர்ப்பிணிப் பெண்கள் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதை பார்த்தார்கள். இதை நிவர்த்தி செய்ய களத்தில் இறங்கத் தீர்மானித்தனர்.

அங்கேயிருக்கும் அரசியல்வாதி ஒருவருடைய உதவியோடு தன்னார்வலர்களுக்கு ஒரு செயலி உருவாக்கித் தரப்பட்டது. இந்த செயலி கர்ப்பிணிப் பெண்கள் பற்றிய அத்தனை விவரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். கர்ப்ப காலத்தில் செய்யக்கூடியவை, கூடாதவை ஆகியவை எல்லாம் வீடியோவாக விவரிக்கப்பட்டிருக்கும். இது ஒரு சிறந்த தளமாக கணவன், மனைவி இருவருக்கும் தோன்றியது.

யுனிசெப் கூற்றுபடி இந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் மரணமடைவது மிக அதிகமாக நடக்கிறது. 1,000 பிறப்புகளில் 39 குழந்தைகள் இறக்கின்றன. அமெரிக்காவிலும், சீனவிலும் இந்த எண்ணிக்கை முறையே 8, 16 ஆக உள்ளன. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 25 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் வெறும் 30 ஆயிரம் மகப்பேறு மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள். 3.8 மில்லியன் பிறப்புகள் நிகழும் அமெரிக்காவில் கூட 21,749 மகப்பேறு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

இந்தக் கணக்கை வைத்து பார்க்கும்போது ஒரு மருத்துவர் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 833 பிரசவங்கள் பார்க்கிறார். ஒரு நாளைக்கு மூன்று. இதுபோக அன்றாடம் வந்து செல்லும் பேஷன்ட்களையும் பார்க்க வேண்டும். இதை எல்லாம் முறைப்படுத்துவதன் மூலம் சிறப்பான ஒரு சேவையை வழங்கிட முடியும். இங்கே போதுமான தரவுகள் இல்லை என்பது சமிதாவின் வாதம். 'சிலர் போனிலேயே மருத்துவர்களிடம் பிரச்னைகளை சொல்கிறார்கள். அவர்களுக்கு என்ன பிரச்னை, எப்படி சிகிச்சையளிப்பது என மருத்துவர்கள் தீர்மானிக்க தாமதமாகிறது. பேஷன்ட்டின் மெடிக்கல் ஹிஸ்டரி தெரியாவிட்டால் சிக்கல்தான்' என்கிறார் சமிதா.

தரவுகள் ஏன் முக்கியம்?

25 படுக்கைகளே கொண்ட ஒரு ஹைதராபாத் மருத்துவமனைக்கு ஒரு நாளுக்கு குறைந்தது 500 பேராவது வருகிறார்கள். இங்கே ஒரு மாதத்திற்கு 80 பிரசவங்கள் நிகழ்கின்றன. இந்தத் தரவுகள் எல்லாம் அங்கே வேலை பார்க்கும் மருத்துவரான பிரதீபா நாராயணனுக்கு தேவையாய் இருக்கிறது. போன்கால்கள் வழியே பேஷன்ட்களை டீல் செய்யும்போது இந்த தரவுகள் அவசியம் என்பது அவர்கள் வாதம். எனவே இந்த செயலி அவருக்கு நிறையவே கை கொடுக்கிறது. இதில் நீங்கள் உங்கள் மருத்துவரோடு உரையாட முடியும். பேஷன்ட் வேறு நகரத்திற்கு சென்றால் கூட அங்கு உள்ள டாக்டருக்கு இந்த தகவல்களை அனுப்பிவைக்க முடியும்.

லண்டனில் 9 ஆண்டுகள் பணிபுரிந்த மகப்பேறு மருத்துவரான சாய்சுதாவை பொருத்தவரை நம் டெக்னாலஜி மேற்கை விட முன்னேறியதாய் இருக்கிறது. 'என்னுடைய எல்லா ப்ரிஸ்க்ரிப்ஷன்களும் கண்காணிப்புகளும் அந்த செயலியில் இருப்பதால் நிறைய நேரம் மிச்சமாகிறது என்கிறார் அவர்.

இந்த செயலி, கர்ப்பிணிப் பெண்களுக்கு கையேடு மட்டுமல்ல, ஒரு டைரியும் கூட. அப்பாயிட்மென்ட்கள் குறித்து நினைவூட்டவும் செய்கின்றன. இதனால் தங்கள் ஸ்கேன்கள், ப்ரிஸ்க்ரிப்ஷன்கள் தொலைந்து போனால் பெண்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இன்னும் சில மருத்துவர்கள் ப்ரிஸ்க்ரிப்ஷனை எழுதத்தான் செய்கிறார்கள். அவை போட்டோ எடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் செயலியில் சேமிக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான லேப் ரிப்போர்ட்கள் மெயிலில்தான் அனுப்பப்படுகின்றன. அவற்றை இந்த செயலி சேமிக்கிறது.

வருவாய் மாதிரி

இந்த செயலிக்கு மருத்துவர்களிடம் சந்தா முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு செயலி இலவசம்தான். ஆனால் டேட்டா வளர வளர வாடிக்கையாளர்களிடம் இருந்தும் பணம் வசூலிக்கப்படும். இப்போது தீவிரமாய் மருத்துவர்களை இணைக்கும் பணியில் இருக்கிறார்கள். ஆறு மாதங்களில் 15 மகப்பேறு மருத்துவர்கள் வழியே 2000 பேர் பலனடைந்து உள்ளனர். பூபேந்திராவும் சமிதாவும் 54 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்.

ஹெல்த்கேர் துறையில் எக்கச்சக்க தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. மருத்துவர்களின் அப்பாயிட்மென்ட் வாங்கித்தரும் பிராக்டோ நிறுவனம் 125 மில்லியன் டாலர்கள் முதலீடாக பெற்றுள்ளது. நான்கு புதிய நிறுவனங்களை வாங்கியுள்ளது. போர்டீ என்ற நிறுவனம் 50 மில்லியன் டாலர்கள் முதலீடாக பெற்றுள்ளது. அட்டூன் டெக்னாலஜி என்ற நிறுவனம்தான் Doc N Me-க்கு சரியான போட்டியாக திகழ்கிறது.

இந்திய பிராண்ட் ஈக்விட்டி பவுண்டேஷன் கூற்றுப்படி ஹெல்த்கேர் துறை 2017-ல் 170 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டதாக மாறும். அதில் மகப்பேறு துறையில்தான் அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த தலைமுறை இளைஞர்களை அடைய மருத்துவமனைகளும் டெக்னாலஜியை நம்பித்தான் உள்ளது. இந்திய ஹெல்த்கேர் துறை தரவுகளை மையமாக வைத்து முன்னேற வேண்டும் என்பது வென்ச்சர் ஈஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சரத் நார்.

நோயாளிகளும் மருத்துவர்களும் எப்படி உரையாடுகிறார்கள் என்பதை பொருத்துதான் இந்த செயலியின் வெற்றியும் தோல்வியும். குறைந்தபட்சம் டேட்டா சேமிக்கவாவது உதவுகிறதே. அந்த வகையில் Doc N Me செயலி ஒரு புதிய மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

ஆக்கம் : விஷால் கிருஷ்ணா | தமிழில் : சமரன் சேரமான் 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

மருத்துவர்களுக்காக இயங்கும் இந்தியாவின் முதல் டாக்டர் டிவி 'Themeditube.com'

தொழில்நுட்ப தொழில்முனைவரான பல் மருத்துவர் 'ராஜா சின்னதம்பி'