ஆளில்லா ரயில் கிராசிங் விபத்துகள் மற்றும் ரயில் தடம்புரளும் சம்பவங்களை தவிர்க்க துரித நடவடிக்கை!

0

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே வாரிய அதிகாரிகள் மற்றும் ரயில்வே வாரியத்தில் உள்ள பாதுகாப்பு இயக்குநரகத்தின் உறுப்பினர்களுடன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். ரயில் இயக்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான சீராய்வு மேற்கொள்ளும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு குறித்த விரிவான செயல்விளக்கம் இந்த பயணத்தின் போது வழங்கப்பட்டது. 

பட உதவி: Huffington Post
பட உதவி: Huffington Post

விபத்து குறித்த அனைத்து அம்சங்களும் இந்த கூட்டத்தில் நுணுக்கமாக ஆராயப்பட்டது. ரெயில் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதன் மூல காரணம் குறித்து ஆராயப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பே மிகவும் இன்றியமையாத ஒன்று என்றும் இதில் எவ்வித சமாதானமும் செய்து கொள்ள முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ரயில் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் அடையாளம் காணப்பட்டன. அவை வருமாறு:

2016-17 ஆம் ஆண்டில் நிகழ்ந்த விபத்துகளில் ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் நிகழ்ந்த விபத்துகள் 34 விழுக்காடு ஆகும். தண்டவாளங்களில் ஏற்படும் வெடிப்புகளால் ரயில் தடம் புரளும் சம்பவங்கள் ஏற்படுகின்றன.

தடம்புரளும் சம்பவங்களை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்காக சிறப்புக் கவனம் மேற்கொள்ளப்பட்டது. ரயில்வே அமைச்சர் பின்வரும் உத்தரவுகளை ரெயில்வே வாரிய அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.

1. ஆளில்லா லெவல் கிராசிங்குகள் அனைத்தும் துரிதகதியில் நீக்கப்ட வேண்டும். இந்த பணிகள் இப்போதிலிருந்து ஒருவருட காலத்தில் செய்து முடிக்கப்பட வேண்டும். இந்த பணிக்கான இலக்கு முன்பு 3 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

2. இருப்புப்பாதை மாற்றியமைத்தல், புதுப்பித்தல் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். புதிய பாதைகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தண்டவாளங்கள் விபத்து அடிக்கடி நடைபெறும் இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு எங்கெல்லாம் மாற்றியமைக்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம் அப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

3. புதிய தண்டவாளங்கள் வாங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். 

4. ஐ.சி.எப். வடிவமைப்பில் இது வரை தயாரிக்கப்பட்டு வந்த பெட்டிகள் தயாரிக்கப்படுவது நிறுத்தப்பட்டு புதிய எல்.எச்.பி. வடிவமைப்பிலான பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்ட வேண்டும். 

5. பனிமூட்டத்தை ஊடுறுவும் முகப்பு விளக்குகள் அனைத்து என்ஜின்களிலும் பொருத்தப்பட்டு, பனிமூட்டம் உள்ள காலங்களில் பாதுகாப்பான முறையில் ரயில் போக்குவரத்தை இயக்குவதற்கு உறுதி செய்ய வேண்டும்.

இந்த செயல்திட்டங்கள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ரயில்வே வாரியம் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.