பெண்களுக்கு நேரிடும் பாலியல் கொடுமைகளை எதிர்கொள்ள உருவான 'துர்கா' 

0

2012 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த கேங் ரேப் சம்பவத்தை நினைத்தாலே ரத்தம் உறைகிறது. உலகமே அது குறித்து பேசியது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் பலாத்காரங்கள் குறித்து விவாதித்தது. மூன்றாண்டுகள் கடந்த நிலையில் இன்றும் எதுவும் மாறவில்லை.

ஒவ்வொரு நாளும் இது போன்ற பாலியல் வன்கொடுமைகளும் பலாத்காரமும் நடந்தவண்ணம் தான் இருக்கிறது. பல எதிர்ப்புப் பேரணிகள், பல மேம்பட்ட வாதங்கள், துரிதப்படுத்தப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாம் இருந்தும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சற்றும் குறையவில்லை. ப்ரியா வரதராஜன் போன்ற வெகு சிலரே இந்த விஷயங்களுக்கு எதிராக களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

பெண்களுக்கான பாதுகாப்பான ஒரு சூழலை அமைத்துத் தரவேண்டும் என்பது 38 வயதான ப்ரியாவின் ஒவ்வொரு செல்லிலும் நிறைந்து இருந்தது. இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். நிர்பயாவிற்கு நடந்த பாலியல் கொடுமைக்குப்பின், சார்டெட் அக்கௌண்டெண்ட்டான இவர் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். பொது இடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு உள்ளுணர்வை ஏற்படுத்துவதுதான் 'துர்கா' எனும் அந்த அமைப்பின் நோக்கம். ஏப்ரல் 2013-ல் இந்த டிரஸ்ட் தொடங்கப்பட்டது. அடுத்தவரின் நடத்தையை சரிவர புரிந்துகொள்வதற்கும் குற்றம் நடந்தால் அதை தைரியமாக தெரிவிப்பதற்கும் துர்கா பயிற்சி வகுப்புகளும் நடத்துகின்றன. மூன்று வருடங்களுக்கு மேலாக பெங்களூரு, சென்னை, புனே, மும்பாய் மற்றும் ஜம்ஷெட்பூர் போன்ற நகரங்களில் 3000-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பணிபுரிந்திருக்கிறார்கள்.

பாலியல் கொடுமைகளை பொறுத்தவரை பெண்களின் திறமைதான் முதல் மற்றும் முக்கிய தலையீடு என்று நாங்கள் நம்புகிறோம். குற்றம் நடக்கும் போது அதை ஆரம்பக்கட்டத்திலேயே தெரியப்படுத்த வேண்டும். கோபமாகவோ அல்லது வன்முறையாகவோ அல்லாமல் அதை சரியான விதத்தில் எடுத்துச் சொல்லவேண்டும். அவ்வாறு நடந்தால் அதன் தாக்கம் பெரிதாக இருக்கும். நாங்கள் பெண்களுக்கு இதைத்தான் எடுத்துரைக்கிறோம்” என்கிறார் ப்ரியா.

துர்காக்களை உருவாக்குவது

மற்ற நிறுவனங்களைப்போல இந்த பிரச்சனையை தொழில்நுட்பம் மூலமாகவோ, பிரச்சாரங்கள் மூலமாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ அணுகுவதில்லை. மாறாக துர்கா அரங்கம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மூலம் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான பல்வேறு தீர்வுகளை எளிதாக எடுத்துரைக்கிறது.

ரோல்ப்ளே, தியேட்டர் கேம்ஸ் மற்றும் சிமுலேட்டட் லெர்னிங் போன்றவை இந்த முயற்சியை மேலும் எளிதாக்குகிறது.

மூன்று மணி நேர பயிற்சி வகுப்புக்கு துர்காவின் கட்டணம் ஒரு நபருக்கு 500 ரூபாய். பிரச்சாரத்திற்கு நிதியுதவி செய்பவர்களும் உண்டு. லாப நோக்கமற்ற இந்த ட்ரஸ்டில் தற்போது பெங்களூரு, சென்னை, மும்பை மற்றும் பூனே போன்ற நகரங்களிலிருந்து ஒன்பது பெண்கள் கொண்ட குழுவாக இயங்கி வருகிறது. ஒரு மாதத்திற்கு இரண்டு வகுப்புகள் நடைபெறுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் தங்கும் விடுதி, கட்டுமான தளங்கள், குடியிருப்போர் நல சங்கம் மற்றும் கார்ப்பரேட் போன்ற இடங்களில் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் மூலமாக தான் அடைய விரும்புவதை ப்ரியா விவரிக்கிறார். 

துர்கா ஒரு இயக்கம். அவரவர் சமூகத்தில் உள்ளவர்களிடம் தங்களை பிரதிபலிக்கும் வண்ணம் துர்காக்களை நாங்கள் உருவாக்குகிறோம். பெண்கள் தங்களை சுயமாக தற்காத்துக்கொள்வதிலும் பொறுப்பான பார்வையாளராக இருப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

“நான் ஒரு துர்கா” பிரச்சாரம் 

கடந்த இரண்டு வருடங்களாக பெங்களூருவில் நடந்த பாலியல் கொடுமை சம்பவங்களை அறிந்தார் ப்ரியா. உடனே BMTC பேருந்துகளில் துர்கா அலாரம் பொருத்தத் திட்டமிட்டார். பெண்கள் பயணிக்கும்போது ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்க இந்த அலாரத்தை உபயோகிக்கலாம். கடந்த ஓராண்டில் இந்த துர்கா அலாரம் பெங்களூருவில் 5 BMTC பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுனர் இருக்கைக்கு மேலே ஒரு பேனல் பொருத்தப்படும். பேருந்தின் பல்வேறு இடங்களில் இந்த அலாரத்திற்கான ஸ்விட்ச் இருக்கும்.

ப்ரியா மேற்கொண்ட இந்த முயற்சி எவ்வளவு கடினமானது என்று ப்ரியா நினைவுகூர்ந்தார். பெங்களூரு அரசியல் நடவடிக்கை குழு (BPAC) வை தொடர்பு கொள்வது, வொயிட்ஃபீல்ட் ரய்ஸிங்கில் அனுமதி பெறுவது முன்னோடித் திட்டம் போன்ற பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகமும் இந்த கருவியை பேருந்தில் பொருத்த தயங்கினார்கள். 

அனுமதி பெற்ற பின்னர் கருவியை உருவாக்க தொழில்நுட்ப நிபுணரை தேடும் பணி தொடங்கியது. இதற்காக பெங்களூரு M.S.ராமய்யா தொழில்நுட்பக் கல்லூரியின் சில மாணவர்களுடன் அறிமுகமானார்கள்.

ப்ரியாவிற்கு 14 வயதிலும் 11 வயதிலும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். Deloitte, EY, இன்போஸிஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது பெங்களூரு பிரிட்டிஷ் அரசாங்கத்தில் லைப்ஃ ஸயின்ஸ் லீடாக உள்ளார்.

“என் உரிமையை நான் மீட்டெடுத்தேன். நான் ஒரு துர்கா.” இதுதான் எங்கள் ஒரு வருட பிரச்சாரம். இதில் பலர் தாங்கள் சந்தித்த சிறிய பிரச்சனைகள் முதல் தீவிர கொடுமைகள் வரை அவரவர் எதிர்கொண்ட விதத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். இது மற்ற பெண்களை நிச்சயம் ஊக்குவிக்கும். கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பணியாளர்கள் மேல் கவனம் செலுத்தப்படுகிறது.” என்கிறார் ப்ரியா.

சமூகத்தில் புதுமை

துர்கா அலாரம் முறையை செயல்படுத்த கர்நாடக போக்குவரத்து அமைச்சர் தீவிர ஆதரவு கொடுத்தாலும், BMTC யிலிருந்து எதிர்ப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது. சமூக பொறுப்புள்ள நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருகிறார்கள். துர்கா அலாரத்திற்கு தேவையான நிதியை திரட்ட சில ஸ்டார்ட் அப்களுடன் இணைந்துள்ளார் ப்ரியா.

B.PAC-ன் ‘B-SAFE’-ல் இணைந்துள்ளது துர்கா. அடுத்த மாதம் FM இண்டிகோவில் இணைய உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் இதன் பிரச்சாரத்தை மக்களுக்கு எடுத்துரைக்க உருவானதுதான் TV9. மேலும் சென்னையிலும் மும்பையிலும் விரிவாக்கப்பட்டு ஒரு வலுவான குழுவை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.

இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போரிடுவதில்லை என்கிறார் ப்ரியா. குறிப்பாக இளம் பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை எதிர்த்துத் சுயமாக போராடத் தெரியவேண்டும். இதற்கு உதவுவதுதான் துர்கா. மேலும் பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உறுதியாக எதிர்கொண்ட விதம் குறித்த தகவல்களை சேகரிப்பதிலும் அந்த விவரங்கள் பத்திரப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

பெண்கள் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவர்கள். நாம் எப்படி பல்வேறு திறமைகள் கொண்டிருக்கிறோம், எப்படி புரிந்துகொள்கிறோம், எப்படி தீர்வு காண்கிறோம், எப்படி வளர்கிறோம், எப்படி காயப்படுகிறோம் என்று நான் கூர்ந்து கவனிப்பேன். நாம் பலசாலிகள் இருப்பினும் பாதிக்கப்படுபவர்கள். இதுதான் பெண்களின் சிறப்பு. நாங்கள் பெண்களுடன் பணிபுரிந்து அவர்கள் சிறந்த பாதுகாப்பான வாழ்க்கை வாழ உதவுகிறோம். எல்லாவற்றிலும் சமத்துவத்திற்காக போராடுவேன்.” என்கிறார் ப்ரியா.

ஆக்கம் : அபராஜிதா சௌத்ரி | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பாலின பாகுபாடில்லா வாழ்க்கையைக் காட்டும் “விகல்ப் சன்ஸ்தான்”