தண்ணீருக்கு அடியில் செயல்படும் நீர்மூழ்கி ரோபோ- ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களின் வடிவமைப்பு! 

பெலுகா, அழிவில்லா சோதனையை மேற்கொள்ளும் திறனுள்ள கண்காணிப்பு வகை ரோபோ... 

0

இந்தியாவின் அழிவில்லாச் சோதனைக்கான திறன்கொண்ட, நீரின் கீழ் செயல்படும் ரோபோக்கள் தயாரிக்கும் ’பிளானிஸ் டெக்னாலஜீஸ்’, உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கியுள்ள தங்களது இரண்டாவது ரோபோ ‘பெலுகா’ வை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நீர்மட்டத்திற்கு கீழ் 200 மீட்டர் ஆழம் வரை, 4 நாட்கள் (knot) வேகத்தில் பயணித்து கீழே செல்லக்கூடிய சக்திவாய்ந்த வாகன ரோபோ இதுவாகும்.

’ROV பெலுகா’ என்ற தொலைதூரத்தில் இருந்து இயக்கக்கூடிய இந்தவகை ரோபோ, இதற்குமுன்பு இந்நிறுவனம் வெளியிட்ட ரோபோக்களைவிட இரண்டு மடங்கு அதிக திறன்கொண்டது ஆகும். இது, மேம்படுத்தப்பட்ட பார்வைத்திறன் மற்றும் ஒலிமயமாக்கல் அமைப்புமுறையைக் கொண்டிருக்கிறது. 

Dr.பிரபு ராஜகோபால், கிருஷ்ணன் பாலசுப்ரமணியன், தனுஜ் ஜுன்ஜுன்வாலா, ராகேஷ் மற்றும் வினீத் பெலுகா ரோபோ உடன்
Dr.பிரபு ராஜகோபால், கிருஷ்ணன் பாலசுப்ரமணியன், தனுஜ் ஜுன்ஜுன்வாலா, ராகேஷ் மற்றும் வினீத் பெலுகா ரோபோ உடன்

நேரடி ஆய்வுக்காக மட்டுமல்லாமல், அல்ட்ராசோனிக் தடிமன் அளவீடுகளை செய்யும் திறனையும், உயிர் சிதலங்களை சுத்தமாக்கலில் கண்டறியும் திறனையும் மற்றும் கடலில்  நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புகள் மற்றும் நீரில் மூழ்கியுள்ள பிற கட்டமைப்புக்களுக்காக கேத்தோடிக் சாத்தியத்திறன் அளவீடுகளை மேற்கொள்ளும் திறனுள்ளதாக ROV பெலுகா அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர கடல்படுகை மேப்பிங்கிற்கான ஆய்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் சம்மந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்த ரோபோ உதவியாக இருக்கும். பல்வகை திறன்களை இது கொண்டிருந்தாலும், குறைந்த எடையுடன், சிறிய வடிவில் எங்கும் செல்லக்கூடிய அமைப்பில், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 8 சென்சார்கள் வரை இதில் பொருத்தமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறைந்த விலையில் வடிவமைக்கப்பட்டுள்ள பெலுகா ரோபோ, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக துறைகளுக்கு ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இருக்கும். இது 2017 ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று பிளானிஸ் டெக்னாலஜீஸ் அறிவித்துள்ளது. 

பிளானிஸ் டெக்னாலஜீஸ் இணை நிறுவனர் மற்றும் சிஇஒ தனுஜ் ஜுன்ஜுன்வாலா இது பற்றி பேசுகையில்,

“இந்தியாவிலும், அண்டை நாடுகளில் நீருக்கு கீழ் செய்யப்படும் ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளின் வழக்கமான முறையை மாற்றி மேம்படுத்த பிளானிஸ் முற்படுகிறது. ROV பெலுகா எங்களது உழைப்பையும், செயல்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் விளங்குகிறது. இந்த ரோபோ எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் துறைக்களுக்காக குறிப்பிட்டு  வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு திறம்வாய்ந்த கண்டுபிடிப்பு. எங்கள் தயாரிப்பில் மைல்கல்லாக இது இருந்தாலும், இதே போன்ற பல தயாரிப்புகளை எங்கள் நிறுவனம் உருவாக்கிவருகின்றது ,” என்றார். 

ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் மையத்தில் பிளானிஸ் டெக்னாலஜீஸ் இந்த ROV பெலுகா’வை அறிமுகப்படுத்தியது. அழிவில்லா மதிப்பீட்டிற்கான மையத்தின் தலைவரும், பிளானிஸ் டெகனாலஜீசின் இணை நிறுவனருமான பேராசிரியர் கிருஷ்ணன் பாலகிருஷ்ணன் இது பற்றி கூறுகையில், 

”கடல் சார்ந்த ரோபோடிக்ஸ், அழிவில்லா ஆய்வு பரிசோதனை மற்றும் அதில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தி செயல்படும் நிறுவனங்கள் குறைவாகவே உள்ளது. அதனால் பிளானிஸ் நிறுவனத்துக்கு சிறந்த ஒரு இடமும் வளர்ச்சி அடைய நிறைய வாய்ப்புகளும் இருக்கிறது,” என்றார். 

பிளானிஸ் டெக்னாலஜீஸ் பின்னணி

குறைவான ஆழம் கொண்ட நீரின் அடியில் இயங்கும் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆய்வுகளின் பிரிவில் இந்திய சந்தைக்கு உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும், அதி நவீன புத்தாக்கங்களையும் வெளி கொண்டுவரும் நிறுவனம் பிளானிஸ். சென்னை ஐஐடி மெட்ராஸ்’ இன் ஆராய்ச்சி பூங்காவில் அமைந்துள்ள இன்குபேஷன் மையத்தில், சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் குழுவால் இந்நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. 

கடல் போக்குவரத்துத் துறையின் ஆதரவோடு மும்பையில் ஏப்ரல் மாதம் நடைப்பெற்ற, ‘மேரிடைம் இந்தியா உச்சிமாநாட்டில்’ இடம்பெற்ற ஸ்டார்ட் அப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து பிளானிஸ் டெக்னாலஜீஸ் வெற்றிப்பெற்றது. அதேபோல், ஜப்பானின் டகிடா பவுண்டேஷன் இந்த ஆண்டிற்கான, ‘Entrepreneur Award of Takeda Young Entrepreneurship Award’ விருதிற்கு பிளானிஸ் தேர்வானது குறிப்பிடத்தக்கது. 

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan