தொழில்முனைவோர் முதல் முதலீட்டாளர் வரை: நாகானந்த் துரைசாமியின் பயணம்! 

0

உங்களில் பலர் ஸ்டார்ட் அப் உலகை கண்காணித்து வருவது போன்றே நானும் முதலீடு தொடர்பான தீர்மானங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்: நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் ஏன் நிதியுதவி கிடைக்கிறது? முதலீட்டாளர்கள் யாரெல்லாம் இருக்கின்றனர்? அவர்கள் எவ்வாறு சிந்திக்கின்றனர்? எது அவர்களை முதலீடு செய்யத் தூண்டுகிறது? அவர்களது சிறப்பான தருணங்கள் முடிவடைந்ததும் எவ்வாறு உணர்கிறார்கள்? LP-களுக்கு டெலிவர் செய்யவேண்டிய IRR தவிர அவர்களது உந்துதலளிக்கும் விஷயம் வேறு என்ன?

முடிவில்லாத இந்த தொடர் ஆர்வமே என்னைப் போன்றே நீங்களும் ஒரு முதலீட்டாளரின் மனதில் இருக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவீர்கள் என சிந்திக்கவைத்தது. எனவே அவர்களது மனதை ஆராய்ந்து தெரிந்துகொள்ள முயற்சி செய்துள்ளோம்.

இந்த கட்டுரையில் ஐடியாஸ்பிரிங் கேப்பிடல் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் நாகானந்த் துரைசாமியின் பயணத்தைப் பார்ப்போம்.

முதலீட்டாளர்கள் என்றதும் சந்தை போக்கினை நன்கறிந்த திறமையான தனிநபர், தன்னுடைய செயல்பாடுகளை நன்கறிந்தவர், மற்றவர்களில் இருந்து மாறுபட்டு தனித்து நிற்பவர் போன்ற பிம்பங்களே நம் நினைவிற்கு வருவதுண்டு. ஒரு மாறுபட்ட தோற்றத்தை இங்கு காணலாம்.

நான் அறிமுகப்படுத்த இருக்கும் நபர் நாகானந்த் துரைசாமி. இவர் முதலீட்டாளர் என்பதைக் காட்டிலும் தொழில்முனைவர் எனலாம். டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து தனது சாண்ட்ரோ ஆட்டோமெடிக் காரில் வலம் வரும் எளிமையான மனிதர். நம்மில் ஒருவராகவே உரையாடுகிறார்.

நாகானந்த் துரைசாமி (இடதில் இருந்து இரண்டாவது)
நாகானந்த் துரைசாமி (இடதில் இருந்து இரண்டாவது)

எங்களது பெங்களூரு அலுவலகத்தில் நடந்த உரையாடலின்போது அதிக உற்சாகத்துடன் காணப்பட்டார்.

நாகானந்த் ஒரு பொறியாளராகவே தனது பயணத்தைத் துவங்கியுள்ளார். பிஎஸ்ஐ இண்டியா நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக சேர்ந்தார். வென்சர் முதலீட்டாளராக தனது பயணத்தைத் துவங்குவதற்கு முன்பு பல தொழில்முனைவு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளில் ஒரு தொழில்நுட்ப ப்ரொஃபஷனலாக இருந்து மேலாண்மை ப்ரொஃபஷனலாகவும் மனிதவள மேலாளராகவும் மாறியுள்ளார்.

”திடீரென்று மிகிச்சிறந்த, வலுவான நபர்களை நிர்வகிக்கவேண்டிய இடத்தை அடைந்தேன்,” என நினைவுகூர்ந்தார்.

முதலீட்டாளர் தொழில்முனைவோருக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும் என்பதை சவால் நிறைந்த இந்த மாற்றம் அவருக்குப் புரியவைத்தது.

”மேலாளராக என்னுடைய பணி வாழ்க்கையின் முதல் ஆண்டு பயங்கர அனுபவமாக இருந்தது. என்னுடைய மேலாளர் என்னிடம், “உன்னால் மேலாளராக இருக்கமுடியாது. நான் உன்னை இந்த பொறுப்பிலிருந்து விலக்கப்போகிறேன்,” என்றார். அப்படி நடந்தால் அது என்னைப் பெரிதும் பாதிக்கும் என்று கூறி ஆறு மாதம் அவகாசம் அளிக்குமாறும் அதன் பிறகும் என்னால் திறம்பட செயல்படமுடியவில்லை எனில் என்னை பதவிவிலகச் செய்யலாம் என்றேன்,” என்று கூறினார்.

அவர் சம்மதித்தார். கேரி வாகன் என்பரை எனக்கு வழிகாட்டியாக்கினார். கேரி 1990-களில் தனது நிறுவனத்தை 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பில் விற்பனை செய்தார். என்னுடைய சந்திப்புகளில் அவர் பங்கேற்றார். ஒவ்வொரு சந்திப்பு முடிவடைந்ததும் உணவருந்த என்னை அழைத்துச் செல்வார். அவர் என்னிடம், 

“நீ அதிகம் கேட்கவேண்டும். அதுவே உன்னிடம் ஏற்படவேண்டிய முதல் மாற்றம். அடுத்தவரின் வாக்கியத்தை நீ முடித்துவிடுகிறாய். இதுதான் உன்னிடம் உள்ள மிகப்பெரிய பிரச்சனை. நீ புத்திசாலி. நீ விரைவாக சிந்திக்கலாம். ஆனால் எப்போதும் அடுத்தவர் முதலில் பேச அனுமதிக்கவேண்டும். நீ கேட்கவேண்டும். ஒரு மேலாளராக உன்னுடைய முதல் வேலையே காது கொடுத்து கேட்பதுதான். எதற்கு அவசரப்படுகிறாய்? சற்று நிதானப்படுத்திக்கொள்,” என்றார்.

இந்த ஆலோசனைகளை முழுமையாக உள்வாங்கி உணர்ந்தபோது அது ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு அவரை தயார்படுத்தியது.

ஆரம்ப நாட்கள்…

1980, 1990-களில் இருந்த பல இந்திய புத்திசாலி இளைஞர்களைப் போன்றே பணி வாழ்க்கையைத் தேர்வு செய்ய இவருக்கும் இரண்டே வாய்ப்புகள்தான் கண்முன் இருந்தது. பொறியியல் அல்லது மருத்துவம். பெங்களூருவில் பிறந்த வளரந்த இவர் UVCE-ல் கணிணி அறிவியலில் BS படித்தார். அப்போது தொழில்நுட்ப உலகம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. ப்ராசசர் சிஸ்டம்ஸ், இந்தியாவில் இணைந்தார்.

பிஎஸ்ஐ-யில் யூனிக்ஸ் ஆபரேடிங் சிஸ்டமிற்கு அறிமுகமானார். இது அவருக்கு மிகவும் உற்சாகமளிப்பதாக இருந்தது. இங்கு மூன்று இளம் பட்டதாரிகள் அடங்கிய குழு மேலாளரின் வழிகாட்டுதலின்கீழ் இன்பில்ட் மோட்டோரோலா 68030 சார்ந்த போர்டில் AT&3B2 ப்ராசசரை போர்ட் செய்யும் பணியை மேற்கொண்டனர். அதன் பிறகு அமெரிக்காவில் விர்ஜீனியா டெக்கில் கணிணி அறிவியலில் முதுகலை பட்டம் படித்தார்.

பள்ளி நாட்களில் துவங்கி ஆரம்பத்தில் இருந்தே அவர் புத்திசாலியாக இருந்தாரா என்று நான் கேட்டதற்கு அப்படி இருந்ததாகத் தோன்றவில்லை என பதிலளித்தார்.

”நான் ஒரு கடின உழைப்பாளி. பெரும்பாலானவர்களிடம் குறிப்பிட்ட அளவு அறிவுத்திறன் இருக்கும். இந்த அறிவுத்திறனைக் கொண்டு அவர் எவ்வளவு கடினமாக உழைக்கிறார், சரியான இடைவெளி எடுத்துக்கொள்கிறார், சரியான தொழில்முறை தேர்வுகளை செய்கிறார் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே வெற்றி கிடைக்கும்,” என்கிறார்.

அவரது தொழில்முறை பயணத்துடன் அவரது சிறுவயது அனுபவங்களும் இணைந்து தன்னிறைவின் முக்கியத்துவத்தையும் கடின உழைப்பு மற்றும் உறுதியின் நெறிமுறைகளையும் கற்றுக்கொடுத்தது. உறவினர்களையும் சேர்த்து மொத்த 13 பேர் 800 சதுர அடியுடன் ஒரே ஒரு குளியலறை கொண்ட வீட்டில் ஒன்றாக வசித்துள்ளார். நாகானந்தின் அம்மா அதிகாலை எழுந்து அனைவருக்கும் சமையல் செய்வார். அவரது 40 வயதில் லூனா வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டார். தொடர்ந்து சுயசார்புடன் வாழ்ந்து வருகிறார்.

இஸ்ரோ விஞ்ஞானி, நியூயார்க் பல்கலைக்கழக வணிக பள்ளியைச் சேர்ந்த வர்த்தகர், ஐஐஎம் முன்னாள் மாணவர் என உடன் பிறந்தவர்களும் உறவினர்களும் புத்திசாலிகளாகவே இருப்பதால் போட்டி நிலவியது. தினமும் காலை சமையலறையில் அம்மாவிற்கு உதவுவார். இதனால் இன்னமும் இவர் வார இறுதி நாட்களில் சமையலறை பக்கம் செல்வதுண்டு.

உண்மையான தொழில்முனைவோர் எப்படி இருக்கவேண்டும்?

நாகானந்த் எப்போதும் தனிப்பட்ட மதிப்புகளுக்கும் கொள்கைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதையே தன் குழந்தைகள் மனதிலும் பதியவைக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவைக்கப்பட்ட மாடலான சாண்ட்ரோ காரில் பயணிக்கும் இவர் தனது செலவுகள் குறித்தும் இவரது குழந்தைகளின் செலவுகள் குறித்தும் யதார்த்த சிந்தனையுடன் காணப்படுகிறார்.

சௌகரியமான வீடு, வசதி போன்றவை முக்கியம் என்றாலும் ஆசைக்கு ஒரு எல்லை இருக்கவேண்டும் என்றும் உறவுமுறைகளும் மனிதாபிமானமும் முக்கியம் என்றும் அவர் கருதுகிறார்.

ஆரோக்கியம், மகிழ்ச்சி, பகுத்தறிவு போன்றவற்றையே பொருட்களைக் காட்டிலும் அதிகம் நேசிக்கவேண்டும். எவ்வளவு சம்பாதிக்கவேண்டும், எந்த அளவிற்கு சேமிக்கவேண்டும் என்பதற்கான எல்லையை ஒவ்வொருவரும் வகுக்கவேண்டும். அந்த இலக்கை எட்டிய பிறகு பிறருக்கு உதவுவது, சுவாரஸ்யமான நபர்களுடன் உரையாடுவது கற்றுக்கொள்வது, சமூக நலன் போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

பல்வேறு தொழில்முனைவு முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக இல்லை என்றார் நாகானந்த். இவர் சந்தித்த மிகப்பெரிய சவால்களே மிகச்சிறந்த பயிற்சி மேடையாகயும் அமைந்ததுள்ளது. தொழில்முனைவோராக செயல்பட்ட தனது சொந்த அனுபவத்தையும் நினைவுகூர்ந்து எத்தகைய போக்கு உண்மையான தொழில்முனைவோரை உருவாவக்கும் என்று எடுத்துரைத்தார்.

கடினமான நேரங்களை எதிர்கொள்வதற்கான தைரியம்

PhotonEx-ல் 15 பிஎச்டி பட்டதாரிகள் செயல்பட்ட ஒரு ப்ராஜெக்டில் பங்களித்தபோது அவர்கள் உருவாக்கிய ஒரு ப்ராடக்டிற்காக மட்டும் 150 மில்லியன் டாலர் உயர்த்தினர். டெலிகாம் துறை வீழ்ச்சியடைந்ததால் இது தேவைக்கதிகமானது. இது போன்ற பின்னடைவுகள் நம்பிக்கையுடன் நிலைத்திருக்கக் கற்றுக்கொடுப்பதால் இவை உங்களை வலுவடையச் செய்யும் என்றார்.

மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்...

உங்களை எதிர்ப்பவர்கள் ஒருவகையில் உங்களது மறைமுக வழிகாட்டிகளே என்கிற படிப்பினையை அவர் தெரிந்துகொண்டார்.

”மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இணை நிறுவனர் மற்றும் எனது வழிகாட்டியான டிம் பாரோஸ் ’நீங்கள் ஒரு ஸ்டார்ட் அப் துவங்குங்கள் நான் உங்களுக்கு ஆதரவளிக்கிறேன்’ என்றார். அவரிடம் என்னுடைய திட்டத்தை தெரிவித்தபோது, ‘இதை மூன்று வெவ்வேறு பிரிவுகளில் விற்பனை செய்யவேண்டியிருக்கும் என்பதால் இந்த திட்டம் சரியில்லை, நான் ஆதரவளிக்கமாட்டேன்,’ என்றார். என்னால் முடியும் என்கிற அவசர முடிவில் இருந்த நான், அவரது பதிலைக் கேட்டு வருந்தினேன். ஆனால் இன்று என்னுடைய முதிர்ச்சியின் காரணமாக அவர் கூறியதன் பின்னணியில் இருக்கும் உண்மையை புரிந்துகொள்ள முடிகிறது. அந்த திட்டத்திற்கு அவர் ஆதரவளிக்காமல் போனதால் என்னுடைய நான்காண்டு கால கடின உழைப்பு வீணாகாமல் போனது. இன்று டிம் என்னுடைய செயல்பாடுகளுக்கு பெரிதும் ஆதரவளித்து வருகிறார்,” என்றார்.

இன்று அவரது தொகுப்பில் உள்ள நிறுவனங்கள் சிறப்பான செயல்படாத நிலையில் கடுமையாக மதிப்பிட அந்த அனுபவம் கற்றுக்கொடுத்தது.

”நான் தோல்வியுற்றிருக்கிறேன். அதுவும் பயணத்தில் ஒரு பகுதி என்பதை உணர்ந்தேன். ஒரு நிறுவனத்தைத் துவங்கினேன். யாரும் அதில் முதலீடு செய்ய முன்வரவில்லை. பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. மரியாதைக்குரிய தொழில்முனைவோரான தேஷ் தேஷ்பாண்டேவிடம் சென்றேன். அவரது இந்த எளிய வரிகள் என் நெஞ்சை விட்டு நீங்காமல் இருக்கிறது.

எந்த பின்னணியை கொண்டவராக இருந்தாலும் ஒரு தொழில்முனைவோரின் இலக்கு வருவாயை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதாக இருக்கவேண்டும்.

நாகானந்த் அமெரிக்காவில் ஒன்பது மாத காலம் தனது ஸ்டார்ட் அப்பை நிலைநிறுத்த முயற்சி செய்த பிறகு தனது குடும்பத்துடன் இந்தியா திரும்பினார். வேறு ஒருவரிடம் வேலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. நாகானந்த், தேஷ் தேஷ்பாண்டேவின் அறிவுரைப்படி அவரது உறவினரின் நிறுவனத்திற்கு இணை நிறுவனரானார்.

”நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் போன்றவை பொருட்டல்ல. ஒரு நிறுவனராக நீங்கள் நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றீர்களா என்பதே முக்கியம். இரண்டாண்டுகளில் ஊழியர்கள் எண்ணிக்கை 150-ல் இருந்து 750 ஆனது. ஐந்தாண்டுகளில் ஐந்து மடங்கு வளர்ச்சியடைந்தது,” என்று குறிப்பிட்டார்.

தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு திறந்த மனநிலையுடன் இருங்கள்

அடுத்தவர்களின் கருத்துகளை பலர் கேட்காதபோது நீங்கள் பரிந்துரைகளை கேட்கத் தயாராக இருப்பீர்கள் என்கிற பார்வை சரியா? என்கிற என்னுடைய கேள்விக்கு, அவற்றைக் கேட்பதுடன் தகுந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவேன் என்று பதிலளித்தார்.

கல்வி சிந்தனைகளை சீர்படுத்தும்

”அனைவருமே ஸ்டீவ் ஜாப்ஸ் அல்லது பில் கேட்ஸ் நிலையில் இருக்கமாட்டார்கள். நான் அந்த நிலையில் இல்லை என்பது எனக்குத் தெரியும். இவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டதாக பலர் சொல்கின்றனர். எனவே தொழில்முனைவோரும் இடையில் நிறுத்திவிடலாம் என்றும் அறிவுறுத்துகின்றனர்,” என குறிப்பிட்டார்.

இவர்கள் பில்லியன் பேரில் ஒருவர் என்று கூறி இந்த உதாரணங்களை புறந்தள்ளிவிடுகிறார் நாகானந்த். மாறாக முறையாக கல்வி பயின்றவர்களை உதாரணம் காட்டுகிறார். 

கற்றவர்களது கல்வி அவர்களது வலிமைகளை சுய மதிப்பீடு செய்ய உதவும் என்கிறார். ஸ்டார்ட் அப் துவங்குவதற்காக படிப்பை விடும் போக்கு ஃபேஷனாகிவிடக் கூடாது என்றார்.

நீங்கள் இறுதியாக அனைத்தையும் புரிந்துகொண்டுவிட்டீர்களா என்று வியப்புடன் கேள்வியெழுப்பினேன்.

நாகானந்த் புரிந்துகொண்டுவிட்டதாகவே நினைக்கிறேன் என்றார். நன்றாக சிந்திப்பவர், அடுத்தவரிடம் நல்லவிதமாக நடந்துகொள்பவர், உடலளவில் உறுதியாக இருப்பவர் என்று தன்னை விவரித்துக்கொள்கிறார்.

அவர் பங்கேற்ற குழு விவாதங்களில் நானும் இருந்துள்ளேன். அவரது நிபுணத்துவம் பாராட்டத்தக்க வகையில் இருக்கும்.

உங்களை மட்டுமே மையப்படுத்திக்கொள்ளாமல் அனைவருக்கும் இடமளித்து மிகச்சிறந்த நடுவராக இருக்கிறீர்கள் என்று அவரிடம் கூறினேன்.

நாகானந்த் பதிலளிக்கையில் அவரது தத்துவார்த்த மனப்பான்மை எனக்கு புலப்பட்டது.

”மக்கள் என்னிடம் வந்து நீங்கள் சிறப்பானவர் என சொல்லவேண்டும் என நான் விரும்பவில்லை. அந்த கட்டத்தை நான் கடந்துவிட்டேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் திருப்தியாக இருக்கிறேன். பெரியளவில் சாதிக்கவேண்டும் என்னும் எண்ணம் இல்லை என்பது இதற்கு பொருளல்ல. ஆனால் அந்த பயணம் ரசிக்கும்படி இருக்கவேண்டும். நான் ரசிக்காத எதையும் நான் செய்யவிரும்பவில்லை,” என்றார்.

தொழில்முனைவோருக்கு பணம் ஈட்டவேண்டும் அல்லது பெரிதாக சாதிக்கவேண்டும் என்கிற நோக்கம் இருக்கக்கூடாது என்பது பொருள் அல்ல. மாறாக அவர்களது நிதி சார்ந்த இலக்கு மிகப்பெரிய அளவில் இருக்கவேண்டும் என்றே பரிந்துரைக்கிறார். பணத்தை மதிப்பவர்களையும் தங்களது குடும்பத்திற்கும் வணிகத்திற்கும் பாதுகாப்பான நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பணம் முக்கியம் என்பதையும் உணர்ந்த தொழில்முனைவோரை அவர் ஆதரிக்கிறார்.

நானும் அவருடைய கருத்தை ஆமோதிக்கிறேன். நாம் அனைவரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நல்ல மதிப்புடன் வளர்க்கப்பட்டுள்ளோம். நம் நிதி நிலையைக் கொண்டே நமது வெற்றி மதிப்பிடப்படுகிறது.

தொழில்முனைவோராக இருந்து முதலீட்டாளராக மாறினார்

நாகானந்த் 2014-ம் ஆண்டிற்கு பிறகே அடுத்துகட்ட நடவடிக்கை குறித்து சிந்திக்கத் துவங்கினார். அவரது நிதி நிலைமை பாதுகாப்பாகவே இருந்தது. அவரது மனைவி ரூபா வெற்றிகரமான கார்ப்பரேட் வக்கீல். தற்போது Lawshram என்கிற வழக்கறிஞர்களுக்கான பி2பி தளத்தை உருவாக்கி தொழில்முனைவுப் பயணத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.

தொழில்முனைவில் ஆர்வம் உள்ளபோதும் குறைந்தபட்சம் நான்காண்டு கால அர்ப்பணிப்பும் வாரத்திற்கு 60 மணி நேரம் பணியுடனும் கூடிய சரியான வணிக திட்டம் அவரிடம் இல்லை. தொழில்முனைவராக செயல்பட்ட 18 ஆண்டு கால அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்பதை உணர்ந்தார்.

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஆரம்ப நிலை நிதியில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை என்பதை உணர்ந்தபோது அவரது ஆர்வம் மேலோங்கியது.

அப்போது உருவானதுதான் ஐடியாஸ்பிரிங் கேப்பிடல்.

ஸ்டார்ட் அப்களுக்கு நிதி வழங்குவதுடன் அவர்களது தொகுப்பில் உள்ள நிறுவனங்களுக்கு 18 மாதங்கள் வரை உதவியும் இடவசதியும் வழங்க ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என நம்பப்பட்டது. இடத்தில் முதலீடு செய்வது சிறப்பான யோசனை இல்லை என்பது தெரிந்தது. இன்று ஐடியாஸ்பிரிங் அதன் முக்கிய குழுவுடன் 13-15 ஆரம்பகட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவும் முதலீடு பெறும் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படவும் திட்டமிட்டுள்ளது.

சரியான நபரை இலக்காக நிர்ணயிக்கும்போது, அதாவது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பகுதியில் ஆர்வம் உள்ள தொழில்முனைவோர்களில் கவனம் செலுத்தப்படும்போது நிதி உயர்த்துவது கடினம் அல்ல.

முதலீட்டாளராக அனுபவம் இல்லாதபோதும் நாகானந்த் இந்த புதிய பகுதியில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டதால் வேடிக்கை நிறைந்ததாக இருந்தது என்று குறிப்பிடுகிறார். ஐடியாஸ்பிரிங் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை நிதியை வழங்குகிறது. சுமார் 15 நிறுவனங்கள் வளர்ச்சியடையத் தேவையான அவகாசம் கொடுக்கப்படும் விதத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 3.5 கோடி ரூபாய் வழங்குகிறது. இந்நிறுவனங்கள் வளர்ச்சியடைகையில் முதலீடும் வளர்ச்சியடையும்.

சுமார் 15 நிறுவனங்களுக்கு சீட் நிதியாக சுமார் 3.5 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் நிலையில் 10 ஸ்டார்ட் அப்கள் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்ட மேலும் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுகிறது.

நாங்கள் ஐடியாஸ்பிரிங்கை ஒரு ஸ்டார்ட் அப் போன்றே நடத்துகிறோம். யாராவது என்னை முதலீட்டாளர் என்று அழைத்தால் பார்ட்னர் என்றே அழைக்கச் சொல்வேன்.

இதை நிரூபிக்கும் வகையில் ஸ்டார்ட் அப்களுக்கு உதவ சஞ்சய் ஆனந்த்ராம், ரவி குருராஜ், ஷரத் ஷர்மா ஆகியோருடன் வெளிப்புற முதலீட்டுக் குழுவை அமைத்தார் நாகானந்த்.

ஐடியாஸ்பிரிங்கின் தத்துவம் என்ன?

நீங்கள் எங்களிடம் உங்களை வெளிப்படுத்திக்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சியைக் காட்டிலும் அதிக சிரத்தை எடுத்து எங்களது ஐசியிடம் உங்களை வெளிப்படுத்துவோம் என்று தொழில்முனைவோர்களிடம் நகைச்சுவையாக கூறுவேன். இந்த நிதி தொழில் முனைவோரை ஆதரிப்பதற்காக கொடுக்கப்படுவதாகும். பணத்தைக் கொடுத்துவிட்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அழைத்து அறிவுரை வழங்குவதில்லை. நான் 18 வருடங்களாக தொழில்முனைவோராகவே இருந்ததால் எப்போதும் தொழில்முனைவோரின் மனநிலையிலேயே இருக்க விரும்புகிறேன்.

இதை எப்படி நடைமுறைப்படுத்துகிறீர்கள்?

ஒரு தொழில்முனைவோர் எப்போது அழைத்தாலும் போனை எடுக்கவேண்டும். நேரம் இல்லை என்று சொல்லக்கூடாது. வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பேசவேண்டும். ஒவ்வொரு மாதமும் நேரில் சந்திக்கவேண்டும். கட்டுப்பாடு முக்கியம் என்பதால் எம்ஐஎஸ் அறிக்கையைக் கேட்கிறோம். இத்தகைய கலாச்சாரத்தையே நாங்கள் பின்பற்றுகிறோம். 

கட்டுப்பாடு இன்றி எதுவும் சிறப்பிக்காது என்பதை நான் தெரிந்துகொண்டேன். பணிவுடன் இருங்கள், நல்லவிதமாக நடந்துகொள்ளுங்கள் ஆனால் உறுதியாக இருங்கள்,” என விவரித்தார்.

தொழில்முனைவோர் இதை பின்பற்றுவார்களா என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது?

”நீங்கள் எங்களுடன் பணிபுரிய விரும்பினால் எங்களிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கிறோம் ஆனால் எங்களிடம் சில எதிர்பார்ப்புகளும் உள்ளன. ஏனெனில் விளைவு என்பது வெவ்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. வெற்றிகரமான நிறுவனத்தை உருவாக்க சில நம்பிக்கைகள் அவசியம். கட்டுப்பாடுகளில் நாங்கள் மிகவும் கண்டிப்பானவர்கள். ஆகவே எங்களது தொழில்முனைவோர் அனைவருக்கும் மாதிரி ஒன்றை வழங்கி காலாண்டு அறிக்கையைக் கேட்போம். முதல் நாளிலேயே கம்பெனி செக்ரெட்டரியை நியமிக்கவேண்டும். உங்களது நிதி ஆலோசகரும் கம்பெனி செக்ரெட்டரியும் முதல் நாளில் இருந்தே எங்களுடன் செயல்படவேண்டும். இவை இல்லாமல் நாங்கள் நிதி வழங்குவதில்லை,” என்றார்.

உங்களது நிறுவனங்களுக்கு நீங்கதான் முதல் முதலீட்டாளராக இருப்பீர்களா?

பெரும்பாலான நிறுவனங்களில் அவ்வாறுதான் இருக்கும்.

இந்த டீல்களை எப்படிப் பெறுகிறீர்கள்?

எங்களது ஐசி வாயிலாகவும் துறையில் எங்களுக்கு இருக்கும் தொடர்பு வாயிலாகவும் பெறுகிறோம்.

எப்போது நிதி வழங்கத் துவங்கினீர்கள்?

2016-ம் ஆண்டு துவக்கத்தில்.

எத்தனை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளீர்கள்?

தற்போது ஒன்பது நிறுவனங்கள். ஆறு நிறுவனங்கள் முடிந்துவிட்டது. மூன்று நிறுவனங்களில் டெர்ம் ஷீட்கள் வழங்கப்பட்டுள்ளது. உறுதியான ஆவணங்களை எழுதிய பிறகே தொடர்பு கொள்கிறோம். நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஒரு நிறுவனம் அடுத்த நிதிச் சுற்று உயர்த்துகிறது. மற்றொரு நிறுவனம் 2 மில்லியன் முதல் 2.5 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது.

இந்த சாதனைகள் எளிதாக பெறப்படவில்லை. தொடர்புகளை அணுகுதல், உத்திகளை உருவாக்குதல், சந்திப்புகள் என நிறுவனங்களுடன் 70-80 மணி நேரம் பணி புரியவேண்டியிருந்தது.

ஒரு முதலீட்டாளராக மனதளைவில் எந்த நிலையில் இருக்கிறார் என தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தேன். அவர் ’எனக்குத் தெரியவில்லை’ என்றே பதிலளித்தார்.

அவரது பதில் நேர்மையானது. ஏனெனில் நிதியளிக்கப்பட்டுள்ள தொழில்முனைவோரின் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை நாகானந்த் அறியமாட்டார். தொழில்முனைவோர் சுற்றுச்சூழலுக்கு உதவி LP-க்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க ஆர்வம் காட்டுகிறார். முதல் நிதிச்சுற்று வெற்றிகரமாக அமைய காத்திருக்கிறார். சுமார் இரண்டாண்டுகளுக்குப் பிறகு தங்களது சாதனைகளை எடுத்துரைக்கத் தயார்நிலையில் இருப்பார்.

நிலைமை மோசமாகி நிதி முடிவடைந்தாலோ அல்லது மறுவிற்பனை செய்யப்பட்டு பணத்தை திரும்ப அளித்தாலோ, பணம் இல்லாத நிலை ஏற்பட்டாலோ பங்குகள் நேரடியாக முதலீட்டாளர்களுக்கு மாற்றப்படும் என வென்சர் பகுதியின் செயல்பாடு குறித்து விவரித்தார்.

ஒரு முதலீட்டாளராக அவரது கருத்துகளை முன்வைக்குமாறு கோரினேன். தன்னுடைய பார்வையையும் கருத்துகளையும் தொழில்முனைவோர்களுக்கு வழங்குவதாகவும் அதேசமயம் ஒரு ஆலோசகராக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை என்றும் தெரிவித்தார். தேவையற்ற புகழாரங்களை தொழில்முனைவோரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றார். மிகவும் முக்கியமாக தனது நிறுவனங்கள் வெற்றியடைந்து பணம் ஈட்டவேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது.

வெற்றி என்பது செயல்படுத்தும் விதத்தை மட்டுமல்லாமல் அதிர்ஷ்ட்டத்தை சார்ந்தது என்கிறார். 40 சதவீதம் சந்தை மற்றும் சரியான நேரத்தை சார்ந்துள்ளது என நம்புகிறார். 

தனிப்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துகொள்கையில் தனது மூன்று முயற்சிகளில் இரண்டு பலனளிக்காமல் போனதாகவும் மூன்றாவது முயற்சியே சிறப்பாக இருந்தது என்றும் தன்னுடைய தற்போதைய நிலையை நினைத்து மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, “பணத்தால் ஆரோக்கியத்தையோ, மகிழ்ச்சியையோ, பகுத்தறியும் திறனையோ வாங்கமுடியாது என்றாலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க குறிப்பிட்ட அளவு பணம் அவசியம். எது முக்கியம் என்பதை வகுத்துக்கொண்டு அதில் உறுதியாக இருங்கள். ஒவ்வொருவருக்கும் அவருக்கான செயல்படும் புள்ளி இருக்கும். அதை அறிந்துகொண்டால் அதிக திறனுடம் மகிழ்ச்சியாக செயல்படலாம். என்னைப் பொருத்தவரை சுவாரஸ்யமான நபர்களுடன் உரையாடுவதே முக்கியம். இதுவே ஒத்த சிந்தனையானர்களுடன் இணைய வழிவகுக்கும்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஷ்ரத்தா ஷர்மா | தமிழில் : ஸ்ரீவித்யா