புத்தக அட்டைகளை தன் கைவண்ணத்தால் அழகாக்கிய பள்ளிப் படிப்பை பாதியிலே விட்ட கதிர்!

குடும்ப வறுமை, படிப்பில் வீக் ஆனால் கலை மீது கடலென காதல் கொண்டிருந்த கதிர், கூலித்தொழில் உட்பட பல சிறிய வேலைகளை செய்து பின்னர் ஓவியக்கலையை கற்று இன்று ஒரு டிசைனராகி பல உள்ளங்களை கொள்ளை அடித்துள்ளார்.

0

’அட்டைப்படத்தை கொண்டு ஒரு புத்தகத்தை கணிக்காதே’ என்றொரு உருவக சொற்றொடரை அடிக்கடி கேட்டிருப்போம். உண்மையில், அட்டையைப் பார்த்து புத்தகத்தை முழுவதுமாய் மதிப்பிட முடியாமல் இருக்கலாம், ஆனால் அட்டைப்படங்கள் புத்தகங்களுடன் முக்கியமான காட்சி உறவை ஏற்படுத்துகின்றன. சில அட்டைப்படங்கள் கண்ணீரை வரவழைக்கும், சிலவை ஆனந்தத்தை, சிலவை கோபமூட்டும்.

அதுபோல், மாணக்கர்களுக்கு அவர்களது பெரும்பாலான பாடப்புத்தகங்களின் அட்டைப்படங்கள் அவ்வளவு அட்ராக்டிவ்வாக இல்லாததால் அயர்வை உண்டாக்கின. ஆனால், நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர்களது பாடப்புத்தகங்களின் அட்டைப்படங்கள் குழந்தைகளின் உலகத்தினை போலவே கொண்டாட்டம் ததும்பும், குதூகலத்தை உருவாக்கும் வகையிலான அட்டக்காசமான அட்டைப்படங்களாக மின்னுகின்றன. அதற்கான காரணகர்த்தா கதிர் ஆறுமுகம் எனும் கலைஞன்.

ஆம், நிகழாண்டின் தமிழக அரசின் 1ம் வகுப்பு, 6,9 மற்றும் 11ம் வகுப்பின் பாடப்புத்தகங்களின் அட்டை வடிவமைப்பு இவருடையதே. பட்டாம்பூச்சி, நீல வண்ண மீன், பண்டைக்கால சுவர் சித்திரம், கெமிஸ்டரி பார்மூலாக்கள் என்று யுனிக்காகவும் கலர்புல்லாகவும் கதிர் வடிவமைத்துள்ள அட்டைப்படங்கள் செம நேர்த்தி!

“கனாக்களிலும் நான் கண்டிராத வாய்ப்பு, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் சார், ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன் சார், டைரக்டர் தனபால் பத்பநாமன் சார் என மூவர் வழி கிடைத்தது. என் திறமையை உலகுக்கு காட்ட கிடைத்த வாய்ப்பு என்பதை தாண்டி எனக்கு விடப்பட்ட சவால் என்றே சொல்வேன். 

கதிர் ஆறுமுகம்
கதிர் ஆறுமுகம்
பத்து லட்சம் குழந்தைகளின் கைகளில் நான் டிசைன் செய்த புத்தகம் தவழ இருக்கிறது. அவர்களை பேராடிக்காமல் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.”

இதற்காக இரவு பகல் பாராமல், ஒரு புத்தகத்திற்கே குறைந்தபட்டசம் 40 டிசைன்கள் செய்திருக்கிறார். அதிலும் 11ம் வகுப்பிற்கான புவியியல் புத்தகக் கவருக்காக 100 வித அட்டைப்படங்களை வடிவமைத்திருக்கிறார். 

அதில் தி பெஸ்ட் என்று தேர்வு செய்யப்பட்ட புத்தக காப்பான்களான அட்டைப் படங்களுக்கு ஸ்டூடன்ஸ் முதல் டீச்சர்ஸ் வரை நன்வரவேற்பு கிடைத்துள்ளது. முகமறியா பலரும் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.

90 நாட்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியால் ஹாப்பியாக இருக்கும் கதிரின் இளமைக்காலம் சந்தோஷங்கள் சூழ்ந்து இருக்கவில்லை. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் கிராமத்தில் பிறந்தவர் கதிர். அப்பா ஆறுமுகம், தெருகூத்துக் கலைஞர். அப்பாவின் மறைவுக்கு பிறகு குடும்ப பொறுப்புகள் அம்மாவின் மீது விழுந்தன. தினகூலிக்கு வேலை செய்து குடும்பத்தை நடத்தியுள்ளார். சரிசெய்து கொள்ள முடியாதபடி வீட்டு வறுமை. கதிருக்கு அப்போதிருந்தே கலை மீது ஒரு காதல்.

“என் குழந்தைப் பருவத்திலிருந்தே படைப்புகளின் மீதான ஈர்ப்பு இயல்பாகவே இருந்தது. அது ஹீரோ பேனாக் காலம். பேனா, பென்சில்களில் மையத்தில் கம்பெனியின் பெயர் எழுதியிருக்கும். நான் இதையெல்லாம் உற்று கவனிப்பேன். அப்போ, ஸ்டிக்கர் வாங்கி பேனாவில் கிளாஸ் பசங்க பெயரை கட் பண்ணிக் கொடுப்பேன். ஸ்கூல் முடிஞ்சு சாயங்காலம் பசங்க எல்லாம் சேர்ந்து களிமண்ணில் சிலை செய்வோம்.” 

ஆறாப்பு முதல் ஒம்பதாப்பு வரை ஒவ்வொரு வகுப்பையும் இரண்டு இரண்டு வருஷம் படித்து, இனி உயிர், மெய் அனைத்தும் கலைக்கே என்று தீர்மானித்து பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொண்டார். பள்ளிப் படிப்பை நிறுத்திய பிறகு, எஸ்டீடி பூத்களுக்கு பலகையில் பெயர் எழுதுதல், சிற்பங்களுக்கு வண்ணம் தீட்டல் போன்ற வேலைகளையும் செய்து வந்துள்ளார். 

அந்நாட்களில், டிசைனிங் யாரிடம் கற்றுக் கொள்வது? எங்கு கற்பிப்பார்கள்? என்ற தேடலிலே ஈரோட்டில் உள்ள பல ஆர்டிஸ்டுகளை சந்தித்திருக்கிறார். 

பயிற்சி பட்டறை ஒன்றில் கதிர் நண்பருடன்
பயிற்சி பட்டறை ஒன்றில் கதிர் நண்பருடன்

இறுதியாய், ஈரோட்டில் உள்ள தனியார் வடிவமைப்பு நிறுவனத்தில் டீ வாங்கிக் கொடுக்கும் வேலையில் சேர்ந்துள்ளார். பள்ளிக்கே செல்லவில்லை என்றாலும், கிராபிக் டிசைனிங் கோர்ஸ் படித்திட வேண்டும் என்பதில் தீவிரமாய் இருந்துள்ளார். கட்டணத்திற்காக பிளாஸ்டிக் கம்பெனியில் இரவு வேலை பார்த்து பணத்தையும் சேகரித்து, படித்தும் முடித்தார்.

இச்சமயத்தில் தான், குக்கூ சிவராஜின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் வின்சென்ட் வான் கோக் எழுதிய புத்தகத்தை கதிரிடம் கொடுத்து வாசிக்கக் கூறியுள்ளார். ஆனால், கதிர் வீட்டு அலமாரியில் பல நாள் கிடப்பில் கிடந்தது அப்புத்தகம்.

“500 பக்க புத்தகம் அது. ரொம்ப நாள் வாசிக்கவில்லை. ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து உட்கார்ந்து முழுமூச்சாய் வாசித்து முடித்தேன். வின்சென்ட் வான் கோக்கின் கதையை படித்து முடித்தபோது, அவர் 30 வயதில் தான் ஓவியம் கற்றுள்ளார், அப்போது என்னால் ஏன் முடியாது? என்ற எண்ணம். என்னை அறியாமலே அழுதேன்...” என்றார். 

எப்படியேனும் ஃபைன் ஆர்ட்ஸ் படித்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் தலைநகர் சென்னையை நோக்கி கிளம்பியுள்ளார். ஆனால், ஃபைன் ஆர்ட்ஸ் படிக்க அவருடைய கல்வி தகுதி பெரும் தடையாகியது. 

ஆனாலும், தொடர்ந்து தனக்கான வாய்ப்பைத் தேடி அலைந்திருக்கிறார். நீண்ட காத்திருப்புக்கு பின், உயிர்மை பதிப்பக்கத்தில் வடிமைப்பாளராக பணிக்கிடைத்தது. தமிழ் இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களான சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் பல எழுத்தாளர்களின் புத்தகங்களின் அட்டைப்படங்களை இவரது கைவண்ணத்தால் அலங்கரித்துள்ளார். தவிர, குமுதம், பெண்ணே நீ, நம்தோழி, தேவதை இன்னும் பல பத்திரிக்கைகளில் பணியாற்றியுள்ளார்.

“என் வளர்ச்சியில் குமுதம் வேதராஜன் சாரின் பங்கு மிகப்பெரியது. குமுதத்தில் பணிக்கு சேர்ந்தபின், ஆசானாய் நிறைய கற்றுக்கொடுத்தார்,” எனும் அவரது கேரியர் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பே, பள்ளி பாடப்புத்தக வடிவமைப்பு. 

“உதயச்சந்திரன் சார் கூப்பிட்டு, சில வரைப்படங்கள் வரையும் வேலை இருக்கிறதாகச் சொன்னார். நானும் முதல் 20 நாள் வேலை செய்தேன். அப்ப வரை பள்ளி பாடப்புத்தகத்துக்காக வேலை செய்கிறேனு தெரியாது, எனக்கே பிக் சர்ப்ரைஸ். அப்புறம் தான், அட்டை வடிவமைப்பு பற்றி சொன்னார்.”

கதிர் வடிவமைத்துள்ள 6-ம் வகுப்பு கணக்கு புத்தக அட்டை (வலது)
கதிர் வடிவமைத்துள்ள 6-ம் வகுப்பு கணக்கு புத்தக அட்டை (வலது)

அவரது வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்திற்கான சிறுப்பொறியாகியது அவ்வாய்ப்பு. அதை இறுக பற்றிக் கொண்டு வெறியோடு உழைத்தவருக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. பாடநூல் வடிவமைப்பு திட்டத்தை முடித்த பின், கதிர் அவரது ட்ரீம்களுள் ஒன்றான தமிழ் மொழிக்கான புதிய எழுத்துரு பாணியை உருவாக்குவதில் முழு முயற்சியுடன் இறங்க உள்ளார். 

“ஆங்கில எழுத்துருக்கள் கூகுளில் தட்டினால் நூற்றுக்கணக்கில் கிடைக்கும். ஆனால், அது போன்று தமிழ் ஃபான்ட்ஸ் கிடைப்பதில்லை. அழகிய எழுத்துருக்களை உருவாக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஆனால், தமிழ் எழுத்துகள் அதிகம் என்பதால் நேரம் அதிகமாகும். அதற்கான நேரம் கிடைக்கையில் நிச்சயம் செய்வேன்...” என்று முடிக்கிறார் இந்த கலைஞன்.

வாழ்த்துகள் ப்ரோ..

Related Stories

Stories by jaishree