மேற்கத்திய இசையுடன் கர்நாடக சங்கீதத்தை இணைத்து இணையத்தை வசப்படுத்திய மஹேஷ் ராகவன்! 

0

எந்த சமகால இந்திய இசை ரசிகரிடம் சென்று கர்நாடக சப்தங்களை வைத்து ஃப்யூசன் இசை அமைப்பது குறித்து கேட்டாலும், அவர் சொல்லும் முதல் பெயர் மஹேஷ் ராகவனாகவே இருக்கும். அடேலின் ‘ஹலோ’ பாடல், ஹாரி பாட்டரின் தீம் ம்யூசிக், கேம் ஆஃப் த்ரோன்ஸின் சவுண்ட்ராக் ஆகியவற்றோடு இந்திய கர்நாடக சப்தங்களை கோர்த்து இவர் செய்யும் கவர் வீடியோக்களுக்கு இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். இதற்கெல்லாம் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இசைக்கருவி எது தெரியுமா? ஐபேட்.

திறமையான வாய்ப்பாட்டு கலைஞரான மஹேஷ், விசுவல் ஆர்ட்ஸ், மொபைல் செயலிகள் வடிவமைப்பு, டிஜிட்டல் மீடியா, சவுண்ட் டிசைன் மற்றும் சினிமா போன்ற துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார். தொழில்நுட்ப நிறுவனங்களோடு இணைந்து அவர்களின் சாஃப்ட்வேர்களிலும், ஹார்டுவேர்களிலும் இந்திய கர்நாடக இசையை ஒலிக்கச் செய்யும் மஹேஷ், இண்டியன்ராகா நிறுவனத்தின் க்ரியேட்டிவ் டைரக்டரும் கூட.

யுவர் ஸ்டோரி வீக் எண்டருக்கு அளித்திருக்கும் பேட்டியில், மகேஷ் தன் இசைப்பயணத்தை குறித்தும், தொழில்நுட்பம் எப்படி புதிய சப்தங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பது குறித்தும், யார் யாரோடு இணைந்து வேலை செய்ய திட்டங்கள் இருக்கின்றன என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

கேள்வி : உங்களை பற்றியும், உங்களுக்கு இசை மீது ஆர்வம் வந்தது குறித்தும் சொல்லுங்கள்?

மஹேஷ் ராகவன் : நான் வளர்ந்தது துபாயில். எனக்கு நான்கு வயதிருக்கும் போது கர்நாடக வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். எனக்கு ஆசிரியராக இருந்தது, என்னுடைய அத்தை இந்திரா கிருஷ்ணன்.

எனக்கு ஐந்து வயதிருக்கும் போது, கீபோர்டை காது வழி கேட்டே வாசிக்கக் கற்றுக் கொண்டேன். பள்ளிக் காலத்தில் கீபோர்டும், கிடாரும் கற்றுக் கொண்டேன். இசையின் மீது இருந்த ஆர்வத்தினால் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைகழகத்தில் ஆடியோ ப்ரொடக்‌ஷனில் இளங்கலை பட்டமும், ம்யூசிக் டெக்னாலஜியில் முதுகலை பட்டமும் வாங்கினேன். இன்று நான் ஒரு முழுநேர இசைக்கலைஞர். இளைஞர்களுக்கு கர்நாடக இசையை புதுமையான வழிகளில் கொண்டு சேர்ப்பதில் தான் என் முழு கவனமும் இருக்கிறது

கேள்வி : துபாயில் வளர்வது எப்படி இருந்தது?

மஹேஷ் ராகவன் : துபாயில் ஒரு பெரிய இந்திய சமுகம் இருக்கிறது. அதுவும், நான் வளர்ந்து கொண்டிருந்த போது நுண்கலைகளை வளர்ப்பதற்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நிறைய இந்திய கர்நாடக இசைக் கச்சேரிகளில் பங்கேற்கவும், சின்ன வயதிலேயே திறமையான ஆசிரியர்களுக்கு கீழ் படிக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம். இந்தியா அளவு படிப்பின் மீது கவனம் செலுத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்பதால், சின்ன வயதில் எனக்கு இசையோடு நிறைய நேரம் செலவிட முடிந்தது. என்னுடைய பெற்றோர்கள் இந்த பயணம் முழுதுமே எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.

கேள்வி : உங்கள் இசையில் டெக் இன்ஃப்யூஷன் நடந்தது எப்படி ?

மஹேஷ் ராகவன் : எனக்கு எப்போதுமே தொழில்நுட்பம் ஆச்சரியமூட்டும் காரியமாகவே இருந்திருக்கிற்து. ஆனால், ம்யூசிக் டெக்னாலஜி மற்றும் ஃப்யூஷன் இசை மீதான ஆர்வம் உருவானது கல்லூரிக் காலத்தில் தான். என்னைச் சுற்றி நிறைய எலக்ட்ரானிக் இசையும், தொழில்நுட்பமும் இருந்ததால், அதில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு எக்ஸ்பெரிமெண்ட் செய்து பார்க்க வேண்டும் என நினைத்தேன். இப்படி நான் செய்யும் பரிசோதனைகளை எல்லாம் ஒரு யூட்யூப் சேனலில் வெளியிட வேண்டும் என நான்கு வருடங்களுக்கு முன் நினைத்தேன் - அப்படித் தான் இதெல்லாம் தொடங்கியது.

கேள்வி : கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானி இசையிலும் டெக் சப்தங்களை அறிமுகம் செய்வதால் அவை புதுப்பிக்கப்படுகிறது, அதனால் இளைஞர்கள் கவரப்படுவார்கள் என்று உணர்கிறீர்களா?

மஹேஷ் ராகவன் : இந்திய கர்நாடக இசை எப்போதும் தன்னை புதுப்பித்துக் கொண்டே தான் இருக்கிறது, புது இசை வாத்தியங்கள் அறிமுகமாகிக் கொண்டே தான் இருக்கின்றன. இதில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது இசையை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக்குவதாக இருந்தது. ஃப்யூசன் இசை நிச்சயம் இளைஞர்களோடு ஒன்றிப் போவதாகவே இருக்கும், மேலும், சுத்தமான கர்நாடக இசைக்கான அறிமுகமாகவும் இருக்கும்.

கேள்வி : கர்நாடக சங்கீதத்தின் நுண்ணிய அழகியலை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு தொழில்நுட்பம் உதவுகிறதா? அது இசையை இன்னமும் வளமாக்குகிறதா?

மஹேஷ் ராகவன் : அப்படிச் சொல்ல முடியாது; தொடர்ந்து பயிற்சி செய்யும் போது தான் இசையை நன்றாக புரிந்து கொள்ள முடியும். தொழில்நுட்பம் இசையை புது புது விதங்களில் வழங்க உதவும், அவ்வளவு தான். முழுமையாக இசையை ரசிக்க வேண்டுமென்றால், ஓரளவு ஞானம் நிச்சயம் வேண்டுமென நான் நினைக்கிறேன்.

கேள்வி : இந்த இசை வடிவம், இசையிலிருந்து பாரம்பரியத்தை நீக்குகிறது எனும் விமர்சகர்களுக்கு என்ன சொல்வீர்கள்?

மஹேஷ் ராகவன் : பாரம்பரியம் நிலையானது. பாரம்பரியம் இசையில் மட்டும் தான் இருக்கிறது, அது வழங்கப்படும் விதங்களில் இல்லை என்று நான் நம்புகிறேன். கர்நாடக இசை வழங்கப்படும் விதங்கள் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. உதாரணமாக, இன்று கர்நாடக இசைக் கச்சேரிகளில் இடம்பெறும் வயலின், இந்திய இசைக்கருவியே கிடையாது. இந்திய கர்நாடக இசையை அதன் தூய்மையான வடிவில் எடுத்துச் செல்ல நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் அதை பிரமாதமாகவும் செய்கிறார்கள்.

ஆனால், இந்திய கர்நாடக இசையில் நாட்டம் இல்லாதவர்களுக்கு அதில் இருக்கும் சுவாரசியத்தை உணர்த்த வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். இளைஞர்களுக்கு தொடர்புடைய வகையில் நான் அதை வழங்க நினைக்கிறேன். அது சுத்தமான கர்நாடக இசைக்குள் அவர்கள் நுழைய ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும்.

கேள்வி : ஹாரி பாட்டர் அல்லது கேம் ஆஃப் த்ரோன்ஸ் தீம் இசையை வைத்து கவர் வீடியோ எப்படி வடிவமைக்கிறீர்கள்?

மஹேஷ் ராகவன் : இந்த மாதிரியான ட்ராக்குகளில் வேலை செய்யும் போது, இசையை தனித்தனி பகுதிகளாக பிரிப்பதில் இருந்து தான் தொடங்குவேன். அப்படி ஒவ்வொரு பாகங்களாக பிரித்த பிறகு, ராகத்தின் அடிப்படையில் இந்திய கர்நாடக வடிவில் எழுதி விடுவேன். மெலடி சரியாக அமைந்தவுடன், இந்திய கர்நாடக இசைக்கருவிகளை வைத்து மீதியை வடிவமைப்பேன்.

கேள்வி : நிறைய இசைக்கலைஞர்களோடும் இணைந்து வேலை செய்கிறீர்களே..

மஹேஷ் ராகவன் : சக கலைஞர்களோடு சேர்ந்து வேலை செய்வது எனக்கு சிறிய காலத்திலேயே நிறைய கற்றுக் கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு இசைக்கலைஞரிடமும் என்னிடம் இருப்பதை விட வித்தியாசமான ஐடியாக்களும், திறமைகளும், அனுபவங்களும் இருக்கின்றன. அவர்களோடு கலந்து உரையாடுவதனால், ஒரே யோசனையை எப்படி பலர் பல வகையில் வழங்குகிறார்கள் என்பதை பார்க்கவும், படிக்கவும் முடிகிறது. கொலாபரேஷன் என்பது எனக்கு அடிப்படையில் புது விஷயங்களை கற்றுக் கொள்வதும், புது நண்பர்களை உண்டாக்குவதும் தான்.

கேள்வி : தனிப்பட்ட முறையில், உங்களுக்கு எந்த மாதிரியான இசை கேட்பது பிடிக்கும்? உங்களுக்கு பிடித்த பாடகர்கள் யாரெல்லாம்?

மஹேஷ் ராகவன் : பெரும்பாலும் நான் கேட்பது சுத்தமான கர்நாடக இசை தான். நான் எப்போதுமே டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் ரசிகன். 

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்னேஹா

Related Stories

Stories by YS TEAM TAMIL