இக்கால நிறுவன தலைவர்களுக்குத்  தேவைப்படும் 10 'புதிய' பண்புகள்!

1

ஒரு தொழில்முனைவில் அல்லது மற்ற பணியிடங்களில், தலைமைப் பொறுப்பில் நீங்கள் இருப்பின், புதிய தலைமுறை நபர்களோடு நீங்கள் பணிபுரிய வேண்டிய கட்டாயம் இருக்கும். அவர்களின் எதிர்பார்ப்புகள் எப்போதும் உச்சத்தில் இருக்கும். அப்படி இருக்கையில் அவர்களுக்கு ஏற்றவாறு அதே சமயம் அவர்களிடம் வேலை வாங்கும் விதமாகவும் எப்படி நீங்கள் செயலாற்ற முடியும்? அதற்கு தேவையான பண்புகள் யாவை?

டாவோஸ்சில் , உலக பொருளாதார மன்றத்தில் பேசிய அலிபாபா நிறுவனர் “ஜாக் மா” அவரது நிறுவன ஊழியர்கள் EQ, IQ, LQ ஆகியவற்றின் இடையே சரியான சமநிலையை கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். உணர்ச்சி, நுண்ணறிவு, மற்றும் அன்பு ஆகிய மூன்றின் குறியீடுகளே அவர் கூறியது. அந்த சமநிலை தான் அவரது நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணம் எனவும் கூறினார். மேலும் இந்த காரணத்தினால் தான் பெண்கள் தனது நிறுவனத்தில் சிறந்த தலைவர்களாக இருகின்றனர் என்றும் கூறினார்.

“சமநிலையை பொறுத்தவரை பெண்கள் சிறந்தவர்கள். உங்கள் நிறுவனம் வெற்றி பெற வேண்டும் என நீங்கள் நினைத்தால், அறிவாற்றலோடும், அக்கறையோடும் உங்கள் நிறுவனம் இயங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், பெண்கள் தான் சிறந்தவர்கள்,” என்றார் அவர்.

பல ஆய்வுகளின் முடிவுகள் தற்போது கூறுவது என்னவென்றால், தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எவ்வாறு இருத்தல் அவசியம் என்ற பிம்பம் சிறிது சிறிதாக மாறிவருகிறதாம். முன்பை போன்று குறிக்கோளை நோக்கியே நகர்தல், எப்போதும் வேலையில் ஆக்ரோஷமாக இருத்தல் ஆகியவை மிகவும் பழையன ஆகியுள்ளன. தற்போது தலைமைப் பொறுப்பில் உள்ளவரிடம் இருக்கவேண்டிய பண்புகள் பறந்து விரிந்துள்ளன. மேலும் ஒரு தலைவர் உணர்வுசார் நுண்ணறிவையும் வெளிப்படுத்தவேண்டிய அவசியம் தற்போது உள்ளது.

“பணியிடத்தின் விதிகள் தற்போது மாறி வருகின்றது. பணியாளர்களை மதிப்பிடும் முறை மாறியுள்ளது. நீங்கள் எவ்வளவு திறமையுள்ளவர் என்பது மட்டுமல்ல, உங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதும் தற்போது கவனிக்கப்படுகின்றது,” என்கிறார் நடத்தை சார் அறிவியல் வல்லுநர் டானியல் கோல்மன்.

இது தொடர்பாக கான் பெர்ரி இன்ஸ்ட்டிடுட் வெளியிட்ட அறிக்கையான ’தி பவர் ஆப் எல் : தி சாப்ட் ஸ்க்கில்ஸ் தி ஷார்ப்பஸ்ட் லீடர்ஸ் யூஸ்’ கூறுவது நவீன யுகத்தின் தலைவர்களிடம் இந்த பண்புகள் கட்டாயம் இருக்கவேண்டும், அவர்கள் அதனை கண்டிப்பாக உபயோகிக்க வேண்டும் என்பதே.

உங்களுக்கான பண்புகள் :

1. உங்கள் உணர்வுகளை நன்கு அறிந்துவைத்திருத்தல் : இருக்க வேண்டிய பண்புகளின் பட்டியலில் முதலிடம் மட்டுமல்ல, சிறந்த தலைவராக வளர முதல் படியும் இதுவே. உங்கள் ஆழ்மனதோடு ஒரு தொடர்பில் இருத்தல், நீங்கள் யார், உங்களின் குணநலன்கள் என்ன என்பதை அறிந்திருப்பது அவசியம். உங்களின் பலம் பலவீனம் அனைத்தையும் தெரிந்திருப்பது முக்கியம்.

2. உணர்வுகள் உங்கள் கட்டுக்குள் இருத்தல் : அந்த அறிக்கையின் படி சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருந்தாலும், உங்கள் உணர்வுகளை உங்கள் குறிக்கோளை எட்டும் விதம் கட்டுக்குள் வைத்திருப்பது. தன்னை நன்கு அறிந்த ஒரு நபரால்,எந்த சூழ்நிலையிலும் பொறுமை காக்க இயலும். உணர்வுகளை கட்டுக்குள் வைக்க இயலும். அந்த வழியில் நேர்மறையான உணர்வுகளை பயன்படுத்தவும், எதிர்மறையான எண்ணங்களை ஒதுக்கவும் இயலும்.

3. நேர்மறையான சிந்தனை : இந்த பண்பை, எந்த நிலையிலும் மக்களிடம் உள்ள நேர்மையான விஷயங்களை காணுதல் என கூறுகின்றது. அவ்வாறு இயங்கும் பொழுது தடைகளை தாண்டி பின்னடைவுகளை தகர்க்க இயலும் என்கிறது. உங்கள் அணி சிறப்பாக இயங்க, அவர்களால் இயலும் என்ற எண்ணத்தை அவர்களிடம் விதைத்தல் அவசியம். மேலும் அவர்கள் வெற்றிபெற, கடினமான சூழ்நிலைகளில் அவர்களை சரியான வழியில் நடத்துதல் அவசியம். எந்த அளவிற்கு உங்கள் எதிர்மறை எண்ணங்கள் அவர்களை பாதிக்குமோ அதே அளவு உங்கள் நேர்மறையான எண்ணங்கள் அவர்களை ஊக்குவிக்கும். வெற்றி பெற முதல் வழி முடியும் என்று நம்புவதே ஆகும். எனவே உங்கள் அணியினரை அவ்வாறு நம்பவைப்பது அவசியம்.

4. சூழ்நிலைக்கு தக்கவாறு வளைந்து கொடுப்பது : கான் பெர்ரி அறிக்கையை பொறுத்தவரை மாற்றத்திற்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்து செல்லுதல் அவசியம். இரும்புக்கரம் கொண்டு, தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று தலைவர்கள் நடக்கும் முறை கடந்தகாலம் ஆகிவிட்டது. எனவே பெருநிறுவன சூழலில் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது மற்றும் பல்வேறு யோசனைகளை ஒப்புகொள்வதும், அவற்றை பரிசீளிப்பதும் அவசியமாகும். உங்கள் எண்ணங்களுக்கு மாற்றான கருத்துகளையும் சரியாக கையாள்வது அவசியமாகும்.

அணியினருக்காக உங்களிடம் இருக்கவேண்டிய பண்புகள் :

5. மற்றவர்கள் நிலையில் இருந்து அவர்களை அறிதல் : மற்றவர்கள் நிலை என்ன. அவர்கள் உள்ளம் நினைப்பது என்ன, அவர்கள் வேண்டுவது என்ன என்று அறிவது என்று அறிக்கை இந்த பண்பினை விவரிக்கின்றது. தற்போது அதிகமாக உள்ள புதிய தலைமுறை தங்கள் தலைவரிடம் எதிர்பார்க்கும் ஒன்றாக இந்த பண்பினை கூறுகிறது. வேலையில் இருக்கும் ஏற்றத்தைக் காட்டிலும், அவர்கள் கருத்துகளை கேட்டறிவது, அவர்களுக்கான மதிப்பினை அளிப்பது, இவை அனைத்தையும் அவர்களின் வேலைமூலம் கிடைக்கவேண்டும் என கருதுகின்றனர்.

6. பணியாளர்களை பற்றிய விழிப்புணர்வு : நிறுவனத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரிவோரை பற்றிய புரிதல் உங்களுக்கு அவசியம். அவர்களில் தலைமை பண்புகள் நிறைந்தவர் யார், வழிநடத்துவது யார், பின்பற்றுவது யார், யார் யாரோடு நன்கு பணியாற்றுவார்கள் ஆகியவற்றை அறிந்து வைத்திருப்பது அவசியம். மேலும் அவரவர் பலத்திற்கு ஏற்றவாறு அவர்கள் பணிபுரிவதை உறுதி செய்தல் அவசியம். மேலும் அவர்கள், வேலையில் பரிசோதித்து பார்க்க விரும்பினால் அதற்கும் இடமளிப்பது அவசியம். அந்த வகையில் அவர்கள் வளர்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படும்.

அணியோடு உங்கள் உறவு :

7. அணியிடம் நேர்மறையான ஒரு தாக்கத்தை உருவாக்குதல் : உங்கள் அணியில் உள்ளோருக்கு ஒரு வழிகாட்டியாக, தேவையான தருணங்களில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குபவராக, அவர்களுக்கு தெரியாத விஷயங்களில் பயிற்சி வழங்குபவராக இருத்தலை முக்கிய பண்பாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தற்காலத்தில் தலைவர் என்பவர் ஆளுமை திறன்கொண்டவராக மட்டும் இருந்தால் போதாது. அவர்கள் செல்லும் பாதையில் அவர்கள் செல்லும் வேகத்தில் அணியில் உள்ள அனைவரையும் அழைத்து செல்லும் பண்பு அவசியம்.

8. முரண்பாட்டு மேலாண்மை : மிகவும் சிக்கலான தருணங்களில், லாவகமாக அணியில் உள்ள முரண்பாட்டை வெளியில் கொணர்ந்து, அவற்றை தீர்த்து வைக்கவேண்டும். முக்கியமாக இப்படிப்பட்ட சூழல்களை கையாளுகையில், எவர் பக்கமும் சாயவேண்டாம். அனைவரின் கருத்தையும் கேட்ட பின்பு நடுநிலையாக ஒரு முடிவு எடுக்கவும். அதன் பிறகு உங்கள் அணியில் ஒற்றுமை மற்றும் அமைதி நிலவுவதை உறுதி செய்யவும். எவர் ஒருவரும் தனித்து விடப்பட்டது போன்று உணர்தல் கூடாது. அவர்கள் நலனும் காக்கப்பட்டதாக உணரவேண்டும்.

9. டீம் பிளேயராக இருப்பது அவசியம் : அணியின் நோக்கத்திற்காக மற்றவர்களோடு இணைந்து செயலாற்றும் திறன் அவசியம். ஒரு தலைவராக அல்லாது, குழுவில் ஒருவராக பணியாற்றுதல் என்பதே அவசியம். வெளிப்படையாக உங்கள் ஆளுமை வெளிப்படாது இருத்தல் அவசியம். என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதை விட, அவர்கள் செய்வதை மேலும் மேம்படுத்த முயல்வது அவசியம். நீங்கள் உருவாக்கும் வெற்றியாளர்களை பொறுத்து, ஒரு தலைவராக உங்கள் வெற்றி தீர்மானிக்கப்படும். எனவே மற்றவர்களை வழிநடத்துவது நீங்கள் பணியாற்றுவதை விடவும் அவசியம்.

10. உத்வேகம் அளிக்கும் ஓர் தலைவன் : வேலை வாங்குவது மட்டும் அல்லாது, பணி புரிவோருக்கு உத்வேகம் அளிக்கும் ஒருவராக இருத்தல் அவசியம். மேலும் எவ்வாறு உழைக்க இயலும் என்பதை அவர்கள் எடுத்துக்காட்டும் ஒருவராக இருப்பது அவசியம். உங்களை ஒரு முன்னோடியாக அவர்கள் கருத வேண்டும். அவர்களை மேம்படுத்தியது நீங்கள் என்று அவர்கள் கூறும் அளவிற்கு உங்கள் செயல்பாடு இருத்தல் அவசியம்.

கட்டுரையாளர்  : பின்ஜல் ஷா |தமிழில்  : கெளதம் தவமணி