பயனர்களை அசர வைக்கும் 'வாட்ஸ் அப்'ன் புதிய அப்டேட்கள்!

0

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்பது போல, வாட்ஸ் அப்பிற்கு விளம்பரம் தேவையில்லை. ஃபேஸ்புக், டிவிட்டர் என எத்தனையோ சமூகவலைதளங்கள் இருந்தாலும், மெசேஜ் செயலியான வாட்ஸ் அப்பின் பயனாளிகள் அதிகம். வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ள அதன் எளிமை தான் அதற்குக் காரணம்.

வாட்ஸ் அப் நிறுவனமும் தனது பயனாளிகளை மேலும் கவரும் வகையில், ஸ்டேட்டஸ் வசதி, பணப்பரிவர்த்தனை வசதி, மெசேஜ் டெலிட் செய்யும் வசதி அடிக்கடி புதிய வசதிகளை அறிமுகப் படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது மேலும் சில புதிய வசதிகளை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது. அவற்றை பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ளலாமா...

சேமிக்காத எண்களுக்கும் குறுஞ்செய்தி:

இதுவரை மொபைல் போனில் சேமிக்கப்பட்ட எண்களுக்கு மட்டுமே வாட்ஸ் அப் வழியாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருந்தது. ஆனால் தற்போது இதனை மாற்றியுள்ள வாட்ஸ் அப் நிறுவனம், இனி மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரவுசரில் 'api.whatsapp.com/send?phone= என டைப் செய்து பின்னர், தொலைபேசி எண்ணை டைப் செய்வதன் மூலம் எண்ணை சேமிக்காமலேயே செய்தி அனுப்ப முடியும்.

குழுவாக வீடியோ அழைப்பு:

சாதாரண அழைப்புகள் போல் வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகளிலும் குழுவாக இணைந்து அழைக்கும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த வசதி குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

டெலிட் ஆன போட்டோ:

இதேபோன்று வாட்ஸ் அப் மீடியாக்களில் 30 நாட்களுக்குள் டெலிட் செய்யப்பட்ட வீடியோ அல்லது புகைப்படத்தை மீண்டும் பதிவறக்கம் செய்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

ஃபேஸ்புக் வீடியோ இனி வாட்ஸ் அப்பில்:

ஃபேஸ்புக்கும் வாட்ஸ் அப்பும் ஒரே நிறுவனம் என்றாலும், தொழில்நுட்ப ரீதியில் இரண்டிற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வாட்ஸ் அப் செயலிலேயே காண்பதற்கான வசதியும் புதிதாக வாட்ஸ் அப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிள் ஐ-போன் செயலியில் மட்டுமே இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஐபோன் பயனாளர்களுக்கு:

இதேபோன்று ஐ-போன் பயனாளர்களுக்கான புதிய வசதியாக வாட்ஸ் அப்பில் பதிவிறக்கம் செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனின் கேலரியிலிருந்து மறைக்கவும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

பணம் அனுப்பும் வசதி:

வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பும் வசதியை நீண்ட காலமாக அதன் வாடிக்கையாளர்கள் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ் அப் பைல்ட் வெர்சனில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி சோதனை முறையல் கொண்டுவரப்பட்டது. இதில் 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்தனர்.

இந்நிலையில், தற்போது ஆக்சிஸ், ஐசிஐசஐ, ஹெச்டிஎப்சி ஆகிய மூன்று வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ் அப் நிறுவனம் தனது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை தொடங்கவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த சேவை அறிமுகபடுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, விரைவில் எஸ்பிஐ வங்கியும் இதில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.