ஊரக வளர்ச்சியை சாத்தியமாக்கும் சென்னை 'சமுன்னதி' சமூக நிறுவனம்

0

உழவர்களுக்கு உயிரூட்டும் சென்னை நிறுவனம்

தினசரி மூன்று வேளை தவறாமல் உண்ணும் நாம், அதை உற்பத்தி செய்ய கடினமாக உழைக்கும் விவசாயிகளை, அன்றாடம் எண்ணிப் பார்ப்பதில்லை என்பதே நிதர்சன உண்மை. உழைப்பே உயர்வு தரும் என்ற கூற்று, இவர்களுக்கு பெரும்பாலும் பொய்த்தே போகின்றன.

சமூக நிறுவனங்கள் பெருகி வரும் இவ்வேளையில் விவசாயிகளுக்கு உதவி புரிய பல தொழில்முனைவர்களும் பெருகி வருவது ஆறுதலான விஷயம்.

சென்னையைச் சேர்ந்த "சமுன்னதி" Samunnati நிறுவனம், வேளாண் அமைப்புச் சங்கிலியில் பெரும் பங்கு வகித்து உழவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான அனில்குமார் அவர்களிடம் தமிழ் யுவர்ஸ்டோரி இதுபற்றி உரையாடியது.

சமுன்னதி உருவானது பற்றி

பல்வேறு நிலைகளில் வங்கியாளராக பணிபுரிந்த அனுபவம், அதிலும் கிராமப்புற கிளைகளில் பணி புரியும் பொழுது அங்கிருக்கும் நிதர்சனங்களும், அங்கிருக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சூழலையும் புரிந்து கொள்ள உதவியது. 2004 ஆம் ஆண்டு மணிலாவில் மேலாண்மையில் முதுகலை படிப்பை மேற்கொண்டேன். அப்பொழுது தான் 'எல்லோரையும் உள்ளடக்கிய நிதி' (inclusive finance) பற்றி மேலும் அறிந்த கொள்ள வாய்ப்பு கிட்டியது. படிப்பின் கடைசி பகுதியாக இடம் பெற்ற 'தூண்டுதலாக உள்ள முன்னோடிகள்' என்ற கருத்தரங்கத்தில், சக மனிதர்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் மதிப்பு சேர்த்த தலைவர்கள் பலர் பங்கு பெற்றனர். கிராமீன் வங்கியின் நிறுவனர் முஹம்மத் யூனுஸ் அவர்களின் சேவையையும் பயணத்தையும் கேட்க நேரிட்டது. இது பெரும் உந்துதலாகவே அமைந்தது. ஒரு வங்கியாளராக என்னுடைய அனுபவத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் அப்போது எழுந்தது. இதுவே சமுன்னதி உருவாக மூலக் காரணம்.

கிராமப்புற மேம்பாடு

கிராமப்புற குடும்பங்களுக்கு தங்களது தயாரிப்புகளை உற்பத்தி செய்ய தக்க தருணத்தில் போதுமான நிதி ஆதாரத்தை அமைத்து கொடுத்தல், தயாரிப்புகளை மேம்படுத்த அறிவுரைகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றை மேற்கொள்கிறோம். தற்பொழுது செயல்படும் விதத்தை மேம்படுத்தி இந்தத் தயாரிப்புச் சங்கிலி தொடரில் உள்ள ஒவ்வொருவரும் பயன் பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

தற்பொழுது செயலில் உள்ளவை தனித்தனியாக இயங்குகின்றன, இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து மதிப்பு கூட்டுவதே இவர்களின் தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என்கிறார் அனில்.

நிதி நடுவர்களாக, சந்தை இணைப்பை மேம்படுத்துபவர்களாக, ஒருங்கிணைப்பாளர்களாக, ஆலோசனை வழங்குபவர்களாக என்று சங்கிலித் தொடரின் முக்கிய அம்சங்களில் சமுன்னதி செயல்படுகிறது.

சவால்கள்

வேளாண்மை சங்கிலித் தொடர் பற்றிய புரிதலே அடிப்படை சவாலாக உள்ளது. இந்த கருத்துப்படிவம் நம் நாட்டிற்கு புதிது. ஆதலால் ஒவ்வொரு கட்ட வடிவமைப்பிலும் மிகுந்த இடைவெளி உள்ளது. தற்போது இதைப் பற்றிய புரிதல் வளர்ந்து வருகிறது.

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், சித்தூர் ஆகிய மாவட்டங்களிலும் குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திலும் தற்பொழுது சமுன்னதி இயங்கி வருகிறது. இது வரை 2800 பால் பண்ணை விவசாயிகளுக்கு தங்களின் சேவையை வழங்கியுள்ள இந்நிறுவனம் மஞ்சள், காய் கனி என்று பிற பொருட்களிலும் தங்களின் சேவையை விரிவு படுத்தவுள்ளது.

இது போன்ற மேலும் பல முயற்சிகள் மேலோங்கி, உழவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற தக்க சன்மானம் பெறும் அந்த நாள் விரைவில் அமைய வேண்டும் என்பதே நம் அவா.

தமிழ் யுவர்ஸ்டோரி மீடியா பார்ட்னராக உள்ள, நாளை நடைப்பெறவுள்ள 'அன்கன்வென்ஷன்' மாநாட்டில் தன் அனுபவத்தை சமுன்னதி நிறுவனர் அனில்குமார் பங்கேற்பாளர்களுடன் பகிரவுள்ளார்.

இம்மாநாடு சென்னை அடையாறு பார்க் க்ரொவ்ன் ப்ளாசாவில் ஜனவரி 30 ஆம் தேதி நடக்கிறது.