தாலி கட்டிய கையோடு மணக் கோலத்தில் ரத்த தானம் செய்த புதுச்சேரி தம்பதி!

புதுச்சேரியில் நடந்த திருமணம் ஒன்றில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணமக்கள் திருமணம் முடிந்த கையோடு ரத்த தானம் செய்து அந்த சிறப்பான நாளை பயனுள்ள நாளாக மாற்றினர். 

0

புதுச்சேரியில் நடந்த திருமணம் ஒன்றில் தாலி கட்டிய கையோடு மணமக்கள் ரத்த தானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

படஉதவி : நன்றி தமிழ் சமயம்
படஉதவி : நன்றி தமிழ் சமயம்

பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம், நல்ல பழக்கம் இவை அனைத்தும் நம் தலைமுறையோடு முற்றுபுள்ளி கண்டுவிடுமோ என்ற அச்சம் தற்போது 60 வயதில் இருக்கும் பெற்றோரின் கவலையாக உள்ளது. ட்ரெண்ட், பேஷன் என்று அதிவேகமாக சுழலும் பூமியில் மாற்றங்கள் சாதாரணம் என்று சொல்பவர்களும் உண்டு, ஆனால் நம் அடையாளத்தை தொலைத்துவிட்ட மாற்றம் தேவைதானா என்பதைத் தான் பெற்றோர் கேட்கின்றனர்.

நம்மைப் போன்றே அடுத்து வரும் தலைமுறையும் இருக்க வேண்டும் என்று பலர் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் செய்யும் பிரத்யேகமான மெனக்கெடல்கள் அவற்றை நினைவூட்டுகின்றன. பிளாஸ்டிக் இல்லா திருமணம், முற்றிலும் பாரம்பரிய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்களை மண்டபத்தில் நிரப்பி சொந்த மண்ணிற்கே சென்று விட்ட உணர்வை ஏற்படுத்தும் திருமணம் என்று தற்கால திருமணங்கள் இருவீட்டாருக்கு உறவை ஏற்படுத்தும் சுபகாரியம் என்ற அளவோடு நின்றுவிடாமல் சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துப்பவையாக மாறி வருகின்றன.

புதுச்சேரியில் நடந்து முடிந்த திருமணமும் அப்படித் தான் இன்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகன் கங்காதரன் மற்றும் ஸ்ரீதர் என்பவரின் மகள் அழகம்மைக்கும் மொரட்டாண்டி அருகே தனியார் மண்டபத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

சுற்றம் சூழ மணமகன், மணமகளுக்கு தாலி கட்டிய கையோடு உறவுகளின் பரிசுப் பொருட்களை வாங்கவோ அல்லது எஞ்சிய சடங்குகளை செய்யவோ மணமக்கள் தயாராவது தான் வழக்கம். ஆனால் இங்கு நடந்ததோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

தாலி கட்டிய கையோடு மணமக்கள் இருவரும் கைகோர்த்து கொண்டு மண்டப வாசலில் நின்ற ரத்ததான கொடை பேருந்துக்குச் சென்று மணக் கோலத்திலேயே ரத்ததானம் செய்தனர்.

ஸ்ரீதரின் நண்பர் பிரபு உயிர்த்துளி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். மகளின் திருமண பத்திரிக்கையை கொடுக்கச் சென்ற ஸ்ரீதரிடம் பிரபு திருமண மண்டப வாசலில் ரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாமை போடலாம் என்று கூறி இருக்கிறார். இதற்கு ஸ்ரீதரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். பெயர், புகழுக்காக என்று திருமணத்தில் ரத்த தான விழிப்புணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்யாமல் மணமக்களையும் ரத்த தானம் செய்ய வைத்துள்ளார் ஸ்ரீதர்.

ரத்த தானம் செய்வது உடலுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது என்று மணமகன் கங்காதரனும், ஒரு யூனிட் ரத்தம் 4 உயிர்களை காப்பாற்றுகிறது எனவே ரத்ததானம் செய்யுங்கள் என்று மணமகள் அழகம்மையும் தெரிவித்துள்ளனர். 

மணக்கோலத்தில் இருந்த மணமக்களே ரத்ததானம் செய்துவிட்ட போது மற்றவர்களுக்கு சொல்லவா வேண்டும். திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் சுமார் 50 பேர் ரத்த தானம் செய்துவிட்டுச் சென்றனர்.

படஉதவி : நன்றி புதிய தலைமுறை
படஉதவி : நன்றி புதிய தலைமுறை

குலம் காக்க குருதி கொடுப்போம் இதுவே என் மகளின் திருமணத்தில் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கான காரணம் என்று நெகிழ்கிறார் ஸ்ரீதர். திருமணத்தன்று ரத்த தானம் செய்ததன் மூலம் தன்னுடைய மகளும், மருமகனும் நாட்டு மக்களுக்கு நல்லதோர் சேதியைச் சொல்லியுள்ளனர் என்றும் பெருமைபட்டுக் கொள்கிறார் ஸ்ரீதர். 

திருமணத்தில் ரத்த தான முகாம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம் வகுத்த பிரபுவின் உயிர்த்துளி அமைப்பு சுமார் 4500 லிட்டர் ரத்தத்தை தானமாக பெற்று ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்தத் திருமணம் மணமக்களுக்கு மட்டுமே மறக்க முடியாத நாளாக அமையவில்லை, மணவிழாவில் பங்கேற்ற அனைவருக்குமே மறக்க முடியாத நாளாக மாறியது. ஆடம்பரத்திற்காக நடக்கும் அநாவசிய திருமணமாக இல்லாமல் தற்காலத் திருமணங்கள் சமூக நலன் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளாக இருப்பது நாளைய சிறந்த தலைமுறைக்கான ஆணிவேர்கள். 

Related Stories

Stories by Priyadarshini