பள்ளி கல்விக்கான கடனுதவி வழங்கும் சென்னை 'ஷிக்க்ஷா' நிறுவனம்!

இந்தியாவிலயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான கடனுதவி திட்டம் இது!

0

கல்வி சார்ந்த துறையில் தொழில்முனையும் ஆர்வம், அதே சமயம் புதுமையாக மாறுபட்ட சேவையை வழங்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு, கல்விக் கடனில் உள்ள இடர்பாடுகள், இவற்றை துல்லியமாக கண்டறிந்த திறன் - இதுவே ஷிக்க்ஷா ஃபினான்ஸ் (Shiksha Finance) நிறுவனம் உருவாகக் காரணம். தனது புதுமையான புரட்சிகரமான திட்டத்தால் நாட்டிலேயே இத்தகைய சேவையை வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையும் இந்நிறுவனத்தையே சாறும்.

இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளிக் கல்விக்கென கடனுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள சென்னையை சேர்ந்த ஷிக்க்ஷா நிறுவனத்தின் நிறுவனர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் ஜேகப் ஆகிய இருவரிடமும் தமிழ் யுவர்ஸ்டோரி உரையாடியது...

ஷிக்க்ஷாவின் தொடக்கம்...

ராமகிருஷ்ணன் மற்றும் ஜேகப் ஆகிய இருவருமே பட்டய கணக்காளர்கள் (CA) , ஒன்றாக பணி புரிந்தவர்கள். கார்ப்பரேட் பணியை விடுத்து தொழில்முனைய வேண்டும் என்று எண்ணிய பொழுது இருவருமே கல்வி சார்ந்த துறையில் ஈடுபடவே விரும்பினர். அதற்கான முயற்சிகளை தொடங்கிய பொழுது, பிற நிறுவனங்கள் போல் அல்லாமல் புதிதாக ஏதேனும் முயற்சிக்க வேண்டும் என்று எண்ணினர்.

சென்னை மற்றும் சில நகரங்களில் இருக்கும் பள்ளிகளை விஜயம் செய்தனர். இது பற்றி ராமகிருஷ்ணன் கூறுகையில் "2013 ஆம் ஆண்டு தொழில்முனைவது பற்றி நானும் ஜேகப்பும் ஆலோசிக்க தொடங்கினோம். முதலில் பள்ளி தொடங்கவே எண்ணினோம், ஆனால் பள்ளிகள் நம் நாட்டில் ஏராளம் உள்ளன ஆகவே அதை சார்ந்த சேவை, அதே சமயம் மாற்றம் உண்டு பண்ணக் கூடிய சேவையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். எங்களின் ஆராய்ச்சிக்காக நிறைய பள்ளிகளை சந்தித்த பொழுது பள்ளிக் கட்டணம் உரிய நேரத்தில் கட்டுவது என்பது சவாலாக இருப்பதை அறிந்து கொண்டோம். "இதுவே ஷிக்க்ஷாவின் தொடக்கம். ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று அதன் கோட்பாடுகளுக்கு உட்பட்டு 2015 ஆம் ஆண்டு ஷிக்க்ஷா செயல் படத்தொடங்கியது.  

இவர்களின் இலக்கு நம் அக்கம்பக்கத்தில் உள்ள அங்கிகரிக்கப்பட்ட மெற்றிகுலஷன் பள்ளிகள் தான்.

கல்விக் கட்டண சுமை 

நடுத்தர மற்றும் கீழ்நிலை குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய சவால் தங்கள் குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கான கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்துதல் தான். வங்கி கடனில் இருக்கும் இடர்பாடுகளும், பொருளாதார ரீதியாக வங்கி மூலமாக கடன் பெற முடியாத சூழலில், பெரும்பாலும் இக்குடும்பங்கள் அதிக வட்டிக்கு கடன் பெற்றே இத்தேவையை நிறைவேற்ற முடிகிறது. மேலும் ஒரு குழந்தைக்கு மேல் இருந்தால், இந்த துயரை சொல்லத் தேவையில்லை. இந்த கடன் தேவையை பூர்த்தி செய்கிறது ஷிக்க்ஷா நிறுவனம்.

ஷிக்க்ஷா கடனுதவி இயங்கும் முறை

குழந்தைகளின் பெற்றோர்கள் கல்வி கடன் பெற வழிவகுக்கும் ஷிக்க்ஷா நிறுவனம் அவர்களுக்கு கல்வி கட்டணம், புத்தகக் கட்டணம், யுனிஃபார்ம், ஷூஸ் மற்றும் பேக்குகள் வாங்குவதற்கு கடனுதவி அளிக்கின்றனர். மேலும் ஒரு கல்வி ஆண்டிற்கு தேவையான கட்டணத்தில் 80% கடனுதவியாக அதிகபட்சம் தொகையான ரூபாய் 30,000 வரை ஒரு குழந்தைக்கு வழங்கப்படுகிறது. 6-10 மாதங்களுக்கு வழங்கப்படும் இக்கடனுதவிக்கான வட்டி விகிதம் ஒவ்வொருவரின் சூழ்நிலை பொருத்து வசூலிக்கப்படுகிறது. தேவையான ஆவணங்களை மட்டும் கொண்டு ,பெற்றோர்கள் சுலபான வழியில் ஷிக்க்ஷா நிறுவனத்திடம் இருந்து கடனுதவி பெறலாம்.

பள்ளியின் மூலமாக கடன் கிடைக்க வழி வகை

அரசு அங்கீகாரம் பெற்ற மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அந்த பள்ளியின் ஒப்புதலோடு அவர்கள் பரிந்துரைக்கும் பெற்றோர்களுக்கு கல்வி கட்டணத்தை விரைவாக திரும்ப செலுத்தக் கூடிய கடனாக அளிக்கிறது ஷிக்க்ஷா.

ஷிக்க்ஷா தற்போது சென்னையிலும், ஈரோட்டிலும் இந்த திட்டத்தை செயல் படுத்தி வருகிறது.

"நாங்கள் பார்த்த வரையில் பள்ளிகளிலும் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இது வரை நாங்கள் தந்துள்ள கடனை பெற்றோர்கள் மாதத் தவணையாக எந்த இடர்பாடும் இல்லாமல் செலுத்தி உள்ளார்கள். தங்களின் பிரதான தேவையை பூர்த்தி செய்வதால் மிகுந்த வரவேற்பு உள்ளது" என்கிறார் இந்நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் ஜேகப்.

சமூக நோக்கத்துடன் தொழில் முனையும் ஆர்வம்

"சமூக நோக்கத்துடன் தொழில்முனையவே விருப்பப்பட்டோம். அந்த வகையில் ஆட்டோ ஓட்டுனர் முதல் பல்வேறு சிறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகள், வீட்டு வேலை பார்க்கும் தாய்மார்கள் என பல பேருக்கும் இத்திட்டத்தின் மூலம் உதவ முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். " என்கின்றனர்.

பொருளாதார கஷ்டத்தை தாண்டி ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை அளிக்கவே எண்ணுகின்றனர். இதற்கு பணம் என்றுமே ஒரு தடையாக இருக்க கூடாது என்று கூறுகிறார்கள் ராமகிருஷ்ணன் மற்றும் ஜேகப். மேலும் கடனை சரியாக திரும்ப செலுத்தும் போது, அடுத்த வருடமும் கடன் பெற வாய்ப்பு உள்ளது.

பள்ளிகளுக்கும் கடனுதவி

பள்ளி மாணவர்களுக்கான கடனுதவி திட்டத்தை தவிர இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கும் கடனுதவி அளிக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தனியாரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகள் தங்களது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மைதானம் அமைக்க மற்றும் விரிவாக்கத்திற்கும் ஷிக்க்ஷா கடனுதவி அளிக்கிறது.

வருங்கால திட்டம்...

எங்களின் சேமிப்பு மற்றும் நண்பர்கள் மூலமாக பெறப்பட்ட மொத்தம் மூன்று கோடி விதை நிதியுடன் செயல்படத் தொடங்கினோம். இது வரை இருபத்தைந்து பள்ளிகளுக்கு மற்றும் நூற்றிருபது பெற்றோர்களுக்கும் கடனுதவி அளித்துள்ளோம்.

இந்நிதி முழுவதுமாக தற்போது தீர்ந்த நிலையில், ஆறு கோடி கடனாகவும் மற்றும் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் பங்குகள் மூலமாகவும் பெற பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிதியை டிசம்பர் மாத இறுதிக்குள் பெற்று விடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சென்னை, ஈரோடு தவிர மற்ற இடங்களிலும் எங்களின் திட்டத்தினை பலரும் பயன்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருப்பதால் விரைவில் பிற மையங்களுக்கும் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். எங்களால் முடிந்த அளவு பள்ளி கல்விக்கான தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களின் விருப்பம் என்கின்றனர் ராமகிருஷ்ணன் மற்றும் ஜேகப் ஒரு சேர...

இவர்களை பற்றி மேலும் அறிய: Shiksha Finance