ஓலாவில் ஓட்டுநராக இணைந்த முதல் திருநங்கை!

0

புவனேஷ்வரைச் சேர்ந்த எம்பிஏ முடித்த மேகனா சஹூ ஓலா நிறுவனத்தில் ஓட்டுநராக இணைந்த முதல் திருநங்கை ஆவார்.

28 வயதான மேகனா சஹூ பாலினம் சார்ந்த பிரச்சனைகளை வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. ஒரு புறம் திருநங்கை ஒருவரை சமூகம் ஏற்றுக்கொள்வது அத்தனை சுலபம் அல்ல. மற்றொரு புறம் அவர்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் இருக்கும் சிக்கல் காரணமாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற வசதிகளை அணுக இயலாமல் போய்விடும். இது ஒவ்வொரு திருநங்கைகளும் சந்திக்கும் போராட்டமாக இருப்பினும் மேகனா இந்த நிலையை மாற்றி தனது வெற்றிக்கதையை உருவாக்க தீர்மானித்தார்.

மனிதவளம் மற்றும் மார்கெட்டிங் பிரிவில் எம்பிஏ பட்டதாரியான மேகனா ஓலா நிறுவனத்தில் ஓட்டுநராக இணைந்துள்ள முதல் திருநங்கை ஆவார். இவர் தினமும் எட்டு மணி நேரம் பரபரப்பான சாலைகளில் வாகனத்தை ஓட்டி மாத வருமானமாக 30,000 ரூபாய் ஈட்டுவதாக ’டெக்கான் க்ரோனிக்கல்’ அறிக்கை தெரிவிக்கிறது. ஓலா நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு இவர் ஒரு மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு சக ஊழியர்கள் அவரது பாலினத்தை காரணம் காட்டி அவரிடம் பாரபட்சத்துடன் நடந்துகொண்டனர்.

”கௌரவமான வாழ்க்கை நடத்தத் தேவையான வருவாயை ஈட்டுவதற்கு என்னுடைய சக ஊழியர்களுக்கு கிடைத்த அதே வாய்ப்பினை பெறுவதற்கு நான் போராடினேன். ஓலா நிறுவனத்துடன் இணைந்து வாகனத்தை ஓட்டுவது எனக்கு சுதந்திரத்தையும் எனக்குத் தகுந்தவாறு பணிபுரியும் வாய்ப்பினையும் வழங்குகிறது. அத்துடன் மற்ற திருநங்கைகளும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவும் வாய்ப்புகள் வழங்கப்படவும் நான் உந்துதலாக இருக்கிறேன்,” என்றார்.

திருநங்கைகளுக்கு வர்த்தக ரீதியாக ஓட்டுநர் உரிமம் பெறுவதே போராட்டமாக இருக்கும் நாட்டில் ஒடிசாவின் உள்ளூர் சாலை போக்குவரத்து அலுவலகமும் போக்குவரத்துத் துறையும் மேகனாவிற்கு ஓட்டுநர் உரிமம் கிடைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஓட்டுநராக தனது அனுபவம் குறித்து மேகனா பகிர்ந்துகொள்கையில்,

”வாடிக்கையாளர்கள் என்னிடம் அன்புடன் நடந்து கொள்கின்றனர். குறிப்பாக பெண் பயணிகள் என்னுடைய வாகனத்தில் பாதுகாப்பாக உணர்கின்றனர். ஆண் பயணிகளுடனும் நான் எந்தவித சிரமங்களையும் சந்தித்ததில்லை,” என்றார்.

மேகனாவிடம் சொந்தமாக ஒரு ஸ்விஃப்ட் டிசையர் வாகனம் உள்ளது. அவர் கடந்த ஆண்டு பணி வாய்ப்பு அளிக்குமாறு ஓலா நிறுவனத்தை அணுகினார். அப்போதிருந்து இந்நிறுவனத்திற்கு பல விசாரணைகள் வந்து கொண்டிருப்பதாகவும் இத்தகைய வளர்ச்சி உற்சாகமளிப்பதாகவும் ஓலா தரப்பின் பிரதிநிதி குறிப்பிட்டார்.

மேகனா திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடும் ஆர்வலர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆறு வயது மகனும் உள்ளார். ஒடியா பதிப்பகத்திற்கு நிருபராகவும் பணியாற்றுவதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA