மனீஷா ரைசிங்கானி: தொழில்நுட்பத்தின் வெற்றிப் பாதையில்!

1

கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில், மார்க் ஸக்கர்பெர்கை (Mark Zuckerberg) உடனான சந்திப்பு தான், மனீஷா ரைசிங்கானியின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. மனீஷா ரைசிங்ஹானி, லாஜிநெக்ஸ்டின்(LogiNext) இணை நிறுவனர். அந்த சந்திப்பை நினைவு கூறுகையில், “மார்க், தன்னுடன் வேலை செய்யும் ஷெரில் சாண்ட்பெர்க் பற்றி பேசினார், ஷெரில் ‘பெண்களின் தலைமை’ப் பற்றி டெட்டில் (TED) உரையாற்றியதைப் பார்த்த பின்னர் எனக்குள் ஏற்பட்ட அந்த நெருப்பை உணர்ந்தேன்”.

மனீஷா லாஜிநெக்ஸ்ட் சொல்யூஷன்ஸ் (LogiNext solutions) நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு துறைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும், வணிகக் கூட்டங்கள், வாடிக்கையாளர் சந்திப்புகள், நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் போன்ற சமயங்களில், லாஜிநெக்ஸ்டின் ஆண் இணை நிறுவனர் தான் தொழில்நுட்பத் துறையை கவனிப்பதாக பலரும் நினைக்கின்றனர். இது போன்ற எண்ணங்கள் இந்த தொழில் வட்டத்தில் பொதுவானவை தான். கடின உழைப்பும், நிபுணத்துவமும் தேவைப்படும் பணியில் இருக்கும் மனீஷா, இதை போன்ற எண்ணங்கள் தன்னை ஊக்குவிப்பாகவே எடுத்துக் கொள்கிறார்.

மனீஷா, இரண்டு பெண்மணிகளை தன் முன்னுதாரணமாக கொண்டிருக்கிறார். அவர்கள், ஐ.பி.எம்-ன் சி.இ.ஓ கின்னி ரொமெட்டி(Ginni Rometty) மற்றும் ஷெரில் சாண்ட்பெர்க் (Sheryl Sandberg). மனீஷா, ஒரு இணை நிறுவனராக, பிறருக்கு உதாரணமாக் திகழும் வகையில், பல முயற்சிகளை செய்தும் கொண்டிருக்கிறார்.

மனீஷாவின் தன் தொழில்நுட்ப பயணம் மற்றும் தன் துறையில் எப்பொழுதும் முன்னணி இடத்தில் இருக்க எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி நம்மிடம் பகிர்கிறார்.

தொடக்க காலம்

ஒரு சாதாரண, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் எதுவும் இல்லாத வளர்ப்புமுறையின் காரணமாக, சவால்களை தேடிப் பிடித்து, தனக்கான பாதையை வடிவமைத்துள்ளார் மனீஷா. குடும்பத் தொழிலை எடுத்து நடத்தும் பொறுப்பில், வீட்டின் ‘மகன்’ என அழைக்கப்பட்ட மனீஷா, தன் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை மீறி கணக்கையும், தரவுகளையும் கையில் எடுத்து கொண்டார்.

மும்பை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு ‘மாஸ்டெக்’-ல் மென்பொருள் எஞ்சினியராக பணியில் சேர்ந்தார். சேர்ந்த ஆறு மாதத்திலேயே அது தனக்கான பாதை இல்லை என்பதை புரிந்து கொண்டார். 2009-ல் நடந்த ஆட்குறைப்பில்,வேலை இழந்த நூற்றுக்கணக்கானவர்களில் மனீஷாவும் ஒருவர்.

இந்த நிகழ்வுக்கு பிறகு, புதிதாய் எதையேனும் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கினார். தொழில்நுட்பத்தை முழுவீச்சில் பயன்படுத்தி, அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை அறிய, ஆராய உதவும் ஏதாவதொன்றை கையிலெடுக்க நினைத்தார். அதற்கான பதிலாக தகவல் அமைப்புகள்(Information systems) இருந்தது. கார்னெகி மெலன் பல்கலைகழகத்தில், தகவல் அமைப்பில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பிறகு, வார்னர் பிரதர்ஸில், ஐ-ட்யூன்ஸிற்கு தரவுகளை ஆராயும்(data analytics) பகுதியில் பணி புரிந்தார். இதை தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள ஐ.பி.எம்-ல் சில காலம் வேலை செய்தார்.

லாஜிநெக்ஸ்டின் மற்றொரு இணை நிறுவனர், த்ருவிலை (Dhruvil), 2010 ல் சந்தித்தார். இருப்பினும், 2013 ல், நியூயார்க்கில் , ஒரு காஃபி சந்திப்பில், லாஜிஸ்டிக்ஸில் இருக்கும் கஷ்டங்களையும் சிக்கல்களையும் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்த போது தான், அதற்கான பதில் “ பொருட்களின் இணையம்” என்று இருவருக்கும் புரிந்தது. அந்தக் கருத்தை மனதில் வைத்துக் கொண்டு, தங்களது முதல் தயாரிப்பை, அமெரிக்காவிலேயே வடிவமைக்க தொடங்கினார்கள். 2014-ன் தொடக்கத்தில் தான் மனீஷா இந்தியாவிற்கு திரும்பினார்.

தொழில்நுட்பத்துறையில் பெண்கள்

“தொழில்நுட்பத்துறையில் குறைவான பெண்கள் இருக்கும் பிரச்சனை அவர்கள் வடிகட்டப்படுவதில் இருந்து தொடங்குகிறது. பத்தாவது வரைக்கும், என நினைக்கிறேன், பெண்களுக்கும் ஆண்களுக்கு இருந்த சரிவிகிதம் அவ்வளவு மோசமாக இல்லை, ஆனால், பதினொன்றாவதில் நான் அறிவியலில் சேர்ந்த போதும், முதுநிலை படிப்பின் போதும் அந்த பாகுபாடு அதிகரித்தது. பள்ளியில் நாற்பது சதவிகிதம் இருந்த பெண்கள், இளநிலை பட்டத்தில் முப்பது சதவிகிதமாகவும், பின் முதுநிலைக் பட்டத்தில் இருபது சதவிகிதத்திற்கும் குறைவாக ஆனார்கள்.”

“இதற்கு முக்கியக் காரணம் பெண் குழந்தைகளுக்கு இள வயதில் சரியான வழிகாட்டுதலும், ஊக்குவிப்பும் இல்லாதது தான்”, எனக்கூறும், மனீஷா, “பெண்களுக்கு இருக்கும் அதிகமான சமூக எதிர்பார்ப்பு, ஆண்களுக்கு இல்லை” என்கிறார்.

சவால்கள்

“லாஜிஸ்டிக்ஸும், பி2பி-யும் (b2b- business to business) சந்திக்கும் புள்ளியில் நிறைய பெண்கள் இல்லை. இது ஒரு கடினமான துறை. ஆனால், இதில் பணி புரிவது என்னை உற்சாகப்படுத்துகிறது” என கூறும் மனீஷா, ஒற்றைப் பெண்ணாக, மற்ற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் அனைத்து சந்திப்புகளிலும் கலந்து கொள்வது குறைந்தபட்ச சவாலாக இருக்கிறது. ஆனால், நிறைய பெண்களை தலைமை பொறுப்பில் அதிகம் பார்க்க முடியாதது அதிகபட்ச ஏமாற்றத்தை தருவதாக கூறுகிறார் மனீஷா.

ஒரு தொழில்முனைவராகவும், தலைவராகவும் மனீஷா சந்திக்கும் மற்றொரு சவால், ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சமமாக்குவது. “நிறைய பணியிடங்களில் பார்த்திருப்போம், குறிப்பாக, ஆரம்பகட்ட தொழில் நிறுவனங்களில், ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துவார்கள். பல நிறுவனங்கள் ஆண்களால் தலைமை தாங்கப்படுகின்றன, மற்றும், பெண்களுக்கு மற்ற பெண் தலைவர்களிடம் இருந்து ஆதரவு இருப்பதில்லை", இதுவே இதற்கு அடிப்படைக் காரணம் என நான் உணர்கிறேன். லாஜிநெக்ஸ்டில், நாங்கள் , எங்களுடைய குழுவின் பெண் உறுப்பினர்களை நாளைய டீம் லீடர்களாகவும், பின்னர் அவர்களே சொந்தமாக தொழில் முனைவதை பார்க்கவும் விரும்புகிறோம்” என்று கூறுகிறார்.

எனினும், மற்றவர்கள் தன்னை ஒரு சுயநலமான, ஆதிக்கம் செலுத்துகிற, கோபக்கார பெண் என்ற எண்ணம் கொள்ளாமல் தன்னை விடாமுயற்ச்சி கொண்ட முனைப்பான தலைவர் என்று ஒப்புக்கொள்ள வைப்பதே மிகப் பெரிய சவால் என்கிறார் மனிஷா. “நான் முத்திரை எதுவும் இல்லாதவள், மேலும், என்னை அகங்காரம் உள்ள தலைவராக பாராமல் நல்ல ஒரு தலைமை அதிகாரியாக பார்த்து ஏற்றுக்கொண்ட ஒரு சிறந்த குழு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது”, என்கிறார்.

முதல் இடத்திலேயே இருப்பது

தொழில்நுட்பத்தையும், தயாரிப்புகளையும் துறையாக கொண்டதால், புதுமையிலும் விடாமுயற்சியிலும் தீவிரமாக கவன ம் செலுத்துகிறார் மனீஷா. அவரது குழு, தங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக் கொண்டு, பணி ரீதியாக மட்டுமே இல்லாமல், சுயமாகவும் முன்னேற வேண்டும் என்பது தான் மனீஷாவின் குறிக்கோள்.

“ உலக அளவில் சிறந்த தொழில்நுட்ப திறமைசாலிகளை பணியமர்த்த திட்டமிட்டிருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி, தொழில் தொடங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. நாங்களும், சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியதால், இது போன்ற திறமைகளுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது”, என தொடர்கிறார். மனிஷாவிற்கு, தான் தரவுகளை கொண்டு உருவாக்கும் மாயம் பிடித்திருக்கிறது. அது தன்னை எப்போதுமே தயாராக வைத்திருப்பதாக உணர்கிறார். மனீஷாவின் குடும்பத்தினரும், அவருடைய தொழில் முனைவுக்கு பெரும் ஆதரவாக உள்ளனர்.

“ தி த்ரீ வைஸ் மென், ( இணை நிறுவனர்-த்ருவில் சாங்வி, முதலீட்டாளர்- சஞ்சய் மேத்தா, அறிவரையாளர்- மார்க் டீசாண்டிஸ்), இந்த விளையாட்டில் நான் எப்போதும் முதன்மை வகிப்பதை,தொடர்ந்து உறுதி செய்து கொண்டே இருப்பார்கள். இந்த ஒரு வருட ரோலர் கோஸ்டர் பயணத்தின் ஒவ்வொரு மைல் கல்லிலும் என்னுடைய நம்பிக்கை வளர்ந்துக் கொண்டே இருந்தது”, என்று தன்னை ஊக்குவிப்பவர்களைப் பற்றி சொல்கிறார்.

மனீஷாவின், இன்றைய, நாளைய திட்டம் ஒன்றே தான். இந்தியா மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் லாஜிஸ்டிக்ஸையும், பொருள் வழங்கும் அமைப்பையும் மாற்றி அமைப்பது தான் அவருடைய எண்ணம்.

“ ஒரு தொழில்நுட்பவாதியாக இருந்து கொண்டு, தரவுகள் வாழ்க்கையையே மாற்றுபவதாக அமையும் என்று நம்பவும், நிரூபிக்கவும் எங்களால் முடியும். இன்னும் சில காலத்தில், உலகில், பணிகள் பாதுகாப்பாய், நிறைய திறனுடனும், கணிக்கக் கூடிய வகையில் செய்யப்படுவதை பார்ப்போம். உலகம் முழுவதும் உள்ள லாஜிஸ்டிக்ஸ் தேவைகளை, பூர்த்தி செய்யும், ஒரே நிறுவனமாய், லாஜிநெக்ஸ்டை ஆக்குவது தான் எங்கள் திட்டம்” என்கிறார் மனீஷா, இறுதியாக...