வால்மார்ட்டில் இருந்து நகர்புற விவசாயம் :ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதீக் திவாரியின் 'தி லிவிங் கிரீன்ஸ்' பயணம்

0

ஜெய்ப்பூர் நகரத்தின் மேல் ஒரு பறவையைப் போல நீங்கள் பறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்குக் கீழே வளைவு நெளிவான தெருக்களும், குன்றுகளும், சுற்றிச் சுழன்று நகரின் மையப்பகுதியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். நீர்நிலைகள், கம்பீரமான அரண்மனைகள் மற்றும் ஒட்டுப்போட்ட மஞ்சள் மேற்கூரைகள் உங்கள் கண்ணில்படும்.

இந்தக் காட்சியில் கொஞ்சம் பசுமை சேர்க்க விரும்பினார் பிரதீக் திவாரி. 2013ல்தான் அவருக்கு இந்த எண்ணம் வந்தது. நகர்ப்புற வீடுகளின் மேல்தளத்தில் காய்கறி, பழங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைச் செடிகளை வளர்க்க முடிவு செய்தார்.

தி லிவிங் கிரீன்ஸ் (The Living Greens) நிறுவனத்தை உருவாக்கினார். நகர்ப்புற தோட்டக்கலையில் இந்த நிறுவனம்தான் இப்போது இந்தியாவிலேயே முன்னணி நிறுவனம்.

“உங்களுக்குத் தேவையான காய்கறிகளை நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் என்று பல நகரங்களில் உள்ள எத்தனையோ நிறுவனங்கள் போதிக்கின்றன. ஆனால் இந்தத் துறையில் லாபகரமாக இயங்கும் நிறுவனம் எங்களுடையதுதான்” என்கிறார் பிரதீக். “2002ல் இயற்கை விவசாயம் செய்து கொண்டிருந்தேன். அப்போது நேரடியாக விவசாயிகளோடு வேலை செய்தேன். மூன்று வருடத்திற்குப் பிறகு நான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன். அவர்களால் 100 சதவீதம் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள முடியவில்லை. காரணம் அவர்களைச் சுற்றி கெமிக்கல் உரங்கள்தான். இதனால் பயிர்களை அழிக்கும் பூச்சிகள் நிறைந்து அவர்களது நிலங்கள் பாழாயின.” என்கிறார்.

இந்தச் சூழ்நிலை, அந்த வேலையை விட்டு விட வேண்டிய நிர்ப்பந்தத்தை பிரதீக்கிற்கு ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் மோசமான உணவுப் பழக்கத்தால், புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள். ஒரு குறுகிய காலத்தில் அவர் இத்தகைய பல இழப்பை சந்திக்க நேர்ந்தது.

அப்போதும் அவர் வால்மார்ட்டில் வெற்றிகரமாகப் பணியாற்றிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் உணவுப் பொருட்களைத் தரமாக உற்பத்தி செய்வதற்கு ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரை அரித்துக் கொண்டே இருந்தது. “எனக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருந்தன. ஒன்று எனது வேலையிலேயே பாதுகாப்பாக இருந்து கொண்டு, உலகம் எப்படியோ போகட்டும் என்று விட்டு விடுவது அல்லது அதற்கு ஏதாவது செய்வது.” என்கிறார் பிரதீக். ஒரு சிலரிடம் கருத்துக் கேட்ட பிறகு, அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்ட விஷயங்களை இணைத்துப் பார்த்த போது இயற்கை விவசாய வர்த்தகத்திற்கு ஏற்ற இடம் நகர்ப்புறம்தான் என்று பட்டது. ஜெய்ப்பூரில், தரம் குறைந்த பழங்களும் காய்கறிகளும்தான் கிடைக்கிறது என்பதை மட்டுமல்ல, அங்கு ஏராளமான மொட்டை மாடிகள் பயன்படுத்தப்படாமல் காலியாக இருப்பதையும் அறிந்தார் பிரதீக். வசதியான வால்மார்ட் வேலையை விட்டு விட்டு, இயற்கை விவசாயத்திற்கே திரும்பினார்.

தி லிவிங் கிரீன்ஸ் இப்போது டெல்லி, இந்தூர் மற்றும் ஜோத்பூரில் தனது கிளைகளை திறந்திருக்கிறது. அந்தக் கிளைகள், அதிக அடர்த்தியுடைய பாலித்தீன், செங்குத்தான தோட்டங்கள் என பல வித்தியாசமான பசுமை வீடுகளை தந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பசுமை வீடுகளுக்காக தி லிவிங் கிரீன்ஸ் நிறுவனம், மண் சாரா வழி ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அது காய்ந்த மண்ணை விட மிகவும் எடை குறைந்தது. அதில் என்ரிச்சிங் பவுடர் எனப்படும் மேம்படுத்தப்பட்ட பவுடர் ஒன்றை சிறிய அளவில் சேர்க்க, அது பயிரின் கருவுறும் திறனை அதிகரிக்கிறது. செங்குத்து தோட்டங்களைப் பொருத்தவரையில் அதற்கு மண்ணே தேவை இல்லை. ஆனால் பயிர் நன்கு வளரும். ஏனெனில் இதற்கென்றே தி லிவிங் கிரீன்ஸ் சிறப்பு கண்டெயினர்களை தயாரித்திருக்கிறது. அந்த கொள்கலன்கள் பயிருக்குத் தேவையான தண்ணீரை தொடர்ச்சியாக சுழற்சி முறையில் வழங்குவதற்கான அமைப்பைப் பெற்றுள்ளன.

“எங்களது ஒவ்வொரு கண்டுபிடிப்புமே படிப்படியான ஆராய்ச்சிகளின் மூலம் வந்தவை” என்கிறார் பிரதீக். “எங்களுடைய பொருட்களை எங்கே அனுப்பினாலும் அவை நன்றாக வேலை செய்யும். காரணம் அதில் ஒரு சின்னப் பிரச்சனை கூட வராத அளவிற்கு நாங்கள் அதை வடிவமைத்திருக்கிறோம்.” என்று அவர் விளக்குகிறார். மேலும் அந்தப் பொருட்கள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் மற்றும் பொருட்களைப் பராமரிப்பதற்கென்று மாதம் ஒன்றிற்கு 1000-1500 ரூபாய் வரையில் கட்டணம் வசூலிப்பதாகவும் பிரதீக் சொல்கிறார். மற்றொரு விஷயம் “நாங்கள் ஒரு வாடிக்கையாளருக்கு எங்களது பொருட்களை விற்கச் செல்லும் போதே அந்த இடத்தின் தட்ப வெப்ப நிலைபற்றி அறிந்து கொள்கிறோம். அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நாங்கள் ஆலோசனைகளை வழங்குகிறோம். எனினும் பெரும்பாலான இடங்களில் அவர்களே காய்கறிகளை எப்படி வளர்ப்பது என்று தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள்.” என்கிறார் அவர்.

அடுத்த நிதி ஆண்டில் உள்ளூரில் உள்ள வியாபாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து மேலும் 10 நகரங்களில் கிளைகளை திறக்க தி லிவிங் கிரீன்ஸ் தற்போது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. “இளைஞர்களிடமிருந்து எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அவர்கள் தாங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்க விரும்பவில்லை என்றும் தங்களது சொந்த ஊரில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்பதால் இந்த யோசனையை விரும்புவதாகவும் சொல்கிறார்கள்.” இந்த மாதிரியான விரிவாக்கத்தில், தி லிவிங் கிரீன்ஸ் அதன் மூன்றாவது சுற்று நிதி திரட்டலை தனது இயக்குனர்களிடமிருந்தே ஆரம்பித்து விடும்.

19 பேர் கொண்ட குழு ஆய்வுகள் நடத்திக் கொண்டே இருக்கிறது. "செங்குத்து தோட்டங்களில் காய்கறிகளை விளைவிப்பதற்கு எங்களால் முடிகிறது. அதனால்தான் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களால் கூட அவர்களுக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்க முடிகிறது. அதே போல மேற்கூரையில் காய்கறி அல்லது புல் வளர்ப்பிற்கு எங்களுக்கென ஒரு தனித் தொழில் நுட்பத்தை வைத்திருக்கிறோம். கடைசியாக, கழிவுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தாங்களே இயற்கை உரத்தைத் தயாரிப்பதற்கான உத்தியையும் கண்டுபிடித்திருக்கிறோம்." என்று விளக்குகிறார் பிரதீக். இந்தத் துறையில் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு வழிகாட்டவும் செய்கிறார் பிரதீக். “நகர்ப்புற தோட்டங்கள் அமைப்பதில் நிறைய இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதைப் பார்க்கிறேன். இது ஒரு புதுமையான அதே சமயத்தில் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய ஒரு தொழில் என்ற எண்ணம் எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.” என்கிறார் அவர்.

பசுமை வழி செல்ல... தகவலுக்கு: http://thelivinggreens.com/